This article is from Mar 24, 2021

ஐநா-வில் காங்கிரஸ் அரசு கூட இலங்கையை எதிர்த்தது, பாஜக அரசு வெளியேறியது!

இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலை உள்பட இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசே ஏவிய கடுமையான பல்வேறு மனித உரிமை மீறல்களை விசாரிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவை சார்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்காமல், இந்திய அரசு அவ்வாக்கெடுப்பில் இருந்து வெளியேறியது.

கடந்த செவ்வாய் 23/03/2021 அன்று ” இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பேற்றல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” தொடர்பான தீர்மானங்கள் 22 நாட்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட பேரவையில் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பை தவிர்த்த நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவாக 22 வாக்குகளும் , எதிராக 11 வாக்குகளும் விழுந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Twitter link  

ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரு தரப்பினரும் தீர்மானத்திற்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரை ஐ.நா வின் உயர் ஆணையர் மைக்கேல் பேச்லெட்டின் பரிந்துரையை விட  இத்தீர்மானம் மென்மையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், பயணத் தடைகள் விதிக்க கோரியும், இலங்கைத் தமிழர்கள் மீதான போர் தொடர்பான வழக்கை இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட்டில் பரிந்துரைக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடம் மைக்கேல் பேச்லெட்டின் அறிக்கை வலியுறுத்தியது.

கடந்த  2012ம் ஆண்டும் இலங்கைக்கு எதிரான போர் குற்றங்களை விசாரிக்க தீர்மானம் ஒன்று அமெரிக்காவின் முன்னிலையில் ஐ.நாவில்  நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இந்திய அரசு அத்தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் வரை ஒரு குறிப்பிட்ட நாட்டைப்பற்றிய தீர்மானத்தில் வாக்கு செலுத்துவதை தவிர்க்க நினைத்தது இந்திய அரசு. பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அத்தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா. குறிப்பாக திமுக, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்துள்ள தன்னுடைய அமைச்சர்களின் ஆதரவை திரும்பப்பெறுவோம் என்று அச்சுறுத்தியது. அதன் பிறகே அன்றைய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தது.

ஆனால், பாஜக அரசு நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்காமல் வாக்கெடுப்பில் இருந்து விலகியது குறித்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், வாக்கெடுப்புக்கு முன்பான இந்தியாவின் அறிக்கை குறித்து பின்வருமாறு :

இலங்கையில் மனித உரிமை மீதான வைக்கப்படும் கேள்விகள் குறித்தான இந்தியாவின் பார்வை ” இரண்டு அடிப்படைகளின் வழியாக வகுக்கப்பட்டது. அவை:

“இலங்கை வாழ் தமிழர்கள் தங்களுக்குரிய நீதி, மனித உரிமை, அமைதி மற்றும் மரியாதையை பெற துணையாக இருப்பது. இந்திய – இலங்கை இடையிலான ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வது.

மேலும், நல்லிணக்க செயல்முறையை இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்லவும் , இலங்கை தமிழர்களின் நிபந்தனைகளை நிவர்த்தி செய்யவும், குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களும், மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய ஐ.நா-வுடன் தொடந்து ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும் அறிவுறுத்தியுள்ளது” என்று  ஒரு மேம்போக்கான அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு, அரசியல் நன்மைக்காகவும் அந்நிய நாட்டின் நட்புக்காகவும், இலங்கையின் பூர்வக்குடி தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியை தட்டிக்கேட்காமல் வெளிநடப்பு செய்துள்ளது இந்தியா.

மேலும் 2012ம் ஆண்டு, “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது மட்டும் பத்தாது அவர்களுக்கான மறுவாழ்வுக்கான செயல்திட்டங்களை காங்கிரஸ் அரசு எடுக்க வேண்டும்” என்று கூறி கடுமையாக சாட்டியது பாஜக. ஆனால் ஒன்பது வருடங்களுக்குப் பின் நேற்று நடந்த தீர்மானத்தில் பாஜக வாக்களிக்கவே தயங்கி வெளியேறியிருப்பது மிகப்பெரும் முரண்.

Links :

India votes for resolution against Sri Lanka

BJP slams UPA, DMK on Lankan Tamils issue

Please complete the required fields.




Back to top button
loader