பாஜக எம்எல்ஏ மீதான உன்னாவ் பெண் பாலியல் வன்புணர்வு வழக்கு | தொடரும் மரணங்கள் !

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வீட்டு வேலைக்கு சென்ற பொழுது பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் ஏப்ரல் 2017-ல் புகார் அளித்தார். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, 2018-ல் ஏப்ரல் 8-ம் தேதி உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் தாயர் இருவரும் தீக்குளிக்க முயன்றனர். எனினும், அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை காப்பாற்றினார்கள்.
அதற்கு மறுநாளே, ஆயுதம் வைத்திருந்ததாக கூறி கைது செய்து சிறையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பப்பு சிங் காவல்துறையின் காவலில் இருக்கும் பொழுதே இறந்தார். பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சென்கர் உடைய தம்பி பெண்ணின் தந்தையை தாக்கியதாக கூறப்பட்டது. இளம் பெண்ணின் புகாரின் பேரில் குல்தீப் சிங்கின் சகோதரரை காவல்துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றியது உத்தரப்பிரதேச அரசு.
அந்நேரத்தில், வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போதுவரை எம்.எல்.ஏ குல்தீப் சிங் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13-ம் தேதி லக்னோவில் வைத்து எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்கர் கைது செய்யப்பட்டார். உன்னாவ் பெண் எம்.எல்.ஏ மீது தொடுத்த பாலியல் வன்புணர்வு வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக ரே பரேலியில் மாவட்ட சிறையில் இருந்த உறவினர் மகேஷ் சிங்கை என்பவரை பார்க்க பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மற்றும் உறவினர் பெண்கள் இருவர் ஆகியோர் சென்ற கார் 1 மணியளவில் அடையாளம் தெரியாத லாரியால் விபத்துக்குள்ளாகியது.
அதில், அப்பெண்ணின் உறவினர் பெண்கள் இருவரும் இறந்தே விட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் வழக்கறிஞரும் பலத்த காயங்களுடன் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் யூனிவெர்சிட்டி ட்ருமா சென்டரில் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் சென்ற கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு நிற மையால் அழிக்கப்பட்டு இருந்தது. முதலில் விபத்து என்றே காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. பின்னர் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சென்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாகன விபத்து திட்டமிட்ட கொலை முயற்சியாக இருக்கும் என அது தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த வழக்கை 7 நாட்களுக்குள் விரைந்து விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பெண் கார் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக தன் உயிர்க்கு ஆபத்து இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்த கடிதம் தங்கள் முன் சமர்பிக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்ற தலைமை செயலாளர் அலுவலகத்திடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பி இருந்தார் .
புதன்கிழமை நீதிமன்றத்தில் பேசிய ரஞ்சன் கோகாய் உன்னாவ் பெண் உடைய கடிதம் பற்றி பேசிய பிறகு, ” அழிவும் நிச்சயமற்ற தன்மையும் நிலவும் சூழ்நிலையில் நாம் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய முயல்வோம் ” எனக் கூறி உள்ளார்.
இதனிடையே, குலதீப் சென்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி இன்று அறிவித்தது செய்திகளில் வெளியாகி இருக்கிறது. இறுதியாக ஒரு நல்ல செய்தி கிடைத்து இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவித்து இருக்கிறார்.
உன்னாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கு, அவரின் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த உறவினர் வழக்கு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் குல்தீப் சென்கர் மீது கட்சி சார்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விசயம் கையை மீறி சென்ற பிறகே கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இருக்கிறார். இத்தனை போராட்டங்களுக்கு பிறகு அவருக்கான நீதி என்று கிடைக்கும் என்பதே அனைவரின் கேள்வி !
Proof :
Unnao rape case: BJP expels accused Kuldeep Sengar
Unnao rape case: CJI Ranjan Gogoi says hasn’t seen letter from victim