This article is from Jul 07, 2021

கொள்முதல் செய்யப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமா ?

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஜூலை 6 தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் முன்பு வீணாகும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 லட்சம் ஆக இருந்து வந்தது. தற்போது அந்த வீணாகும் எண்ணிக்கையையும் தாண்டி கொடுக்கப்பட்ட அளவில் இருந்தும் கூடுதலாக 1,10,000 ஊசிகள் (தோராயமாக) போடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளவாசிகள் உட்பட அனைவரின் சந்தேகத்திற்கு ஆளானது. அது எப்படி கொடுக்கப்பட்ட அளவை விட கூடுதல் தடுப்பூசிகள் செலுத்திவிட முடியும்? என வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த செய்தி நகைப்புக்கும் ஆளானது. ட்விட்டர் வலைதள பதிவுகளில் “ இது அறிவியல் பூர்வமான நடவடிக்கையா?” என கேள்வியும் எழுந்தது.

Archive link 

இது அறிவியல் பூர்வமான நடவடிக்கையா ?

இந்தியாவில் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு கொரோனா தடுப்பூசி வயல் (குப்பிகளில்) 10 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம். அதாவது ஒரு குப்பிக்கு 10 டோஸ்கள். இப்படி பல டோஸேஜ்களை உள்ளடக்கிய குப்பிகளின் பெயர் ‘மல்டி டோஸ் வயல்’ (multi-dose vials) எனப்படும். இவற்றில் குறிப்பிட்ட அளவை விட அதிக டோஸேஜ்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

மல்டி டோஸ் வயல் பற்றி உலக சுகாதார மையம் :

மல்டி டோஸ் குப்பிகளில் உள்ள லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளின் எண்ணிக்கையிலும் பெறக்கூடிய அளவுகளின் உண்மையான எண்ணிக்கையிலும் வித்தியாசம் இருக்கலாம். அவற்றில் இருந்து கிடைக்கும் உண்மையான அளவுகளின் எண்ணிக்கை சில காரணிகளை பொறுத்து அமையும். அவை

  1. syringe dead space – சிரிஞ்சிற்கும், ஊசிக்கும் இடையிலான இடத்தில் தடுப்பூசி சிக்கியுள்ள இடம் “dead space” எனப்படும்.
  2. vial overfill volume – ஒரு குப்பியில் கூடுதல் தடுப்பூசி நிரப்புதல்.

WHOவின் படி ஒரு குப்பியில் கூடுதல் தடுப்பூசி நிரப்புவது தடுப்பூசி உற்பத்தியில் உள்ள ஒரு பொதுவான நடைமுறையாகும். இது ‘ஓவர்ஃபில்’ என்று அழைக்கப்படுகிறது. சுகாதார ஊழியர்களுக்கு துல்லியமான அளவுகளை வழங்குவதில் உதவும் வகையில் உற்பத்தியாளர்கள் கூடுதல் தடுப்பூசியை உள்ளடக்கி வழங்குவர்.

இந்தியாவில் நிர்வகிக்கப்படும் ஒரு கொரோனா தடுப்பூசி குப்பியின் அளவு 5 மில்லி. ஒருவருக்கு தலா 0.5 மில்லி அளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே மொத்தம் 10 நபர்களுக்கு செலுத்தலாம். ‘ஓவர்ஃபில்’ முறைப்படி ஒரு குப்பியில் 5 மில்லிக்கு மேல் (0.58 முதல் 0.62 மிலி வரை) அதிகமான தடுப்பூசி மருந்து இருக்கும். ஒரு திறமையான சுகாதார பணியாளர், நிரப்பப்பட்டுள்ள அளவைப் பொறுத்து, ஒரு குப்பியில் இருந்து தலா 0.5 மில்லி என்ற கணக்கில் 10 நபர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட முடியும். இந்த நடைமுறையின் பெயர் “நெகட்டிவ் வேஸ்டேஜ்” எனப்படும்.

இந்த நடைமுறையை குறிப்பிட்டு தான் அமைச்சர் தான் அளித்த பேட்டியில் ,” தமிழ்நாட்டிற்கு இதுவரை 1,57,76,550 தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டு உள்ளது. அதிலிருந்து 1,58,78,600 நபர்களுக்கு ஊசிகள் போடப்பட்டுள்ளன. அதுபோக ஏற்கனவே கையிருப்பில் உள்ள 63,450 தடுப்பூசிகளில் இருந்தும் (மேற்கூறிய நடைமுறையை பின்பற்றி) கூடுதலாக கிட்டத்தட்ட 1,10,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி, “நெகட்டிவ் வேஸ்டேஜ்” முறையில் அதிக தடுப்பூசிகளை கேரளாவும் செலுத்தியுள்ளது. கேரளாவின் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள் இதுகுறித்தான ட்விட்டர் பதிவு ஒன்றை கடந்த மே 4ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.

Archive link 

நேற்று (ஜூலை 6) கோவையில் உள்ள பெரியநாயக்கம் பாளையம் அரசு மருத்துவமனையிலும், பணிபுரியும் ஊழியர்களின் திறனால் 100 டோஸேஜ்களில் 128 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி மருத்துவர் கார்த்திகேயன் MBBS, MS, Mch ( surgical oncology), MRCS (edin) கூறுகையில், ” எப்பொழுதும் தடுப்பூசி குப்பிகளில் கூடுதலாக டோஸ்கள் இருக்கும். அதை சரியாக கையாண்டால் ” நெகட்டிவ் வேஸ்டேஜ் ” என்கிற நிலையில் பயன்படுத்த முடியும். அதன் மூலம் நாம் எதிர் பார்த்ததை விட கூடுதல் எண்ணிக்கையில் செலுத்துவது சாத்தியமே ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக மருத்துவர் பிரவீன் MBBS MD MRCP(UK). D̅N̅B̅ G̅A̅S̅T̅R̅O̅  கூறுகையில், ” இது உண்மை தான். நீங்கள் கூறுவது போல் தடுப்பூசி மருந்து விரையம் இல்லாமல் மற்றும் நேரத்திற்குள் மக்கள் வந்தால் சாத்தியமே. இதுபோன்ற நிகழ்வுகள் கேரளாவிலும் கூட நிகழ்ந்து இருக்கிறது ” எனக் கூறி இருந்தார்.

Vaccine vial monitors எனப்படும் லேபிள் ஒன்று தடுப்பூசி குப்பிகளில் ஒட்டப்படும். அது வெப்ப உணர்திறன் கொண்ட ஒரு லேபிள், கால நேரத்திற்கு ஏற்ப வெப்ப வெளிப்பாட்டை பதிவு செய்ய தடுப்பூசி குப்பியில் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த பெருந்தொற்று காலக்கட்டத்தில், இந்தியாவில் இந்த லேபிள்கள் குப்பிகளில் ஒட்டப்படவில்லை. எனவே, ஒரு குப்பியை திறந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் அதனை 4 மணி நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என அறிவுரை கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல், அந்த குப்பி சூடாகி தன்னுடைய ஆற்றலை இழந்துவிடும். முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதிய மக்கள் முன்வராததால் தடுப்பூசிகள் விரையமாகின. ஆனால் தற்போது அதிகப்படியான மக்கள் முன்வர தொடங்கியுள்ளதால் வீணாகும் அளவு குறைந்துள்ளது.

“நெகட்டிவ் வேஸ்டேஜ்” முறையில் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை விட அதிக தடுப்பூசிகளை செலுத்துவது சாத்தியமான ஒன்றே. நமது அண்டை மாநிலங்களிலும் கூட அவ்வாறான நடைமுறைகள் நிகழ்ந்து இருக்கின்றன. இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் எழுந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விக்கு பதில் மற்றும் தெளிவு கிடைத்து இருக்கும் என நம்புகிறோம்.

Links : 

coimbatore-dt-achieves-negative-vaccine-wastage-as-health-workers-find-extra-dose

21151_Doses-of-vaccine-in-the-vaccine-vial (1)

கொள்முதல் செய்யப்பட்டதை விட கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டத்து – அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

Please complete the required fields.




Back to top button
loader