This article is from Mar 09, 2022

Factcheck: மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் பேசியதை வெட்டி ஒட்டி பகிரும் பாஜக, திமுக !

உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்களை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தமிழக முதல்ருடன் மாணவர்கள் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதமாகி வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link 

தமிழக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சூர்யா ட்விட்டர் பக்கத்தில், ” இந்தியாவை போல் வேறு எந்த நாடும் தனது மக்களை கவனித்துக் கொள்ளவில்லை  ” என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் பிரதமர் மோடி அரசாங்கத்திற்கு பாராட்டு மழை பொழிந்தனர். ஆபரேசன் கங்கா வெளியேற்றும் முயற்சிகள் குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுடன் கலந்துரையாடினார்கள் என பதிவிட்டு இருக்கிறார்.

மேற்காணும் வீடியோவில் மாணவர்கள் , ” இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டோம். எல்லையை கடக்கும் வரை பிரச்சனை இருந்தது. அதுக்கு அப்புறம் அரசாங்கம் பாத்துகிட்டாங்க. சாப்பாடு எல்லாமே கிடைத்தது. எல்லையைக் கடந்த பிறகு எல்லாமே நமது அரசாங்கம் தான் சார். நம்ம அரசு அளவிற்கு எந்த அரசும் பண்ணல, நம்ம இந்திய அரசாங்கம் தான் விரைவாக வெளியேற்றம் பண்ணாங்க “என பேசியது இடம்பெற்று இருக்கிறது.

Twitter link | Archive link

உக்ரைன் மாணவர்களை சந்தித்தது குறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ” உக்ரைன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். நன்றி தெரிவித்த அவர்களிடம் இது அரசின் கடமை என்றேன். மாணவர்களின் படிப்பை இந்தியாவில் தொடர தேவையான நடவடிக்கைளை நம் அரசு தொடரும். அங்கிருக்கும் ஒவ்வொரு மாணவரும் மீட்கப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு! ” என வீடியோ உடன் பதிவிட்டு இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், ” இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டோம். எல்லையை கடக்கும் வரை பிரச்சனை இருந்தது. அதுக்கு அப்புறம் அரசாங்கம் பாத்துகிட்டாங்க. சாப்பாடு எல்லாமே கிடைத்தது. வாட்ஸ்அப் மூலம் பாதுகாப்பான இடம் குறித்து அனுப்புகிட்டே இருப்பாங்க. அந்த எல்லையைக் கடந்த பிறகு எல்லாமே நமது அரசாங்கம் தான் சார். நம்ம அரசு அளவிற்கு எந்த அரசும் பண்ணல.

ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம் நீங்கள் சொல்லலைனா.  கண்டிப்பா சார், ஃப்ரண்ட்ஸ் வட்டாரத்தில் இருந்த வடஇந்தியர்களாம் சொன்னாங்க, வெளியேற்றம் பற்றி எங்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை என சொன்னாங்க. முதலில் தமிழ்நாடு, அப்புறம் கேரளா தான் அறிவிச்சு இருக்காங்க. ரொம்ப நன்றி சார் ” எனப் பேசியதாக இடம்பெற்று இருக்கிறது.

மாணவர்கள் பேசிய முழு வீடியோ : 

Archive link 

” நம்ம அரசு அளவிற்கு எந்த அரசும் பண்ணல, நம்ம இந்திய அரசாங்கம் தான் விரைவாக வெளியேற்றம் பண்ணாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம் நீங்கள் சொல்லலைனா.  கண்டிப்பா சார், ஃப்ரண்ட்ஸ் வட்டாரத்தில் இருந்த வடஇந்தியர்களாம் சொன்னாங்க, வெளியேற்றம் பற்றி எங்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை என சொன்னாங்க. முதலில் தமிழ்நாடு, அப்புறம் கேரளா தான் அறிவிச்சு இருக்காங்க ” என பேசி இருக்கிறார்கள்.

பாஜகவினர் தரப்பில் பகிரப்பட்ட வீடியோவில் இந்திய அரசாங்கம் பற்றி பேசிய பகுதியை மட்டும் எடுத்து பகிர்ந்து இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவான வீடியோவில் இந்திய அரசாங்கம் எனக் கூறுவது வெட்டப்பட்டு உள்ளது. இப்படி, பாஜக மற்றும் திமுக என இரு தரப்பினரும் வெட்டி ஒட்டிய வீடியோவை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

உண்மையில், மீட்கப்பட்ட மாணவர்கள் இந்திய அரசாங்கம் மட்டுமே விரைவாக மக்களை வெளியேற்றியதாகவும், நீங்கள்(முதல்வர் ஸ்டாலின்) சொல்லவில்லை என்றால் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம் என முதல்வர் குறித்தும் பேசி இருக்கிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader