வெறுப்புணர்வின் உச்சம், “அயோத்தி கோவிலில் குண்டு வெடிப்பு” என முஸ்லீம்கள் பெயரில் மிரட்டல் விடுத்துள்ள இளைஞர்கள் !

அயோத்தி இராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 அன்று பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் ராமர் கோயில் வெடிவைத்து தகர்க்கப்படும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் (STF) தாக்கப்படுவார்கள் என்று கூறி இஸ்லாமியர்கள் பெயரில் ‘உத்தரப்பிரதேச DGP தலைமையகத்திற்கு‘ கடந்த டிசம்பர் 27 அன்று எக்ஸ் தளத்திலிருந்து மிரட்டல் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. எஸ்டிஎஃப் கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜி) அமிதாப் யாஷ் மற்றும் தேவேந்திர திவாரி ஆகியோருக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்கள் பெயரில் கலவரத்தை தூண்டியது கண்டுபிடிப்பு:

இந்நிலையில் மின்னஞ்சல்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டபோது மிரட்டல் விடுத்தவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்றும், அவர்கள் இஸ்லாமியர்கள் பெயரில் தவறாக எக்ஸ் தளத்திலிருந்து இமெயில் அனுப்பி மிரட்டியுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஓம்பிரகாஷ் மிஸ்ரா, தஹார் சிங் ஆகியோர் அதிரடிப் படையினரால் நேற்று (ஜனவரி 03) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணி குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோண்டாவைச் சேர்ந்த இருவரும் ‘@iDevendraOffice’ என்ற எக்ஸ் கணக்கிலிருந்து மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அயோத்தியில் தொடரும் சர்ச்சைகள், காரணம் என்ன ?

கடந்த 1528-ம் ஆண்டில் முகலாயப் பேரரசரின் படைத்தளபதியான ‘மிர் பாகியால்’ பாபர் மசூதி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1991-ல் உபியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், கடந்த 1992 டிசம்பர் 06 அன்று, மசூதி இருப்பது இராமர் பிறந்த இடம் என்றும், அயோத்தி ராமர் கோவில் இடிக்கப்பட்டு தான் பாபர் மசூதி அங்கு கட்டப்பட்டுள்ளது என்றும் கூறி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதுமே பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டன.

மேலும் இதன் காரணமாக கடந்த 1992-ல் இருந்தே அயோத்தியில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019 நவம்பர் 09 அன்று உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில், இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்க வேண்டும் என்றும் கூறி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து 2020-யில் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் ஒன்றிய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவி, ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை தீவிரமாக தொடங்கியது.

இதே போன்று அயோத்தியில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தன்னிப்பூரில், 21 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய குர்ஆன் இருக்கும்படியாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதியாக, மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா மசூதி அமைக்கப்படவுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இந்தியாவில் அதிகரிக்கும் வெறுப்புப் பிரச்சார குற்றங்களும், அதற்கான சட்டங்களும் – ஓர் முழுப் பார்வை !

இந்நிலையில் பல்வேறு தீர்வுகளுக்கு பின்பு தற்போது அயோத்தி ராமர் கோவிலில் இஸ்லாமியர்களின் பெயரில் தவறாக குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம், மதத்தின் அடிப்படையில் வகுப்புவாதத்தை தூண்டும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் NCRB 2021 தரவுகளின் படி தனிமனிதனை அடையாளப்படுத்தி பரப்பப்பட்ட வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக கடந்த 2014-இல் 323-ஆக இருந்த வழக்குகள், கடந்த 2020-ல் 1,804 வழக்குகளாக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே இது போன்ற வெறுப்புணர்வு சம்பவங்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது..!

ஆதாரங்கள்:

2 arrested for sending bomb threats Yogi Adityanath, Ayodhya Ram temple

500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….

Whose Ayodhya?

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader