மின்வாரிய ஊழியர் இறந்து 16 ஆண்டுகளாகியும் வாரிசுக்கு அளிக்கப்படாத பணி.. முதல்வர் உதவுவாரா ?

மின்வாரிய ஊழியர் இறந்து 16 ஆண்டுகளாகியும் வாரிசுதாருக்கு பணி வழங்காமல் தமிழ்நாடு மின்சார வாரியம் மறுத்து வருகிறது. கண் பார்வையற்ற தாயின் இத்தனை ஆண்டுகால கோரிக்கையை அரசும் நிராகரித்து உள்ளது. 

துரை ஆறுமுகம் என்பவர் நவம்பர் 26ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், தனது தந்தை ஆறுமுகம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்தார். அவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி பணியின் போது மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததை கூறுகிறார்.

அதனை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பணி வழங்க கோரி பார்வை திறன் அற்ற தனது தாய் விண்ணபித்ததையும், அதன் பிறகு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட முழு நிகழ்வை பற்றி குறிப்பிடுகிறார். அந்த வீடியோவினை நம்முடன் பகிர்ந்தத்துடன், இது குறித்த ஆவணங்களை அனுப்பி வைத்தார். 

தமிழ்நாடு மின் வாரியத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்த ஆறுமுகம் என்பவர் 2006, ஏப்ரல் 5ம் தேதி பணியின் போது மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அதனை தொடர்ந்து ஆறுமுகம் குடும்பத்தார் வாரிசு சான்றிதழை 2006, மே 25ம் தேதி பெற்றுள்ளனர். 

அந்த வாரிசு சான்றிதழின்படி, ஆறுமுகத்தின் மனைவியான செந்தாமரை செல்விக்கு 31 வயது. ஆறுமுகத்திற்கு துரைமுருகன், விஜயகுமார் என இரண்டு மகன்களும், இந்துமதி என்ற மகளும் இருந்துள்ளார். அவர்களின் வயது முறையே 13, 9 மற்றும் 7.

இதனை தொடர்ந்து, 2009 பிப்ரவரி 18ம் தேதி செந்தாமரை செல்வி வாரிசு அடிப்படையில் வேலைக்கான விண்ணப்பம் தனக்கு வழங்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மனு அளித்துள்ளார். அன்றைய தேதியில் வாரிசுதாரர்களுக்கு 18 வயது நிரம்பாத காரணத்தினால் அவர்களுக்கு பணி கோர முடியவில்லை.

இந்நிலையில் ” செந்தாமரை செல்வி தனக்கு கண் பார்வை இல்லாததாலும், கல்வியறிவு இல்லாததாலும் மேற்கொண்டு வேலை வேண்டி எந்த முயற்சியும் செய்ய இயலவில்லை. நாங்கள் அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர் ” என வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறுமுகத்தின் மூத்த மகன் துரைமுருகனுக்கு வேலை வேண்டி மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், துரைமுருகனுக்கு 21 வயது நிறைவடைந்து 2 மாதங்கள் ஆனதினால் அவரது மனுவினை ஏற்று கொள்ள முடியாது என மின் வாரியம் பதில் அளித்துள்ளது. வாரிசு அடிப்படையில் வேலை கோருபவரின் வயது 18 நிரம்பியதில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டும். இதனை எதிர்த்து துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2015, ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2018ம் ஆண்டு ஆறுமுகத்தின் இரண்டாவது மகனான விஜயகுமாருக்கு வேலை வேண்டி மின் வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுகையில் உள்ள வழக்கினை திரும்ப பெற்றுவிட்டு, விஜயகுமாருக்கு வேலை வழங்குவதில் துரைமுருகனுக்கு ஆட்சேபனை இல்லை என கடிதம் அளித்தால் வாரிசு வேலை குறித்து பரிசீலிப்பதாக மின் வாரியத்திலிருந்து கடிதம் வரப்பெற்றுள்ளது. இதனையடுத்து 2018, ஜூன் மாதம் துரைமுருகன் வழக்கினை திரும்ப பெற்றுள்ளார். 

ஆனால், துரைமுருகன் 3 வருட காலக்கெடுவிற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்காததால் வாரிசு வேலை பெற தகுதி அற்றவர் என மின்வாரியம் கடிதத்தின் மூலம் கூறியுள்ளது. மேலும், விஜயகுமாருக்கு வாரிய விதிமுறைகளின் படி வாரிசு வேலை அளிக்க இயலாது என்றும் மின்வாரியம் 2021 ஜூலை மாதம் செந்தாமரை செல்விக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பணியின் போது கம்பத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த மின்வாரிய தொழிலாளியின் உயிர் தியாகத்திற்கும், கண் பார்வையற்ற அந்த தாயின் 16 ஆண்டு காலப் போராட்டத்திற்கும் எவ்வித தீர்வும் எட்டப்படாமல் உள்ளது.

தற்போது துரைமுருகன் தனது தம்பி விஜயகுமாருக்கு அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப தமிழ்நாடு மின் வாரியத்தில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். அரசு தலையிட்டு உரிய நீதி வழங்கும் என நம்புவோம்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader