
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிரமாதமான தமிழ்நாடு அரசின் இளைஞர் கொள்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் இலக்குகள், அம்சங்களை ஒரு முறை படித்துப் பார்த்தால், அப்படியே கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளத் தோன்றும். அந்த அளவுக்கு, ஆகா ஓகோ ரகம்!
ஆனால், என்ன…
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அந்தக் கொள்கையின் இலக்கு ஆண்டான 2023-ம் வந்தேவிட்டது. ஆட்சியும் மாறிவிட்டது ! ஆனால், ஒன்றும் நிறைவேறவில்லை.
பாஜக ஒருபுறம் வேலைவாய்ப்பு குவியும் என அடித்துச் சொல்ல அதுவும் நடந்தபாடில்லை . திமுக வந்த பின் காட்சி மாறும் என சொல்லப்பட்டது. மாறியதா ?
நம்முடைய மாநிலத்தில் ஆண்டுதோறும் அரசுத் துறை வேலைவாய்ப்புகளுக்காக, பதிவுசெய்து காத்திருப்போர் எண்ணிக்கை தெரியுமா ?
கடந்த ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இவர்களில் 31,49,398 பேர் ஆண்கள்; 36,09,027 பேர் பெண்கள்; 273 பேர் திருநர். இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேரைத் தவிர்த்துவிடலாம்.
19 வயது முதல் 30 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேரும், 31 வயது முதல் 45 வயது வரை உள்ள 18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேரும் அரசு வேலைவாய்ப்புக்காகப் பதிவுசெய்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
46 – 60 வயதுப் பிரிவினர் 2,30,185 பேரும், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் 5, 734 பேரும், இன்னும் அரசு வேலைக்கான காத்திருப்பில் இருக்கின்றனர் என்பது தான் கூடுதல் அதிர்ச்சி
பத்தாம் வகுப்பு 50.82 இலட்சம் பேர்
கல்வித்தகுதியைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பை தகுதியாகப் பதிவு செய்திருப்பவர்கள் 50 லட்சத்து 82 ஆயிரத்து 712 பேர். இளநிலை ஆசிரியப் பட்டதாரிகள் 3 லட்சத்து 37 ஆயிரத்து 244 பேர், முதுநிலை ஆசிரியப் பட்டதாரிகள் 2 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் வேலைக்காகப் பதிவுசெய்துள்ளனர்.
இது, தமிழ்நாட்டு அரசின் வேலைவாய்ப்புத் துறை அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்.
பத்தாம் வகுப்பு தகுதியைக் கொண்டு, வேலைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இந்தப் பிரிவினருக்கான பெரிய வாய்ப்பு, தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களே!
4ஆம் தொகுதிக்குள் கிராம நிர்வாக அதிகாரி
இளநிலை உதவியாளர் (JUNIOR ASSISTANT) எனும் இந்தப் பணிக்கான போட்டித்தேர்வில் வெல்பவர்களுக்கு, அவரவர் பெற்ற மதிப்பெண்படி, பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
முன்னர், தனியாக நடத்தப்பட்டுவந்த கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணிக்கான தேர்வும், இளநிலை உதவியாளர் தேர்வுடன் சேர்க்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதியன்று, 7,301 நான்காம் தொகுதி இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்கான தேர்வு என்பது ஒரே முறை எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டால் போதும், வேலை கிடைத்துவிடும் என்கிற நிலையில், 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.
20 ஆயிரம் சதவீதம்
ஆமாம், ஏழாயிரத்து சொச்சம் இடங்களுக்கு 200 மடங்கு அளவு எண்ணிக்கையில் போட்டியிடுகிறார்கள். சதவீதக் கணக்கில், இருபதாயிரம் சதவீதம் பேர் போட்டி என்றால், அரசு வேலைக்கான காத்திருப்பும் போட்டியும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஆக…
இந்த இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. 2022 அக்டோபரில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) ஆண்டுத் திட்டத்தில் முன்னரே அறிவிக்கப்பட்டும் இருந்தது. அதன்படி முடிவுகள் வந்துவிடும் எனக் காத்திருந்தனர்.
இழுத்தடிப்பு ஆரம்பம்
போட்டியாளர்களின் எதிர்பார்ப்புக்கு பாதகமாக வழக்கு ஒன்று குறுக்கே வந்ததால், முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதையொட்டிய சிக்கலைச் சரிசெய்து தேர்வாணையத்தின் தரப்பில், இன்னொரு தேர்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதைப்போலவே இளநிலை உதவியாளர் தேர்வு முடிவும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நவம்பர் ஆனது, டிசம்பர் போனது, 2023ஆம் ஆண்டு ஜனவரியும் வந்து போய்விட்டது. இதுவரை 7,301 இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு இழுத்தடிக்கப்படுகிறது.
சரி, இதுதான் இழுத்தடிப்பாக இருக்கிறதே என்றால், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட- 2023ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுப் பட்டியலிலும், இந்தப் பிரிவினருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது.
இந்த ஆண்டில் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வே இல்லை என்பதுதான், அந்த அதிர்ச்சி!
தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர ஆண்டுத்திட்டப்படி, இளநிலை உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வரும் நவம்பரில் வெளியிடப்படும் என்றும், அடுத்த ஆண்டு 2024-ல்தான் இதற்கான தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டது, பத்தாம் வகுப்புத் தகுதிகொண்ட இளைஞர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான வி.சி.க., இடதுசாரி கட்சிகளின் தலைவர்களேகூட இதையொட்டி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
திருமா சுட்டிய அதிர்ச்சித் தகவல்
குறிப்பாக, வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்னும் ஒரு படி மேலே போய், “ ஆளுநர் உரையில், அரசுப்பணிகளில் 10,402 பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தெரியவருகிறது. ” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தார் .
அதாவது, ஆண்டுதோறும் தமிழ்நாட்டு அரசின் அனைத்து துறைகளிலும் ஓய்வுபெறுவோரைக் கணக்கிட்டு எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என மாநில மனிதவளத் துறைக்கு தகவல் அனுப்பவேண்டும். அதை வைத்து, எந்தெந்தத் துறைகளில் எத்தனை பேரை நிரப்பவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படும். இதிலும் தொய்வு!
தமிழ்நாட்டின் தேர்வாணையத்துக்கு ஒரு தலைவரும், பதினான்கு உறுப்பினர்களும் இருக்க அரசமைப்பு சாசனம் அனுமதி வழங்குகிறது. ஆம், இது அரசமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பதவி!
தலைவர் இல்லாத தேர்வாணையம்
ஆனாலும் ஆணையத்தில் இப்போது இருப்பதோ, பொறுப்புத்தலைவர் உள்பட ஆறு உறுப்பினர்கள் மட்டுமே!
இவர்களில் இரண்டு பேர், 2017ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்கள்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட வகையின ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2021 ஜூலை 14ஆம் தேதியன்று, முனைவர் அருள்மதி உறுப்பினராக ஆக்கப்பட்டார்; இவரின் தந்தை, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன்.
மறுநாள் 15ஆம் தேதியன்று சென்னைப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜோதி சிவஞானம், பாதிரியார் ஆரோக்கியராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.
16ஆம் தேதியன்று, ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி முனியநாதன் இன்னொரு உறுப்பினராக அமர்த்தப்பட்டார். கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் இவரே பொறுப்புத்தலைவராகவும் செயல்பட்டுவருகிறார்.
உதயச்சந்திரனின் ஆளுகை
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இதே தேர்வாணையத்தில், அப்போதைய தலைவர் மீதும் பல உறுப்பினர்கள் மீதும் முறைகேடுக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்வாணையத்தின் பல சீர்கேடுகளை ஒழுங்குபடுத்தியவர் அப்போது செயலாளராக இருந்த இ.ஆ.ப. அதிகாரி உதயச்சந்திரன்.
தேர்வாணையச் செயலாளர் பதவியில் அதிகபட்சமாக என்னென்ன செய்யமுடியுமோ, அவற்றையெல்லாம் செய்தார். கணினிவழி விண்ணப்பம், தேர்வுகள் போன்றவற்றை குறுகிய காலத்தில், நவீன நுட்ப முறைகளுக்குள் கொண்டுவந்தார்.
தேர்வுத்தாள்களைத் திருத்துவதில்தான் இங்கு பெரும் மோசடிகள்; அவர் கொண்டுவந்த நவீன திருத்தும் முறையில் பெருமளவிலான முறைகேடுகளுக்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டன.
அவர் இன்றைக்கு முதலமைச்சரின் முதன்மைச் செயலராக இருக்கும்நிலையிலும் தொய்வுகள் தொடர்கின்றன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க வாக்குறுதிகளில் 187ஆவதாக, “தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்காகப் பதிவுசெய்து காத்திருக்கும் போது, அவர்களுக்கான நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவை அறிவிப்பதில், ‘திராவிட’ ஆட்சியில் யார் சிக்கலை உண்டாக்குகிறார்கள் ?
காரணம் எதுவாக இருந்தாலும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு அல்லவா அதிருப்தியையும் கெட்ட பெயரையும் ஏற்படுத்தும் ?
விரைவில் சரிசெய்யப்படுமா, நான்காம் தொகுதி(குரூப் 4) பணியிட விவகாரம் ?
– இர. இரா.தமிழ்க்கனல்– பத்திரிகையாளர், ஆட்சியியல் திறனாய்வாளர்
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.