செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில், முக்கியக் குற்றவாளி மரணம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கை பல மாதமாகியும் வரவில்லை! ஏன் ?

திமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கடந்த 2015-ல் அதிமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் மெக்கானிக் போன்ற பணிகளுக்காக பல கோடி ரூபாய் பணம் பெற்ற மோசடி சம்பவம் நிகழ்ந்தது நினைவிருக்கிறதா ?. இந்த பணி நியமன பணம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் விசம் குடித்து உயிரிழந்து பல மாதங்கள் கடந்தும் விசாரணை ஏதுமில்லாமல் இருந்து வருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பெருநகர போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த போதே பாஸ்கர் மோசடி வழக்கில் சிக்கினார். பணி நியமன பண மோசடி தொடர்பாக சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, பாஸ்கர் ஏ1 குற்றவாளி.

2022 பிப்ரவர் 24-ம் தேதியன்று பாஸ்கர் விசம் குடித்ததால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பாஸ்கர் உயிரிழந்த பிறகு அவரின் தயார் விமலா சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ” பாஸ்கர் கடந்த 2015-ல் மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து புழல் சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்தார். குடும்ப பிரச்சனை காரணத்தால் மனைவியை விட்டு பிரிந்து தனியாக பணிமனையில் வசித்து வந்தார். 24/02/2022 அன்று என் மகன் விசம் அருந்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்டோ மூலம் அரசு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 27.02.2022-ம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் சிகிச்சை பலன்இன்றி இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். பாஸ்கர் சிகிச்சையில் இருக்கும் போது பையில் இருந்த வாக்குமூலக் கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து, ஜாம் பஜார் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” போக்குவரத்துத்துறை ஊழியர் பாஸ்கர் 24/02/2022 அன்று விசம் அருந்தியதால் உயிரிழந்தார். அவர் மீது போக்குவரத்து பணி நியமன பண மோசடி தொடர்பாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மோசடி வழக்கு மற்றும் குடும்ப பிரச்சனைக் காரணமாக மனஅழுத்தத்தில் இருந்தவர் விசம் அருந்தி உள்ளார் ” எனத் தெரிவித்து இருந்தார்.

பாஸ்கரிடம் இருந்த வாக்குமூல கடிதத்தைப் பற்றி கேட்டப் போது, அதுகுறித்து தெரிவிக்க இயலாது ” என மறுத்து விட்டார். வழக்கு இன்னும் விசாரணையில் தான் உள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் இறந்த பாஸ்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை போலீசார் தற்போது வரை பெறவில்லை எனத் தெரிவித்தார்

2015-ம் ஆண்டு சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, எம்டிசியில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மெக்கானிக் பணியில் சேர விரும்பிய நபர்களிடம் பெரும் தொகையை பாஸ்கர் மற்றும் சக ஊழியர்கள்  பழனி, கேசவன் மற்றும் பலர் சேர்ந்து வசூலித்து ஏமாற்றியுள்ளனர். தேவசகாயம் என்பவரின் மகனுக்கு பேருந்து நடத்துனர் பணிக்காக ரூ.2,60,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த ஊழலில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் 2016-ல் அளித்த புகாரின்படி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூ.2.31 கோடி கைமாறியதாகக் கூறப்படுகிறது.

2021ம் மார்ச் மாதம், செந்தில் பாலாஜி திமுகவின் எம்எல்ஏவாக இருக்கும் போது, மத்தியக் குற்றப்பிரிவு(சிசிபி) பணி நியமன மோசடி வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில், அவரின் உதவியாளர்கள், போக்குவரத்துக் கழக முன்னாள் நிர்வாக இயக்குநர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்பட 46 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏ1 ஆக இடம்பிடித்த செந்தில் பாலாஜியின் வழக்கின் வேகம் முற்றிலும் குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட போக்குவரத்துப் பணியில் நடைபெற்ற பண மோசடியில் சிக்கி இருந்த ஊழியரின் மரணம் கவனிக்கப்படாமல் போய்விட்டது. அவரது மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைப் பற்றி விசாரிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. பாஸ்கரின் மரணம் போன்று செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்கும் காணாமல் போய்விடுமோ என்ற ஐயம் இங்குள்ளது.

link : 

Job scam: chargesheet filed against DMK MLA Senthil Balaji

Please complete the required fields.




Back to top button
loader