உ.பியில் துப்புரவு பணியாளர் எம்எல்ஏ ஆனதாக பகிர்ந்த அண்ணாமலை, அவரின் சொத்து மதிப்பால் உருவான விமர்சனங்கள்.. யார் இவர் ?

உத்தரப்பிரதேசத் தேர்தலில் ஆளும் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட துப்புரவு பணியாளர் வெற்றிப் பெற்று உள்ளதாகவும், இதுவே உண்மையான சமூக நீதி என வெற்றிப் பெற்ற பாஜக வேட்பாளர் கணேஷ் சந்திரா லக்னோவில் பேசிய வீடியோ ஒன்றை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்
A Safai Karamchari brother was given an opportunity to contest and has been elected as a MLA in UP on behalf of @BJP4UttarPrdesh
This is the meaning of ‘Real Social Justice’@BJP4India is the only party which can demonstrate this in action & not just as a lip service like DMK! pic.twitter.com/WWaM7utn6w
— K.Annamalai (@annamalai_k) March 15, 2022
இந்த வீடியோவை தமிழக பாஜகவினர் பலரும் பகிரவே, பாஜக சார்பில் வெற்றிப் பெற்ற துப்புரவு பணியாளரின் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எடுக்கப்பட்டு ட்விட்டரில் அண்ணாமலையின் பதிவை டக் செய்து பதிவிடத் துவங்கினர்.
துப்புரவு பணியாளர். எளியோருக்கான கட்சி, சாமானியருக்கான கட்சி //
என்ன ஒண்ணு இந்த எளியவர் ஒரு ஒண்ணே முக்கா கோடி சொத்தும் , ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக்கும் , இன்னும் ரெண்டு பைக்கும் வச்சி இருக்கார் . https://t.co/mErIfri2zE https://t.co/pxOVEJWijR pic.twitter.com/ZERyGc60tH
— தோழர் இராவணன் (@dravidawarrior) March 15, 2022
துப்புரவு பணியாளர் எனக் கூறப்படும் கணேஷ் சந்திரா அளித்த விவரங்களில் , 1.7 கோடியில் உள்ள சொத்தில் 1.68 கோடிக்கு நிலம் உள்ளது. வங்கியில் 15 லட்சம் கடன் உள்ளது. அவருக்கு 3 பைக்குகள் உள்ளதாகவும், பட்டதாரியான அவரின் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
1.75 கோடி சொத்து மதிப்புள்ள ஒருவரை வெற்றிப் பெற வைத்து விட்டு எளியோருக்கான கட்சி எனக் கூறிக் கொள்வதாக பாஜக மீது விமர்சனங்கள் ட்விட்டரில் எழுந்தது.
இதையடுத்து, “2009 முதல் 2022ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வரும் வரையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய கணேஷ் சந்ரா அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றார். சேர்த்து வைத்த பணத்தில் மற்றும் வங்கியில் கடன் பெற்றும் 2013 & 2015ஆம் ஆண்டு ₹38 லட்சத்துக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார்.
இன்றைய தேதியில் அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 1 கோடியே 28 லட்ச ரூபாய் ஆகும். 8 வருடத்தில் அவர் வாங்கிய சொத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. அவர் அந்த நிலத்தை வாங்கப் பெற்ற வங்கிக் கடனில் சுமார் 15 லட்சம் இன்றும் நிலுவையில் உள்ளது ” என பாஜக தரப்பினர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.
கணேஷ் சந்திராவின் சொத்து விவசாய நிலத்தை சார்ந்து உள்ளது. அவருக்கு வங்கியில் 15 லட்சம் கடன் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார் .
யார் இந்த கணேஷ் சந்திரா ?
1986-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள மூததிஹா எனும் கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுரேஷ் சந்திரா கொத்தனார். கணேஷ் சந்திரா 2008-ல் கோரக்பூரில் உள்ள பண்டிட் தீனதயாள் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
பள்ளிப் படிப்பின் போது ஆர்எஸ்எஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். 2009-ல் கணேஷ் சந்திரா துப்புரவு பணியில் சேர்ந்தார். அதே ஆண்டில், சஃபாய் கரம்சாரிஸ் அமைப்பின் தொகுதித் தலைவராக மாறினார்.
2010-ல் இவரது தந்தை பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2014-ல் சஃபாய் கரம்சாரிஸ் சங்கத்தின் மாநில அளவிலான பதவியை கணேஷ் சந்திரா பெற்றார். 2017-ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜகவில் சீட் கேட்டும் கிடைக்கவில்லை. 2021-ல் ஹன்சார் பகுதியின் தலைவர் பதவிக்கு தன்னுடைய மனைவியை நிறுத்தி தோல்வி அடைந்தார். 2022-ல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே சஃபாய் கரம்சாரிஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
links :
https://myneta.info/uttarpradesh2022/candidate.php?candidate_id=3896