உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் அதானிக்கு சொந்தமானதா ?

த்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12 அன்று ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக, சுரங்கப்பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கினர்.

அவர்களை மீட்கும் பணி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக உத்தரகாண்ட் நிர்வாகம், SDRF, NDRF, MoRTH, NHIDCL, NHAI மற்றும் BRO உட்பட எட்டு அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சுரங்கப்பாதை கடந்த 2020ம் ஆண்டு கௌதம் அதானிக்கு கைமாறிய நவயுகா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தான் கட்டப்பட்டு வருகிறது என்று கூறி பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. மேலும் பாஜகவின் முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களை உறுப்பினரான சுப்ரமணிய சுவாமியும் இது குறித்து கேள்வி எழுப்பி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளதையும் காண முடிந்தது.

Twitter Link | Archive Link

உத்தரகாசியில் சுரங்கம் அமைக்கும் நிறுவனம் யாருக்கு சொந்தமானது ?

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கடந்த 2022 டிசம்பரில் சார் தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டபணி தொடங்கப்பட்டது. தற்போது இந்த நெடுஞ்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்ட பணியாகத் தான் சில்க்யாரா சுரங்கப்பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டது போல அதானி குழுமத்திற்கும் இந்த சுரங்கத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் மற்றும் VSL பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் ஒப்பந்த நிறுவனங்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் இந்த நவயுகா நிறுவனம், ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. கடந்த 2020 ஜூலையில், ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் போட்டி ஆணையம் (Competition Commission of India), அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஆந்திராவின் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 75% பங்குகளை நவயுகத்திடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. மீதமுள்ள 25% பங்குகளும் கடந்த 2021-ல் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

இதன் மூலம் அதானி குழுமம், நவாயுக் இன்ஜினியரிங் மூலம் கட்டப்பட்ட கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்தின் முழு கட்டுப்பாட்டையும் கடந்த 2021-ல் வாங்கியதை அறிய முடிகிறது.

மேலும் இது தவிர கடந்த 2020 ஆம் ஆண்டில், அதானி எண்டர்பிரைசஸ் குழுமம், விஜயவாடா பைபாஸ் திட்டம் உட்பட ஆறு திட்டங்களுக்கு நவயுக இன்ஜினியரிங் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.  ஆனால் இது தவிர மற்ற திட்டங்களுடன் இவை சேர்ந்து இயங்கவில்லை.

இதுகுறித்து நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான வலைத்தளப் பக்கத்தையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் நவயுகா நிறுவனத்தின் நிறுவனர் சி.வி.ராவ் என்றும், இதன் நிர்வாக இயக்குனர் சி.ஸ்ரீதர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சார் தாம் பாதை நெடுஞ்சாலை திட்டத்தை தவிர, இந்தியாவின் முக்கிய திட்டம் என்று சொல்லப்படுகின்ற ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் இணைப்பு திட்டமும் நவயுகா நிறுவனத்திற்கே கடந்த 2020-ல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரவி வரும் செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ள அதானி குழுமம், தனது எக்ஸ் பக்கத்தில், “அதானி குழுமத்திற்கோ அல்லது அதன் துணை நிறுவனங்களுக்கோ சுரங்கப்பாதை அமைப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மிக அழுத்தமாக தெளிவுபடுத்துகிறோம். சுரங்கப்பாதையின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் எங்களிடம் எந்தப் பங்குகளும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த நேரத்தில், சிக்கிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் ஆதரவும்,  பிரார்த்தனைகளும் உள்ளன.” என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளது.

உத்தரகாசியின் சில்க்யாரா சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள நவயுகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கவில்லை என அந்நிறுவனத்தின் மறுப்பு செய்தியின் மூலம் அறிய முடிகிறது. 2020ல் நவயுகா இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்தின் பங்குகளையே அதானி நிறுவனம் வாங்கியுள்ளனர்.

 

ஆதாரங்கள்:

https://indianexpress.com/article/cities/mumbai/samruddhi-expressway-accident-sub-contractors-booked-crane-collapse-kills-8871230/

https://thewire.in/business/who-was-building-the-uttarakhand-tunnel-that-collapsed

https://www.necltd.com/necl.html#top

https://www.moneyworks4me.com/company/news/index/id/379536

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader