உமா கார்கி பரப்பிய பொய் மற்றும் வதந்திகளின் தொகுப்பு !

பாஜக ஆதரவாளர் ‘உமா கார்கி’ என்பவர் சமூக ஊடகங்களில் போலி செய்திகளையும், அவதூறான கருத்துக்களையும் பதிவிட்டு வந்ததற்காகக் கோவை சைபர்கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பியதற்காக பாஜக மற்றும் வலதுசாரிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் (ஜூன், 19ம் தேதி) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில், ‘சமூக ஊடக செயல்வீர்கள் சந்திப்பு’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பாஜக ஆதரவாளர் உமா கார்கிக்கு அண்ணாமலை நினைவு பரிசு வழங்கி அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உமா தொடர்ந்து பல்வேறு போலி செய்திகளை சமூக ஊடகத்தில் பரப்பியுள்ளார். அத்தொகுப்பினை இக்கட்டுரையில் காண்போம்.
1. தமிழ்நாடு புதிய சட்டசபை கட்டடம் கட்டியதில் ஊழல் எனப் பொய் :
“சுமார் 65 ஆயிரம் சதுர மீட்டரில் 2020ல் நவீன கட்டிடக் கலையுடன் 4 மாடிக் கட்டிடமாக கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டுமான செலவு ₹970 கோடி தான்… ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆயிரம் சதுர மீட்டரில், 2 மாடி தமிழ்நாடு புதிய சட்டசபை கட்டுவதற்கான செலவு ₹465 கோடி” எனப் பரப்பினார்.
இந்த “டகால்டி” வேலையை மறைக்க, மறக்கடிப்பதற்கு த்ரவிஷ ஊடகங்கள் என்ன உருட்டெல்லாம் உருட்டுகின்றன!
₹200 ஓவாவுக்கு இப்படி எல்லாம் குரைக்க வேண்டுமா?
சாவர்கர் பிறந்த நாளில் திறப்பு விழாவா?!
ஜனாதிபதி வைத்து ஏன் திறக்கவில்லை?
இப்படி எல்லாம் சப்பை கட்டு கட்டும் நாதாரிகள்.DMK = Dagalti pic.twitter.com/18U8W2AiM1
— UmaGargi (@Umagarghi26) May 25, 2023
2010, மார்ச் 3ம் தேதி வெளியான ‘NDTV’ செய்தியில், தமிழ்நாடு புதிய சட்டசபை வளாகம் 80,000 சதுர மீட்டர்களில் 425 கோடியில் கட்டப்பட்டு மார்ச் 13-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2009-10ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறை புதிய தலைமைச் செயலகம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், பிளாக் A 9,30,297 சதுர அடிகள் (86,427 சதுர மீட்டர்) என்றும், பிளாக் B 7,43,900 சதுர அடிகள் (69,110 சதுர மீட்டர்கள்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையே 425.57 மற்றும் 279.564 கோடி. அதன்படி மொத்த பரப்பளவு 1,55,537 சதுர மீட்டர்கள், மொத்த நிதி 705.134 கோடி. இதே போலி செய்தியை 2020ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 65,000 ச.மீ நாடாளுமன்றத்திற்கு 970 கோடி, 12,000 ச.மீ தமிழக தலைமை செயலகத்திற்கு 465 கோடி செலவா ?
2.முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கு ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் 35 கோடி நன்கொடை எனப் பொய்:
“ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக 35 கோடி நன்கொடை அளித்துள்ளது. ஏழை இந்து கோவில்களில் ஒரு வேளை பூஜைக்கே வழியில்லை. சாய்பாபா என்பது இந்துக்களை ஏமாற்ற நடத்தப்படும் ஆன்மீக ஜிஹாத்” என நேற்றைய தினம் (ஜூன், 19) பதிவிட்டுள்ளார்.
— UmaGargi (@Umagarghi26) June 19, 2023
ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை (Shri Saibaba Sansthan Trust Shirdi), MRI, CAT ஸ்கேன், DSA இயந்திரங்கள் மற்றும் MCI அங்கீகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பிற உபகரணங்களை வாங்குவதற்காக IGMCH-க்கு 2018ல் 35.28 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2020ம் ஆண்டு கோவிட்-19ன் போது மகாராஷ்டிர மாநில அரசுக்கு ரூ.51 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஆனால், ஹஜ் பயணத்திற்கு 35 கோடி நன்கொடை வழங்கியதாக அவர்களது அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கையோ, ஊடக செய்திகளோ வெளியாகவில்லை. அது ஒரு பொய் செய்தி.
மேலும் படிக்க : ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை ஹஜ் யாத்திரைக்கு 35 கோடி நன்கொடை அளித்ததாகப் பரவும் வதந்தி !
3.காவலர் முதியவரை அடிக்கும் பழைய வீடியோ :
காவலர் ஒருவர் முதியவரைத் தகாத வார்த்தைகளில் பேசி அடிக்கும் வீடியோவை பதிவிட்டு, “இந்த காவலர் டிஸ்மிஸ் ஆகும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்பது முதியோர் கோரிக்கை” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
*இந்த காவலர் டிஸ்மிஸ் ஆகும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்பது முதியோர் கோரிக்கை…..
What a filthy language and what kind of treatment given to elders….😡 pic.twitter.com/qMjJBmb9Px
— UmaGargi (@Umagarghi26) June 19, 2023
அந்த சம்பவம் குறித்து 2021, ஆகஸ்ட் 13ம் தேதி புதியதலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடம் தொடர்பான விசாரணையில் முதியவரைத் தலைமைக் காவலர் முருகன் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக முதியவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் முருகன் ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2021ம் ஆண்டு நடந்ததை தற்போது நடந்ததாகவும், அந்த முதியவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தவறான செய்தியைப் பரப்பியுள்ளார்.
4.யாகம் வளர்ப்பதினால் செயற்கையாக மழையை உருவாக்க முடியும் எனப் பொய் :
“யாகத்தில் பசு நெய் மற்றும் அரிசியைப் போட்டால் புரபலீன் ஆக்ஸைடு உருவாகும். அந்த வாயு செயற்கை மழையை உருவாக்கப் பயன்படுகிறது” என 2023, ஜூன் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். அது பல ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தில் பரவி வரும் போலி செய்தி. இது குறித்த உண்மையை 2021ம் ஆண்டே யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
Hinduism Rocks… pic.twitter.com/Rl5hEGQPpN
— UmaGargi (@Umagarghi26) June 1, 2023
யாகம் செய்யும்போது அதில் புரபலீன் ஆக்ஸைடு வருகிறது என்பதற்கும், அதனால் செயற்கையான முறையில் மழை உருவாகிறது என்றும் கூறுவதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ‘Cloud Seeding’ எனப்படும் மேக விதைத்தல் செயல்பாட்டில், மேகங்கள் குளிர்ந்து நீர்த்திவலைகளாக மாறக்கூடிய வேகத்தினை துரிதப்படுத்தி மழையாகப் பொழிய வைக்க சில்வர் அயோடைடு (Silver iodide) எனும் கனிம சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைடு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
புரபலின் ஆக்ஸைடு (Propylene oxide) என்பது செயற்கையான, அதிகம் எரியக்கூடிய மற்றும் நிறமற்ற திரவமாகும். இது தண்ணீரில் கரையக்கூடியது. பாலியிதர்ஸ் மற்றும் புரோப்பலீன் கிளைக்கோல் உற்பத்தியில் புரபலின் ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குக் கண், சருமம் மற்றும் சுவாசக்குழாயை எரிச்சலடையச் செய்யும் தன்மை கொண்டது.
மேலும் படிக்க : யாகத்தில் நெய், அரிசி போடுவதால் புரபலீன் ஆக்ஸைடு உருவாகி மழை வருமா ?
5.இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என BBC பத்திரிகையாளர் மார்க் டூலி கூறியதாகப் பொய் :
“இந்தியாவில் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்தால் ஒரு நாள் சந்திரனில் இந்தியாவின் தேசிய கோடி பறக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியத் தேசியக் கொடியில் சந்திரன் பிறை இருக்கும் என்றும் BBCயின் பிரபல பத்திரிக்கையாளர் மார்க் டூலி” கூறியதாகப் பதிவிட்டிருந்தார்.
👌👌😍 pic.twitter.com/Pa6Zcal2xb
— UmaGargi (@Umagarghi26) May 10, 2023
85 வயதான வில்லியம் மார்க் டூலி நியூ டெல்லியில் பிபிசியின் முன்னாள் பணிபகத் தலைவராக 20 ஆண்டுகள் பதவி வகித்தவர். மேற்கண்டது போல பாஜக மற்றும் காங்கிரஸ் குறித்து மார்க் டூலி ஏதேனும் கருத்து கூறியுள்ளாரா என்பது குறித்துத் தேடியதில், அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மார்க் டூலி கூறியதாகவே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகிறது. அவை குறித்தும் யூடர்னில் செய்தி வெளியிட்டுள்ளோம். இந்த பொய் செய்தியையும் இதற்கு முன்னர் பாஜக சிந்தனையாளர் பிரிவைச் சேர்ந்த கல்யாண் ராமன் பரப்பியுள்ளார்.
மேலும் படிக்க : காங்கிரஸ் ஆட்சி வந்தால் தேசியக் கொடியில் பிறை இடம்பெறும் என பிபிசியின் மார்க் டூலி கூறினாரா ?
6.தமிழ்நாட்டில் உள்ள கடையின் பெயர் அரபு மொழியில் உள்ளது :
“திருச்சியில் உள்ள திருச்சி தமிழ் ரெஸ்டாரண்டில் என்னும் கடைக்குத் தமிழில் பெயர் வைக்காமல் அரபு மொழில் வைத்துள்ளார்கள்” என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
எங்க அந்த முட்ட போண்டா கேனப்பயல்??
இதுக்கு ஏதாவது பேசுவான்?? pic.twitter.com/58DmySSGKa
— UmaGargi (@Umagarghi26) May 10, 2023
அந்த உணவகம் திருச்சியிலும் இல்லை, தமிழ்நாட்டிலும் இல்லை. அவ்வளவு ஏன் இந்தியாவிலேயே இல்லை. அந்த கடையின் பெயரைக் கொண்டு கூகுள் மேப்பில் தேடியதில் அது அபுதாபியில் மதினா சூப்பர் மார்கெட் என்னும் கடைக்கு அருகில் இருப்பதை அறிய முடிந்தது. அக்கடையின் வேறுசில புகைப்படங்களையும் பரவக் கூடிய படத்துடன் ஒப்பிட்டுக் காண முடிந்தது.
அரபு நாட்டில் உணவகம் வைத்திருக்கும் ஒருவர் திருச்சி நகரம் மற்றும் தமிழ் மொழியையும் இணைத்து ‘திருச்சி தமிழ்’ என உணவகத்திற்குப் பெயர் வைத்து இருக்கிறார். அப்பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அது தமிழ்நாட்டில் இருப்பதாகவும், இது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் பொய் பரப்பியுள்ளார்.
மேலும் படிக்க : அரபியில் இருக்கும் “திருச்சி தமிழ்” ரெஸ்டாரண்ட் திருச்சியில் இருக்கிறதா ?| தவறான பதிவு !
7.கடற்படை கொடியில் காங்கிரஸ் கட்சி சிலுவையைக் கொண்டுவந்ததாக பொய் :
“வாஜ்பாய் நம் கடற்படைக் கொடியிலிருந்த கிறிஸ்தவ சிலுவையை அகற்றியபோது, சோனியா ஆட்சிக்கு வந்ததும் (காங்கிரஸ்) அதை மீண்டும் கொண்டு வந்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.
When the Christian cross was removed from our Naval flag by Vajpayee, Sonia brought it back when she came to power. Then she removed Hindu symbols from Kalakshetra by appointing her friend Leela Samson there. Sonia is not considered a religious bigot. pic.twitter.com/lRIiqQxvS3
— UmaGargi (@Umagarghi26) May 26, 2023
2001ம் ஆண்டு அடல் பீகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்தியக் கடற்படை கொடியிலிருந்த சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் சிலுவை நீக்கப்பட்டு வெள்ளைக் கொடியில் தேசியக் கொடி மற்றும் இந்தியக் கடற்படை சின்னம் இருப்பது போல மாற்றப்பட்டது.
ஆனால், கொடியிலிருந்த நீல நிற சின்னம் வானம் மற்றும் கடலுடன் எளிதில் ஒன்றிப் போவதால் அந்த கொடியைப் பிரித்தறிய முடியவில்லை எனக் கடற்படை தலைமையகத்தின் பரிந்துரையின் பேரில் 2004ம் ஆண்டு மீண்டும் சிவப்பு நிற செயின்ட் ஜார்ஜ் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 2004 ஏப்ரல் 18-24ம் தேதி வெளியிட்ட அரசாணையில் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய கொடி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2004ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் மே 10ம் தேதி வரை இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. அதில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மே 22ம் தேதி தான் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். இவற்றிலிருந்து காங்கிரஸ் ஆட்சியின் போது கொடியில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : வாஜ்பாய் கடற்படை கொடியில் நீக்கிய செயின்ட் ஜார்ஜ் சிலுவை மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா ?
இப்படி போலி செய்திகளைப் பரப்பியது மட்டுமல்லாமல் வெறுப்பு பிரச்சாரத்தையும் செய்துள்ளார். நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களிடம் பேசும் போது, பெரியார், அம்பேத்கர், காமராஜரைப் பற்றிப் படிக்கும்படி அறிவுறுத்தினார். இதற்கு உமா அவர்கள் தனது டிவிட்டரில், மிகவும் அநாகரீகமான முறையில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா நாட்டில் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை இருக்க வேண்டும் மற்றவர்களுக்கு ஓட்டுரிமையை ரத்து பண்ண வேண்டும்….
— UmaGargi (@Umagarghi26) June 18, 2023
அதே போல் “இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை இருக்க வேண்டும் மற்றவர்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும்” என இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இப்படித் தொடர்ந்து பொய், வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்பவருக்குத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக ஊடக செயற்பாட்டாளர் எனப் பரிசளித்துள்ளார்.