உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி என அறிவிப்பு !

உன்னாவ் மாவட்டத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 2017-ல் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தி இன்றுவரை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பெண் பயணித்த வாகனமும் விபத்துக்குளாகியதில் உடன் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் படுகாயம் அடைந்தார்.
Unnao rape and kidnapping case: Former BJP MLA Kuldeep Singh Sengar has been convicted by Delhi’s Tis Hazari court. pic.twitter.com/nTl6O0fMOm
— ANI (@ANI) December 16, 2019
இந்நிலையில், முன்னாள் பாஜக எம்எல்ஏ மீது நடைபெற்று வந்த மைனர் பெண்ணை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. மேலும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வருகிற 19-ம் தேதி நீதிமன்றத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த சசி சிங் என்பவரை நீதிமன்றம் விடுவித்து உள்ளது.
குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் மீது தொடர்ந்த வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு செல்லும் பொழுது 5 பேர் கொண்ட கும்பலால் எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதையடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாவட்டமாக உன்னாவ் பகுதி இருப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பாஜகவின் எம்எல்ஏவாக இருந்த செங்கார் உன்னாவ் மாவட்டத்தின் பங்கேர்மாவ் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். இந்த வழக்கின் தீவிரத்தால் கட்சியில் இருந்து அவரை நீக்குவதாக பாஜக அறிவித்தது.
Proof links :
Former BJP MLA Kuldeep Singh Sengar guilty of kidnapping and raping Unnao minor