“நான் கோட்சே ஆதரவாளர்” எனப் பேசிய உமா ஆனந்தனுக்கு பாஜகவில் சீட்டு.. வைரலாகும் அவரின் வீடியோக்கள் !

2022 பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற உள்ளதால் அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் அக்கட்சியைச் சேர்ந்த பலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை 134 வார்டில் தமிழக பாஜக சார்பில் உமா ஆனந்தன் போட்டியிடுகிறார். சாதி, மதம், கோட்சே, பெரியார் என பல சர்ச்சையான பேச்சுகளுக்கு பெயர்பெற்றவர் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டது கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது. அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பழைய வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கோட்சே ஆதரவாளர் :
2019-ம் ஆண்டு தலையங்கம் எனும் சேனலுக்கு உமா ஆனந்தன் அளித்த நேர்காணலின் போது 25:50 வது நிமிடத்தில், ” கோட்சே காந்தியை சுட்டார். ஆமாம், கோட்சே இந்து. அதனால் தான் பெருமையாக இருக்கு. நான் கோட்சேவின் ஆதரவாளர். கோட்சே வந்து தாமதமாக பண்ணினார். இன்னும் யாராவது ரோசமாக இருந்திருந்தால் முன்னாடியே யாராவது பண்ணி இருப்பாங்க ” என வெளிப்படையாக தன்னை கோட்சேவின் ஆதரவாளர் எனத் தெரிவித்து கொண்டார்.
சாதிகள் இருக்கு :
2020 மார்ச் மாதம் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உமா ஆனந்தன், ” நான் பிராமணர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால், வெறி இல்லை. ஜாதிகள் இருக்கிறது, அது நமது கலாச்சாரத்தின் அங்கம். ஜாதிகள் இல்லை என்றால் நமது கலாச்சாரம் இல்லை. இப்பவும் ஜாதிகள் இருக்கிறது. ஜாதிகள் இருக்கும். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ன செஞ்சி கிழிச்சாரு. இவ்வளவு வருஷம் சாதியை ஒழிச்சுட்டேன்னு. ஒன்னும் பண்ண முடியாது, ஜாதிகள் இருக்கிறது. ஆனால், எல்லாரும் இந்துக்கள் என்ற ஒரு குடையின் கீழ் இருப்போம் ” எனப் பேசி இருக்கிறார்.
சால்வை வேண்டாம் :
2021-ல் மேடை நிகழ்ச்சி ஒன்றில், தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை எடுத்து விட்டு, ” இந்த சால்வை கலாச்சாரத்தை முதலில் விடுங்கள். இது திராவிடம் கொண்டு வந்தது. முதலில் இதை நிறுத்துங்கள். இதை எடுத்துட்டு போய் என்ன பண்ண போறாங்க. அதற்கு பதிலாக, புத்தகங்களை அளியுங்கள் ” எனப் பேசியுள்ளார்.
கோவில் கருவறை :
2020-ல் தலையங்கம் சேனலில் வெளியான வீடியோவில் பேசிய உமா ஆனந்தன், யாராவது என்னிடம் கருவறைக்குள் எல்லாரையும் விடுவீர்களா எனக் கேட்கும் போது, ஏன்டா விடனும், அது என்ன வீடா, எதற்கு விடனும். குளிச்சுட்டு, மடியா சாமிய தொடுறதுனு எப்பேர்ப்பட்ட பாக்கியம். அந்த சாமிய குளிக்காம போய் தொடுவியா நீ.
பிராமணர்கள் தான் அர்ச்சகர் ஆகனுமா எனக் கேட்பார்கள், ஆமாம். அப்படித்தான். ஏனென்றால், இந்த பணிக்கு இந்த சீருடையில் தான் வர வேண்டும் என நியதி இருப்பதை போன்று, சாமியை தொட்டு பூஜை செய்யும் அவர் தான் சமூகத்திலேயே உயர்ந்தவர் ” எனப் பேசியுள்ளார்.
2021 அக்டோபர் மாதம் சாவர்க்கர் புத்தக வெளியீட்டில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ” கோட்சேவைப் பொறுத்தவரை நிச்சயம் அவர் தான் குற்றத்தைச் செய்தவர், மாபெரும் குற்றத்தைச் செய்தவர். அவர் அக்யூஸ்ட் நம்பர் 1. மிக மிக தவறான முன்னுதாரணம். நம்முடைய நாட்டின் முக்கியமான, உன்னதமான, அற்புதமானத் தலைவரைக் கொன்றதற்கு கோட்சேவிற்கு எப்போதும் மன்னிப்பு கிடையாது. யாரும் கோட்சேவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ” எனப் பேசி இருக்கிறார்.
ஆனால், நான் கோட்சேவின் ஆதரவாளர் என வெளிப்படையாகவே பேசிய ஒருவருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது.