This article is from Sep 29, 2019

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தமிழ் தாள் நீக்கமும், டிஎன்பிஎஸ்சி விளக்கமும் !

மிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகரித்து வருவது பல்வேறு போராட்டங்களையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களே வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசியல் கட்சியினர், இயக்கங்கள், மக்கள் என பலரும் முன்னிறுத்தி வருகின்றனர்.

மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளிலும் வெளிமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பறிபோவதாக கண்டனங்கள் எழுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் தமிழ் மொழித்தாள் நீக்கப்பட்டதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்பு குரூப்-2 தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுக்கென 150 மதிப்பெண்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் சரியான விடையை தேர்வு செய்யும் முறையில் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் இருந்த தேர்வின் கேள்விகளிலும், பாடத்திட்டத்திலும் சில மாற்றங்களை செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்-2 தேர்வுக்கான பாடத்திட்டத்தை காணுகையில், முதல்நிலைத் தேர்வில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற பகுதி நீக்கப்பட்டு 300 மதிப்பெண்களில் பொது அறிவுக்கு 175 வினாக்களும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவு என்ற பிரிவிற்கு 25 வினாக்களும் அளிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் சங்ககாலம் முதல் இக்காலம் வரை என்ற பகுதி இணைக்கப்பட்டும், திருக்குறள், தமிழகத்தின் சமூக நீதி வரலாறு, தமிழகம் குறித்த கேள்விகளும் இடம்பெற்று உள்ளன.

இதற்கு அடுத்ததாக, பிரதானத் தேர்வில்(Mains) பொது தமிழும், பொது ஆங்கிலமும் சேர்க்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது. பிரதான தேர்வின் கேள்விகளை எடுத்துக் கொண்டால், பகுதி ” அ ” -ல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யப்படும் இரு பிரிவு வினாக்களுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அதையடுத்து, சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன் உள்ளிட்ட கேள்வி பிரிவுகளை கொண்ட பகுதி ” ஆ ” -ல் 200 மதிப்பெண்கள் உள்ளன. இந்த பகுதி தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

முதல்நிலை தேர்வில் பொது தமிழ் பிரிவை நீக்கி விட்டு, பொது அறிவு கேள்விகளை அதிகரித்து இருப்பதால் தமிழே தெரியவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கேள்விகளும், கண்டனங்களும் அரசியல் கட்சிகளால் எழுந்தன. தமிழ் மொழி மூலம் கேட்கப்படும் வினாக்கள் குறைக்கப்பட்டுள்ளன, பொது அறிவில் தோல்வி அடைந்தால் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் மறுப்பு தெரிவித்து வருகின்றது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், தமிழ் தெரிந்தால் மட்டுமே குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உள்ளதாக டிஎன்பிஎஸ்சி கூறுகிறது.

” இதற்கு முன்பாக, முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுக்கு 150 மதிப்பெண்கள், பொது தமிழ் அல்லது ஆங்கிலம் பிரிவிற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற பிரிவில் 70 சதவீதம் பேர் பொது ஆங்கிலத்தை தேர்வு செய்தே தேர்ச்சி பெற்றுள்ளார். மீதமுள்ள 30% பேர் பொது தமிழை தேர்வு செய்து தேர்ச்சி பெற்றவர்கள். இதனால், தமிழ் தெரியாதவர்கள் தமிழை தேர்வு செய்யாமல் தேர்ச்சி பெற்று வந்துள்ளனர். இந்நிலை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.

இப்பொழுது பிரதானத் தேர்வில் மொழிப்பெயர்ப்புத் திறன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டும். பிரதான தேர்வில், மொழிப்பெயர்ப்பில் விரிவாக எழுதும் திறன் சோதிக்கப்படுகிறது. இதனால் தமிழில் விரிவாக எழுதத் தெரியாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது ” என டிஎன்பிஎஸ்சி-யின் செயலர் நந்தகுமார் பிபிசி செய்திக்கு கூறியுள்ளார்.

இதில் விவாதப் பொருளாக இருப்பது, பிரதானத் தேர்வில் உள்ள மொழிப்பெயர்வு வினாக்களான பகுதி ” அ “-வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பகுதி ” ஆ “-க்கு உண்டான பதிலை திருத்துவார்கள். 100 மதிப்பெண்கள் கொண்ட மொழிப்பெயர்வு வினாக்களில் குறைந்தது 25 மதிப்பெண்களை பெற வேண்டும். ஆனால், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யவில்லை என்றால் தேர்ச்சி பெற முடியாது என விவாதித்து வருகின்றன. ஆனால், அதற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

” தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யும் 2 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யும் 2 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வது கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியாக மொழிப்பெயர்வு செய்தால் கூட 50 மதிப்பெண்களை பெறலாம். இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தற்போதுள்ள பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறவே முடியாது ” என்றும்  டிஎன்பிஎஸ்சி-யின் செயலர் விடையளித்து உள்ளார்.

பிரதானத் தேர்வில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாலே முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் பகுதி நீக்கப்பட்டு உள்ளதாகவும், பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கும் தேர்வு என்பதால் குறைந்த அளவாது தமிழ் தெரிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறுகிறது.

எனினும், தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் சர்ச்சையாகி வருவது தொடர்கிறது !

link :

TNPSC Group 2 exam syllabus 

Need to know Tamil to clear TNPSC Group 2: Officials

Please complete the required fields.




Back to top button
loader