90% பேரை ஃபெயில் ஆக்கியதாக போராடும் மாணவர்கள்.. சர்ச்சையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!

கோவை மருதமலை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பிரிவில் 12 பட்டப்படிப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 29 இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன. மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் மூலம் அரியர் எழுத்துத் தேர்வும், செப்டம்பரில் நேரடி முறையில் செய்முறைத் தேர்வும் நடைபெற்றது.

இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி பல்கலைக்கழகத்தின் தரப்பில் வெளியான தேர்வின் முடிவில் 90% மாணவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியதாகக் கூறி தோல்வி அடையச் செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு மாணவர்கள் தரப்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் கூறுகையில், ” அரியர் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று அட்டெம்ப்ட் கொடுப்பார்கள். ஆனால், 2019-க்கு பிறகு கடந்த ஜூலை மாதம் தான் 4 செமஸ்டர்களுக்கு சேர்த்து அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. தேர்வு எழுதிய 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 4500-க்கும் மேற்பட்டவர்கள் ஃபெயில் ஆகியதாக முடிவுகள் வெளியாகின. தோராயமாக, 90% மாணவர்கள். தோல்வி அடைந்ததற்கான காரணமாக, முறைகேட்டில் ஈடுபட்டதாக(Malpractice) தெரிவித்து இருக்கிறார்கள்.

தேர்வு எழுத பயன்படுத்திய செயலி குறித்து நடத்தப்பட்ட சந்திப்பில், முறைகேடோ அல்லது தவறோ செய்தால் முதல் முறை எச்சரிக்கை வரும், மூன்றாவது முறை எச்சரிக்கை வந்தால் தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவார் எனக் கூறினர். ஆனால், இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதிய போது யாருக்கும் எச்சரிக்கையோ அல்லது தேர்வில் இருந்து வெளியேற்றவோ செய்யவில்லை. அப்படி இருக்கையில், இவ்வளவு பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட முடியும். தேர்வு நடத்தப்பட்ட EFH செயலியில் தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கிறது. நாங்கள் ஆன்லைன் முறை தேர்வை கேட்கவும் இல்லை.

மதிப்பெண் வெளியிட்டதை பார்க்கையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் தரவுகளை தொலைத்த காரணத்தினால் இப்படி செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் உள்ளது.

தேர்வு முடிவில் 92 பக்கங்களில் 10 பக்கங்களில் உள்ள மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதையும், மீதமுள்ள பக்கங்கள் அனைத்தும் தேர்ச்சி பெறவில்லை என்றுள்ளதை பார்க்கலாம். அதுமட்டுமின்றி, தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்றும், அது தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இடம்பெற்று இருக்கிறது.

லிங்க் : APAC,KALAVAI (AGRI) 2013-17 , APHC,KALAVAI (HORTI) 2014-17

செய்முறை தேர்வு நேரடியாக மண்டல மையங்களில் நடைபெற்றவை. அதிலும், தேர்ச்சி பெறவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் பிரிவிற்கு 1500க்கும் மேற்பட்ட அழைப்பு மூலம் தெரிவித்து இருந்தோம். பின்னர், செய்முறை தேர்வு மதிப்பெண்கள் திரும்ப அளிப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளனர்.

போராட்டத்தின் முதல் நாளன்று, பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்களின் கோரிக்கைகளை மட்டும் கேட்டுக் கொண்டனர். ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவிக்கவில்லை. மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுமாறு தெரிவித்து உள்ளனர். மேலும், புதிதாக வைப்பதாக கூறிய தேர்வில் ஒரே நாளில் 3-4 அரியர் தேர்வுகள் நடக்கும் எனக் கூறியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவு குறித்து முழுமையான விசாரணை அமைக்கப்பட வேண்டும். இதற்காக இந்திய மாணவர் சங்கம் உதவுவதாகக் கூறியுள்ளனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் ” எனக் கூறி இருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலரிடம் பேசுகையில், ” போராட்டம் நடைபெறவில்லை. அன்று போராட்டம் நடைபெற்ற போது டீன் கமிட்டி மாணவர்களிடம் பேசினார்கள், அவர்கள் சமாதானப்படுத்தப்பட்ட பிறகு கிளம்பி சென்று விட்டனர். மீண்டும் தேர்வு நடத்தப்படும். அரியர் தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகம் கண்டுபிடித்தே ஃபெயில் செய்துள்ளனர் ” எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் அரியர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியை தழுவியது வேண்டுமென்றே செய்ததாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அரசு கவனத்தை பெறவும் முயற்சித்து வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader