UGC மூலம் இடஒதுக்கீட்டை பறிக்க முயற்சி, எதிர்ப்பால் பின்வாங்கல்.. மறைமுகமாக நடப்பதை வெளிப்படையாக்க சோதனையோட்டமா?

SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடங்கள் நிரம்பாத நிலையில் அதனைப் பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக மானிய குழு. இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு இட ஒதுக்கீடு தொடர்பான 2019 சட்டத்தையே தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்திய ஒன்றிய அரசு. 

இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து கொண்டுதான் உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமாக உரிமை கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சமூக நீதியின் அடித்தளமாக இருக்கக் கூடிய இட ஒதுக்கீட்டைச் சிதைக்க பல்வேறு செயல்கள் அவ்வப்போது நடந்த வண்ணம்தான் உள்ளது. அதன் ஒரு அங்கமாக தற்போது பல்கலைக்கழக மானிய குழு (UGC – University Grants Commission) SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடங்கள் நிரம்பாத நிலையில் அதனை பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப ஏதுவாக ஒரு வரையறையை வெளியிட்டது. 

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (OBC) என ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்தந்த பிரிவினரே தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படிக் குறிப்பிட்ட பிரிவினர் நியமிக்கப்படாத நிலையில், பொதுப் பிரிவினரைக் கொண்டு அந்த காலி பணியிடத்தை நிரப்பலாம் என்பதே UGC-யின் புதிய அறிவிப்பாகும். 

இவ்வாறு இட ஒதுக்கீட்டை நீக்கி பொதுப் பிரிவினரை நிரப்ப சில வழி முறைகளையும் UGC குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ‘குரூப் ‘C’ அல்லது ‘D’ பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு நீக்குவதற்கான முன்மொழிவு பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிற்குச் செல்ல வேண்டும் மற்றும் குரூப் ‘A’ அல்லது ‘B’ பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டை நீக்க முழு விவரங்களையும் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு அப்பணியிடத்தை நிரப்பலாம்’ எனக் கூறப்பட்டிருந்தது. 

இடஒதுக்கீடுக்கு எதிரான இவ்வறிவிப்பிற்கு அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு இட ஒதுக்கீடு தொடர்பான 2019 சட்டத்தையே தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது. 

ஒன்றிய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு : 

ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் பணியிடங்களுக்கு முறையாக  இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என RTI தகவலை அடிப்படையாகக் கொண்டு யூடர்ன் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. 

2022 நவம்பர் மாதம் சென்னை ஐஐடி அளித்த ஆர்.டி.ஐ தகவலின்படி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், OBC-க்கு  167 இடங்களும், SC-க்கு 93 இடங்களும், ST-க்கு 46 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 313 இடங்களும் அளித்திருக்க வேண்டும். ஆனால், பொதுப் பிரிவில் மட்டும் 514 ஆசிரியர்கள் (83%) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  

இதேபோல் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 45 துணை வேந்தர்களில் 36 பேரும், 1005 பேராசிரியர்களில் 864 பேரும் பொதுப் பிரிவினர். இது மட்டுமின்றி IIM-ல் மொத்தமுள்ள 784 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்களில் 590 பேர் பொதுப் பிரிவினை சேர்ந்தவர்கள். மேற்கண்ட எந்த பணி நியமனத்திலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இத்தகைய நடவடிக்கையால் OBC, SC, ST மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனை நாட்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மறைமுகமாக இருந்த செயல் திட்டத்தை வெளிப்படையாக மாற்ற UGC முயன்றுள்ளது. ஒன்றிய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தாலும் அது நம்பும்படியாக இல்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு பாஜக அரசு மறுப்பு தெரிவித்து இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனென்றால் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடுக்கு எதிராக பணிநியமனம் செய்யப்பட்டதற்கு எந்த வித நடவடிக்கையும் பாஜக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. 

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பெறப்பட்ட இட ஒதுக்கீடு உரிமையை தற்போது ஆட்சி செய்யக்கூடியவர்கள் எப்படியாவது பறித்துவிடும் முயற்சியை மறைமுகமாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர். தற்போது UGC அறிவித்ததை ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது கூட, மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader