இரவு 8 மணிக்கு மேல் பெண்களுக்கு கோச்சிங் வகுப்புகள் கூடாது.. எதிர்ப்பை கிளப்பிய உ.பி அரசின் உத்தரவு !

'பாதுகாப்பான நகரத் திட்டத்தின்' கீழ் உபியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல வழிமுறைகள் என்னென்ன ?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோச்சிங் சென்டர் வகுப்புகளில் இரவு 8 மணிக்கு மேல் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்ற புதிய வழிமுறையை அம்மாநில அரசு தரப்பில் வெளியானது பல்வேறு எதிர்ப்புகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் “பாதுகாப்பான நகரத் திட்டம்” (Safe City Project) என்ற பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் போன்ற நோக்கங்களுடன் இத்திட்டம் கடந்த 2018ல் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்துறை அமைச்சகத்துடன் சேர்ந்து நிர்பயா நிதியத்தின் கீழ் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து செயல்படுகிறது. இதன்படி, CCTV கேமராக்களை பொது இடங்களில் நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை அறிவித்துள்ளது.

‘பாதுகாப்பான நகரத்திட்டம்’ குறித்த உத்தரப்பிரதேச அரசின் அறிவிப்பு:

ஒன்றிய அரசின் இந்த திட்டத்தை தற்போது உத்தரப்பிரதேச மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி, முதல் கட்டமாக தற்போது கௌதம் புத்த நகருடன் சேர்த்து 17 மாநகராட்சிகளில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் சிசிடிவி கேமரா அமைத்து பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும், மேலும், அவற்றுடன் பெண்கள் பயிலும் தனியார் கோச்சிங் வகுப்புகள் இனி இரவில் (Late Evenings) 8 மணிக்கு மேல் இயங்கக்கூடாது என்றும் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் இரண்டாம் கட்டமாக 57 மாவட்ட தலைநகரங்களிலும், மூன்றாம் கட்டமாக 143 நகராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளன.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1,692 பள்ளிகள் மற்றும் 418 பயிற்சி நிறுவனங்களில் மொத்தம் 26,568 சிசிடிவிகள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள 808 பள்ளிகள் மற்றும் 188 பயிற்சி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி துரித அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டியின் கட்டுப்பாட்டு அறையுடன் இந்த சிசிடிவி கேமராக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் பயிலும் கோச்சிங் சென்டர்கள் இயங்க இரவில் 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை, அப்படி இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பெண் உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாலை நேர கோச்சிங் வகுப்புகளுக்கு சென்று படிக்கும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், சமூக ஊடகங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிரான பதிவுகள்  வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.

NCRB தரவுகள் கூறுவதென்ன ?

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2021 (NCRB 2021) தரவுகளின் படி, 2020-ல் இந்திய மக்கள் தொகை அடிப்படையில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் 56.5 ஆக இருந்தது, இது 2021-ல் 64.5 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் சிறப்பு உள்ளூர் சட்டம் (SLL) தொடர்பான பிரிவுகளில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளிலுமே 59853, 49385, 56083 முறையே முதலிடத்தில் இருப்பதை அறிய முடிகிறது.

அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு 2019-ல் 5934, 2020-ல் 6630 மற்றும் 2021-ல் 8501 என்ற எண்ணிக்கைகளுடன் காணப்படுகிறது.

இதில் கடந்த 2021-ல் மட்டும், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் 31.8 சதவீதமும், பெண்களுடைய அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் குற்றங்கள் 20.8 சதவீதமும், பெண்களை கடத்துதல் தொடர்பான குற்றங்கள் 17.6 சதவீதமும், பெண்களை வன்புணர்வு செய்தல் தொடர்பான குற்றங்கள் 7.4 சதவீதமும் நிகழ்ந்துள்ளன.

பெண்கள் இரவில் வெளியே செல்வதால் தான் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஏற்படுகின்றனவா ? 

பொதுவாக பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள், பொதுக் கழிப்பறைகள், இரயில் நிலையங்கள், சாலைகள் போன்ற பொது இடங்களிலேயே பெண்கள் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படாமல், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதாக அறிவித்துள்ள உத்தரப்பிரதேச அரசின் அறிவிப்பு எவ்விதத்தில் பயனளிக்கும் எனத் தெரியவில்லை.

மாலையில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெரும்பாலான மாணவிகள் இரவில் வகுப்பு முடிந்து பயணம் செய்யும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து தர வேண்டுமே தவிர, பெண்கள் மாலை நேரங்களுக்கு பின்பு வகுப்புகளுக்கு செல்ல முடியாதபடி வழிமுறைகளை வழங்குவது எப்போதும் தீர்வாகாது.

பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் நாட்டிலேயே முதலிடம் வகித்து வரும் சென்னை போன்ற நகரங்கள் உள்ள இந்தியாவில், இரவில் பெண்கள் வெளியே படிக்க செல்ல முடியாதபடி வெளியான உத்தரப் பிரதேசத்தின் அறிவிப்பு பிற்போக்குதனத்தின் உச்சம் !

 

ஆதாரங்கள்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1913899

https://www.thehindu.com/news/national/other-states/up-govt-asks-departments-to-complete-phase-i-work-of-safe-city-project-in-3-months/article67132140.ece

Safe city project

Safe city framework guideline

bar-on-evening-classes-for-girls-is-likely-to-derail-many-a-dream

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader