குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் : நாளை தேர்வு, இன்று வழக்கு.. குமுறும் தேர்வாளர்கள் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தேர்வாளர்கள், நாளை முதன்மை தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போதுவரை தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசியைச் சேர்ந்த தேர்வாளர் செல்வ ராம ரத்னம் கூறுகையில், ” தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது. 3.1.2021 நடந்த தேர்வில் 200 கேள்விகளில் 60 கேள்விகளுக்கு மேல் தவறுதலாக கேட்டிருந்தார்கள். இதில் திராவிட கொள்கைகள் சார்ந்து, பெரியார் பற்றியக் கேள்விகளும் என 20க்கும் மேற்பட்ட கேள்விகள் அதுவும் தவறு என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்வுகளின் விடைகளும் யுபிஎஸ்சி போன்று சரியாக வெளியிடுவதும் இல்லை. கட்-ஆப் மதிப்பெண் பட்டியலும் யாருக்கும் தெரிவிப்பதில்லை. இவர்கள் செய்த தவறுகளை மறைக்க எக்ஸ்பர்ட் கமிட்டி ஒன்றை போலியாக உருவாக்கி அவர்கள் சொல்வதுதான் சரி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் எக்ஸ்பர்ட் கமிட்டியின் முடிவே இறுதியானது அதில் தலையிட முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். இவர்களின் தவறுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் 73க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தோம். 4.1.2022 அன்று நீதிமன்றம் எங்களை முதன்மை தேர்வு எழுதவும், சான்றிதழ் அப்லோடு செய்ய அனுமதித்தது. ஆனால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் எங்களுக்கான அனுமதியை மறுத்து எங்களது கனவுகளை புதைத்து விட்டது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2.3.2022 வந்தது. அதில் எங்களது கனவுகள் முழுவதும் புதைக்கப்பட்டது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அதிகாரமும், பணபலமும் எங்களது கனவுகளை இடம் தெரியாமல் காணாமல் போகச் செய்தது. நாளை தேர்வு வைத்துவிட்டு இன்று மதியம் 2.30 க்கு வழக்கை மீண்டும் நீதிபதி மாற்றிவிட்டார். நான் தற்போது நீதிமன்றத்தில் தான் இருக்கிறேன். எங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்காது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

4.3.2022 குரூப்-1 முதன்மை தேர்வு நடக்க இருக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, அதிகார வர்க்கத்தால் நாங்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். குரூப்-1 பதவி என்றாலே அரசியல்வாதிகளின் சொந்தக்காரர்களுக்கும், உயரதிகாரிகளின் பிள்ளைகளுக்கும்தான் என்ற நிலை உருவாகிவிட்டது . டிஎன்பிஎஸ்சி 2020-2022 குரூப் 1 தேர்வின் மெகா குளறுபடி முழு ஆதாரத்தையும் அளித்து விட்டோம்.

இதேபோல், 2019 ஆம் ஆண்டில் கூட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வின் மாதிரி விடைத்தாளில் இருந்த விடைகள் தவறு என விக்னேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் எக்ஸ்பர்ட் கமிட்டி ஒன்றை அமைத்து அறிக்கையை வெளியில் விடவில்லை. அதுமட்டுமின்றி, மதிப்பெண் வழங்கி இருந்தாலும் கூட அந்த தேர்வாளரையும் தகுதி இல்லை எனக் கூறி டிஎன்பிஎஸ்சி நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தரப்பின் கருத்தைக் கேட்ட தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், எந்த அழைப்பு எடுக்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதையும் இணைகிறோம்.

டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு பிறகு வெளியிடப்படும் மாதிரி விடைத்தாள்களில் பல கேள்விகளுக்கு தவறான பதில்கள் இருப்பதும், அதற்கு எதிராக தேர்வாளர்கள் வழக்கு தொடர்வதும் தொடர் கதையாகி இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் அரசு அதிகாரிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பு இவ்வளவு குளறுபடிகளில் இருப்பதும், அதற்காக தொடர்ந்து நீதிமன்ற வாசலை தட்டுவதும் வேதனைக்குரியது. இப்படி குளறுபடிகள் கொண்ட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மீது தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Link : 

https://drive.google.com/drive/folders/1VchJSrs9hnJtbQrSeGfoWXaOOjOA5C_u?usp=sharing

https://drive.google.com/drive/folders/1-6b1zv16kwnFPX6bv29dC5AH8kFk43CT?usp=sharing

Please complete the required fields.
Back to top button