ஸ்டெர்லைட் அரசியல் தலைவர்களின் கருத்து என்ன ?!

சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிரானப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணி மார்ச் 24-ம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரால் நடத்தப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய எழுச்சிமிகு போராட்டத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்களும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதித்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து நடத்தப்படும் மக்களின் போராட்டம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு :
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “ ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் ஆபத்து நீடித்தால், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மக்களின் உயிரைக் காவு வாங்கும் கேடான செயலை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ :
ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கதிற்காக தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை ஸ்டெர்லைட் ஆலை கையகப்படுத்தி உள்ளது. குமரரெட்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வணிகர்கள் கடையடைப்பை நடத்தி ஆதரவை அளித்தனர்.
சிப்காட் மூலம் கையகப்படுத்திய நிலங்களை நில உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் மதிமுக, இனி போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:
வளர்ச்சி என்ற கட்டமைப்பில், வேலைவாய்ப்பு என்கிற பெயரில் நம் நிலத்தை வாழ முடியாத பாலைவனமாக மாற்றி வருகிறார்கள். ஏற்கனவே இங்குள்ள ஆலை பின்விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதில் 4 மடங்கு விரிவாக்கம் செய்ய போகிறார்கள். தனி முதலாளிகளின் வேட்டைக் காடாக என் தாய் நிலம் மாறிக் கொண்டிருப்பதை எவ்வாறு சகித்துக் கொள்வது.
இங்கு தலைவர்கள் ஆளவில்லை, தரகர்களே ஆட்சி செய்கின்றனர். கெயில் எரிவாயு, அணு உலை, ஹைட்ரோகார்பன் போன்ற எந்த திட்டமாக இருந்தாலும் இங்கு வரவேற்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பகுதியில் மக்கள் குடிக்கும் மாசுப்பட்ட நீரை முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆலையின் உரிமையாளர் குடித்து பார்க்க வேண்டும்.இங்கு மட்டுமல்ல கதிராமங்கலம், நெடுவாசல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இது போன்றுதான் குடிநீர் மாசடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. இதையறிந்து, அரசு போராடும் மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை இந்த போராட்டம் தொடரும், அதில் நாங்கள் நிச்சயம் பங்கு பெறுவோம் என்று சீமான் பேட்டியில் கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்படைந்து வரும் நிலையில், ஆலையின் விரிவாக்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அனுமதி வழங்கினர் என்று தெரியவில்லை. இந்த ஆலையால் குமரரெட்டியாபுரம் கிராம மக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். அது அதிகரிக்க கூடாது என்பதற்காகவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யும் போது 2 டன் கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அப்பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்திருப்பது மக்களை கொலை செய்வதற்கு சமம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் பணிகள் துவங்கப்பட்ட போதும், இயங்க ஆரம்பித்த போதும் அதனால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகள் குறித்து பல்வேறு இயக்கங்கள் தங்கள் கோபத்தையும், எதிர்ப்பையும் காட்டி வந்துள்ளன. இந்நிலையில், இது சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விளைவாக அந்த ஆலை 2013-ல் மூடப்பட்டது. மூடப்படுவதற்கு முன்பாக பல விபத்துகளும், உயிரிழப்புகளும், ஆலையிலிருந்து வெளியேறிய வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே கோபத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, வளிமண்டலம் மாசுபடுவது, காற்று வளிமண்டலத்தில் ஆலை தூசுக்கள் பரவி நிற்பது, இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய், வாழ்வாதார பாதிப்பு, கால்நடைகள் இறந்து போவது என இவை அனைத்தும் சேர்ந்தே இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
மன்னார்வளைகுடாவில் உள்ள உயிர்க்கோளப் பகுதியிலிருந்து 25 கிலோமீட்டருக்கு அப்பால் அமைய வேண்டும் என்பதையோ ஆலையைச் சுற்றிலும் மாசு கட்டுப்பாட்டிற்காக 250 மீட்டர் அளவிற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதையோ, தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதையோ, கழிவுநீரை ஆலைக்கு வெளியே விடக்கூடாது என்பதையோ, ஆலையின் உட்புறம் மூன்றில் ஒரு பகுதி பசுமை வளையம் இருக்க வேண்டும் என்பதையோ அந்த நிறுவனம் பின்பற்றவில்லை. கடுமையான போராட்டங்கள் நீதிமன்ற தலையீடுகள் ஆகியவற்றிற்கு பிறகே சில பணிகளை முடித்தும் சிலவற்றை அரசு நிர்வாகத்தை வளைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டும், சுற்றுச்சூழல், மக்கள் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர ரூ.750 கோடி வரி ஏய்ப்புக்காகவும், பிளாட்டினம் மற்றும் பெல்லாடியம் ஆகிய தங்கத்திலும் விலை உயர்ந்த உலோகங்களை தங்கம் என்று ஏமாற்றி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததற்காகவும், அந்த ஆலையின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படி அரசின் விதிகளையோ, சுற்றுச்சூழலையோ, நிதி ஒழுங்கையோ கொஞ்சமும் சட்டை செய்யாத நிறுவனமாகவும் விவசாயம், குடிநீர், உப்புத் தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், உடல்நலத்திற்கு தீங்கு அளிப்பதாகவும் இருந்த காரணத்தினால்தான் உயர்நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டிருந்தது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மூடும் உத்தரவை ரத்து செய்தாலும், அந்த ஆலையின் பல்வேறு அத்துமீறல்களை சுட்டிக்காட்டி ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து அந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு பிறகும் அந்த ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கு மோசமான கேடுகளை விளைவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளதால் தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காற்று மாசடைந்து மூச்சுத்திணறலால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளால் புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்றவை பரவி வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சிஐடியு தொழிற்சங்கமும், இதர பல அமைப்புகளும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இந்த ஆலைக்கு எதிரான வழக்குகளை நடத்தி வந்துள்ளன. 2013ம் ஆண்டிலேயே ஆலையை மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வந்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கையினை நிராகரித்து வந்தது மட்டுமின்றி, நீதிமன்ற தீர்ப்புகளையும், சுற்றுச் சூழல் விதிகளையும் அமல்படுத்தாமல் அபாயகரமான ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாகவே இன்று இப்பகுதியில் மக்களின் உடல் நலத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சுற்றுச்சூழல், காற்று, நீர், மாசுபடுதல் மற்றும் மக்களின் நல்வாழ்விற்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த ஆலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மூட வேண்டுமெனவும், அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடியில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும், வியாபாரிகளும் இணைந்து நின்று வெற்றிகரமான இயக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் கலந்து கொண்டவர்களையும், அந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுகிறது.
இப்போதைய போராட்டம் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக மாறி உள்ள சூழலில் மத்திய – மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளவாறு இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கிட வேண்டுமென்றும் மத்திய-மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு வலியுறுத்துகிறது என மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
களத்திற்கு வர தயார் என ட்விட் செய்த கமல்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும், ஊடகங்களும் பங்கு கொள்ள வேண்டும். தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக்களத்திற்கு அழைத்தால் தானும் வருவதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கமலை கிண்டல் செய்த தமிழிசை சௌந்தர்ராஜன் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும், தம்மை அழைத்தால் களம் வரத் தயாராக இருப்பதாக கமல் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். கமலின் இப்பதிவை மையமாகக் கொண்டு தமிழக பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், “ தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல். உங்களை உருவாக்கிய திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராட்டத்தினால் திரைத்துறை படைப்பாளிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கிறார்கள். அது பற்றி உங்களுக்கு தெரியுமா. அவர்களுக்கு துணையாக நீங்கள் இருக்கிறீர்களா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் திரைத்துறையின் தொழிலாளர்களுடன் துணை நிற்கிறாரா இல்லையா என்பது முக்கியமான ஒன்றுதான். எனினும், ஆலையினால் ஏற்படும் பாதிப்பால் வாழ்வாதாரம் அழிந்து போகும் என போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பதிவிட்ட கருத்திற்கு இவ்வாறு பதில் கருத்து தெரிவிப்பது தேவையற்ற செயல் என சமூக வலைதளத்தில் எதிர்ப்பு வருகிறது .
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு யார் வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால், கட்சியின் அடையாளத்தை விடுத்து தமிழனாக, பொதுமக்களில் ஒருவராக கலந்து கொள்ள வேண்டும். மேலும், ஆதரவு அளிக்க விரும்பினால் நேரில் வந்து கலந்து கொள்ளவும், விரும்பத்தின் பெயரிலேயே அனைவரும் ஒன்றுக்கூடியுள்ளனர் என்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை நிறுத்தவும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் போராடிக் கொண்டிருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்கின்றதா, மக்களுக்கு ஆதரவாக ஆலையின் மீது தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், மக்களின் தீவிர தொடர் போராட்டங்கள் கண்டிப்பாக பயனளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.