தக்காளியில் தவளை கொழுப்பா.. நாம் உட்கொள்வது மரபணு மாற்றப்பட்ட தக்காளியா ? : சீமான் சொல்லும் பொய் !

சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திரு. சீமான் அவர்கள் நாம் உட்கொள்ளும் தக்காளி மரபணு மாற்றப்பட்ட தக்காளி எனவும், அதில் உள்ள விதை முளைக்காது, தக்காளி அழுகாது மேலும் அதில் தவளையின் கொழுப்பு இருப்பதால் தக்காளி கீழே போட்டால் குதிக்கும் என்றும் பேசியிருந்தார்.

இதே போல் முன்பொரு மேடையிலும் இதே கருத்தை கூறியிருந்தார். கூடவே இன்று நாம் உண்ணும் பெரும்பாலான காய்கறிகள் மரபணு மாற்றப்பட்டவை என்றும் கூறியிருந்தார். இவரது கூற்றின் உண்மைத்தன்மை என்ன?

  1. நாம் உட்கொள்ளும் காய்கறிகள் மரபணு மாற்றப்பட்டவையா?

இன்று உலக அளவில் மக்காச்சோளம், கடுகு, அரிசி, புகையிலை, தக்காளி, கத்திரிக்காய் முதலான பல உணவு வகைகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மூலம் கிடைக்கப்பெற்றாலும் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி தவிர வேறு எந்த பயிருக்கும் இதுவரை பொதுப்பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை. இந்தியாவில் Union Environment Ministry கீழ் இயங்கும் அமைப்பான Genetic Engineering Appraisal Committee (GEAC) தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சோதனை செய்து அவற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் உள்ளதா, அதை உட்கொள்ளும் மனிதர்கள், விலங்குகளுக்கு ஒவ்வாமை போன்ற எந்த பின் விளைவும் வராமல் இருக்கிறதா போன்ற சோதனைகளுக்கு பின் அந்த குறிப்பிட்ட பயிருக்கு வணிகத்திற்கான ஒப்புதல் கொடுக்கும். இதுவரை GEAC அமைப்பு Bt cotton என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி, Bt Brinjal எனும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் மற்றும் மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆகிய மூன்றிற்கு மட்டுமே இந்தியாவில் வணிகத்திற்கான அனுமதி அளித்துள்ளது. இவற்றில் பருத்தி மட்டுமே பொதுப்பயன்பாட்டில் உள்ளது. இப்படியிருக்க நாம் சாப்பிடும் புடலங்காய், சுரைக்காய், தக்காளி அனைத்துமே மரபணு மாற்றப்பட்டவை என சீமான் அவர்கள் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

  1. இன்று விளையும் தக்காளிகள் அதிக நாள் கெடாமல் இருப்பது ஏன்?

தக்காளிகள் பொதுவாக மிகக்குறைந்த வெப்பநிலையில் (<12°C) இருக்கும் பொழுது அவற்றில் உள்ள பழுக்க வைக்கும் நொதிகள் செயல் இழந்து தக்காளி விரைவாக பழுப்பதை தடுக்கின்றன. முன்பைக்காட்டிலும் மிகச்சிறந்த சேமிப்பு முறையும், குளிரூட்டப்பட்ட போக்குவரத்துமே இன்று தக்காளிகளியின் வாழ்நாளை அதிகரித்திருக்கின்றதே தவிர இந்தப் பயன் மரபணு மாற்றத்தினால் அல்ல.

  1. தக்காளியில் தவளையின் மரபணுவோ கொழுப்போ இருக்கிறதா?

இந்தியன் படத்தில் ஒரு பாடலில் கஸ்தூரி அவர்கள் ஒரு பேனாவிற்குள் ஒரு வண்டை போட்டு மூடி விடுவார். வண்டு உள்ளே இருப்பதினால் அந்த பேனா பறக்கத்தொடங்கி விடும். அது போல் தக்காளி விதைக்குள் தவளைக் கொழுப்பை செலுத்தினால் தக்காளி குதிக்கும் என சீமான் அவர்கள் கூறுவது மிகவும் அபத்தமான கூற்று. அதில் சிறிதளவும் உண்மை இல்லை. மேலும்  தக்காளியில் தவளையின் மரபணுவும் இல்லை. உதாரணமாக முதன் முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Flavr Savr தக்காளியான வகையின் மரபணு வரிசை, அதில் மாற்றம் மரபணுவின் விவரம் மேலும் இம்முறையை கையாண்டு மரபணு மாற்றம் செய்தனர் முதலிய அத்தனை தகவலும் Biosafety Clearing House இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்கேயும் தவளையின் மரபணுவோ கொழுப்போ இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை.

எனவே சுருக்கமாக நாம் நினைவில் கொள்ளவேண்டிய உண்மைகள் இரண்டு:

  1. இன்றைய பெரும்பாலான பயிர்கள் நல்ல விளைச்சல், ஊட்டச்சத்து, பூச்சிகள் பாதிப்பில் இருந்து தற்காப்பு, பஞ்சகாலத்திலும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் தரும் வளர்ச்சி போன்ற நல்ல பயன்களுக்காக commercialize செய்யப்பட்ட hybrid வகைகள் மற்றும் tissue culture முறையில் வளர்க்கப்பட்ட வகைகள். அவை எதுவும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை அல்ல.
  2. அப்படியே மரபணு மாற்றப்பட்ட பயிர்களே ஆனாலும் அதை நாம் உண்ணும் போது நமது மரபணுவிலும் மாற்றம் வரும் என்பது உண்மை இல்லை. ஏனெனில் இன்று நாம் உட்கொள்ளும் அனைத்து பயிர்களும், நாட்டுவகைகளும் கூட, மரபணுக்களால் ஆனவையே. அந்த மரபணுக்கள் அத்தனையையும் நமது ஜீரண நொதிகள் ஜீரணித்து விடுமே அன்றி அவை நமது செல்களுக்குள் பாதுகாக்கப்பட்ட நம் மரபணுவை மாற்றாது.

மேலும் எப்பொழுதும் அறிவியலாளர்கள் மேலேயே அரசியல்வாதிகளின் அறிவியல் பொய்க்கூற்றுகளை தவறென நிரூபிக்க வேண்டிய சுமை ஏற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. தக்காளியில் தவளையின் கொழுப்போ மரபணுவோ இருப்பதாக சொல்வதோடு நில்லாமல் சீமான் அவர்களோ அவரது கட்சி இளைஞர்களோ அவரின் கூற்றுகளுக்கு அறிவியல் சான்று கொடுத்தார்கள் எனில் அறிவியல் சமூகம் அவர்களைப் போற்றி வரவேற்கும்.

அறிவியலை விடுத்து சீமான் அவர்கள் இப்படி தக்காளி பற்றி பேசும் போதெல்லாம் சிறு வயதில் எங்கள் பாட்டி எங்களுக்கு சொன்ன தக்காளி கதை ஞாபகத்துக்கு வருகின்றது:

ஒரு வயதான பெண்மணி காய்கறிகளை வாங்கி வந்து வீட்டில் சமைக்கத் தொடங்குகின்றார். அப்போது அதிலிருந்து ஒரு தக்காளி மட்டும் உருண்டு ஓடி அழுது கொண்டே “Pls அம்மா என்ன வெட்டி குழம்புல போட்றாதீங்க; நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்”னு கெஞ்சுது. உடனே அந்த அம்மா என்ன கொடுமடா இது, இப்போ வர தக்காளியெல்லாம் பேசுதுங்க என்று ஆச்சர்யபட்டுக்கொண்டே சரி நமக்கு வேலைக்கு ஒரு ஆளு கெடைச்சிச்சுனு அந்த தக்காளியை வீட்டு வேலைக்கு வைத்துக்கொள்கிறார்.

தினமும் அந்த அம்மாவின் கணவருக்கு வேலை செய்யும் இடத்திற்கு சாப்பாடு கொண்டு செல்வது தான் அந்த தக்காளிக்கு கொடுக்கப்பட்ட வேலை. ஆரம்பத்தில் சிரத்தையுடன் அந்த வேலையை செய்த தக்காளி சில நாட்களுக்குப் பிறகு அந்த அம்மா கொடுத்துவிடும் பாத்திரத்தில் இருக்கும் சாப்பாடை தான் சாப்பிட்டுவிட்டு அதில் அசிங்கங்களை நிரப்பி கொண்டு போய் அந்த அம்மாவின் கணவரிடம் கொடுத்து விடும். முதலில் தன் மனைவி தான் இப்படி செய்கிறார் என்று மனைவியிடம் சண்டை போடுகின்றார் கணவர். பின் இருவருக்கும் ஒரு நாள் தக்காளி தான் இந்த விஷமத்தை செய்கிறது என்று ஒரு அண்ணன் மூலம் தெரியவர, தக்காளிக்குள்ள இவ்ளோ விஷமானு அதிர்ச்சியடைந்து, தக்காளி எவ்வளவோ கெஞ்சினாலும் அதை அரிந்து குழம்பில் போட்டு நிம்மதி பெரு மூச்சு விட்டனர் அந்த அம்மாவும் அவர் கணவரும்.

தக்காளி பேசும் சிரிக்கும் குதிக்கும்னு எங்க பாட்டி சொன்ன கதையெல்லாம் உண்மையென்று நம்பி, தக்காளியெல்லாம் விஷம் என்று தக்காளியைப் பார்த்து பயந்து சாப்பிடாமல் இருந்த காலங்கள் அது – அறிவியலும் பகுத்தறிவும் அறியாத சிறு வயது. இப்பொழுதும் இப்படியான கதைகள் காதில் விழும்போதெல்லாம் சிரிப்புதான் வருகின்றது.

– முனைவர் தேவி ( Genetics)

 

Links:

What is the status of transgenic crops in India?

https://www.researchgate.net/publication/316219813_Possible_Mechanism_of_the_Detached_Unripe_Green_Tomato_Fruit_Turning_Red

https://bch.cbd.int/en/database/record?documentID=14867

Please complete the required fields.




Back to top button
loader