This article is from May 05, 2019

மண்ணை விட்டு நீங்காத தீண்டாமை | தமிழகத்தின் நிலை என்ன ?

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது, அனைவருக்கும் கல்வி, நாட்டின் வளர்ச்சி, சமத்துவம், ஒருமைப்பாடு என பேசினாலும் தீண்டாமை ஒழிந்ததா என்றால் இல்லை என்பதே சரியான பதில்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இன்றும் தீண்டாமை என்னும் பெயரில் ஒதுக்கி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாடு முழுவதும் அரேங்கேறியே வருகிறது.

இந்தியா டுடே இணைய செய்தியில், 2014 ஆம் ஆண்டில் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக பிரித்து பட்டியலிட்டு உள்ளனர். அதில், வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் 8000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

2014 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,546 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமூக நீதிக்கு முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலும் கூட தீண்டாமை ஒழிக்கப்பட்டபாடில்லை. சாதி எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு என பேசினாலும் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தீண்டாமையால் அட்டூழியங்கள் அரங்கேறியே வருகின்றன.

Social Awareness Society for Youths (SASY) என்ற குழு மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 2014-2018 ஆம் ஆண்டில் தீண்டாமை நிலை பற்றிய 72 தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் விவரம் கேட்கப்பட்டன. அதில், 20 மாவட்டங்களில் மட்டுமே தகுந்த விவரங்களை அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் தீண்டாமை நடைமுறை, சாதி அட்டூழியங்களால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள், மாவட்டத்தில் சாதி குற்றச் சம்பவங்களை கையாள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவையின் அடிப்படையில் அந்த ஆர்.டி.ஐ தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு கிடைத்த தகவலில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மொத்தம் 646 கிராமங்களில் அட்டூழியங்களால் பாதிப்பு மற்றும் தீண்டாமை நடைமுறை உள்ளதாக பட்டியலிட்டு உள்ளனர். இதில், அதிகபட்ச கிராமங்களை கொண்ட மாவட்டமாக திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் மாவட்டம் இருக்கிறது.

.எண் மாவட்டங்கள் கிராமங்கள்
1. கோயம்புத்தூர் 23
2. ராமநாதபுரம் 45
3. விழுப்புரம் 32
4. திண்டுக்கல் 22
5. திருச்சி 9
6. திருவாரூர் 158
7. தருமபுரி 18
8. சேலம் 18
9. நீலகிரி 3
10. புதுக்கோட்டை 11
11. விருதுநகர் 18
12. கிருஷ்ணகிரி 35
13. நாமக்கல் 35
14. சிவகங்கை 49
15. தூத்துக்குடி 34
16. நாகப்பட்டினம் 30
17. காஞ்சிபுரம் 19
18. கன்னியாகுமரி 9
19. தேனி 40
20. கடலூர் 38

திருவாரூரில் 158 கிராமங்களில் தீண்டாமை நடைமுறையில் இருக்கிறது, அட்டூழியங்களும் நிகழ்கின்றன. இதைத் தொடர்ந்து சிவகங்கை(49), ராமநாதபுரம்(46), தேனி (40), கடலூர் (35), நாமக்கல் (35) என வரிசையாக இடம் பிடித்து உள்ளன.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. தீண்டாமை ஒழிப்பிற்கு பல போராட்டங்களை கண்ட தமிழகத்தின் நிலை இது. இதே இந்திய அளவில், வட மாநிலங்களில் தீண்டாமை மிக மோசமாக நடைமுறையில் இருக்கிறது.

” சக மனிதனை மனிதனாக பார்க்கும் காலம் வரும் வரை தீண்டாமையை ஒழிக்க இயலாது. அதற்காக போராட்டம் எனும் முயற்சியை முன்னெடுத்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்  “.

The Dalits | Still untouchable

Please complete the required fields.




Back to top button
loader