‘வள்ளிக்கும்மி’ என்ற பெயரில் நடத்தப்படும் சாதி அரசியலும், பின்னணியும் !

கடந்த நவம்பர் 13 அன்று ‘மகா மாரியம்மன் வள்ளிகும்மி’ என்ற கலைக்குழு சார்பில் 28-வது வள்ளிகும்மி அரங்கேற்றம் திண்டுக்கல் மாவட்டம் கோட்டத்துறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளரும், ‘கொங்குநாடு கலைக்குழுவின்’ நிறுவனருமான கே.கே.சி பாலு தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கே.கே.சி பாலு “சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே. கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வூட்டு பையனையே. இது போதும், இது போதுமே எனக்கு வேறேதும் வேண்டாம் அம்மா’’ எனக் கூறி, பெண்களை உறுதிமொழி எடுக்கவைத்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பரவி வரும் வீடியோவில் பாடியுள்ள கே.கே.சி பாலு திமுகக் கட்சியை சேர்ந்தவர் என்றும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளர் இவர் தான் என்று கூறியும் பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
சத்தியமா நாங்க கவுண்டர் பையனை தான் கல்யாணம் பண்ணிப்போம்னு கும்மி பாட்டு பெண்களிடையே சத்தியம் வாங்கினவர் வீடியோவை போட்டு
இது தான் RSS / பாஜக சதி பார்த்தீங்களானு உபிக உருட்ட.யாருனு பார்த்தா…
அவரு தான் 2021 பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளராம்
😂😂😂😂😂 pic.twitter.com/IBuzpH2p66— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) November 13, 2023
உண்மை என்ன ?
கே.கே.சி கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியைச் சேர்ந்தவர் . ஆனால், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் நின்றுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 187 தொகுதிகளுக்கு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியைச் சேர்ந்தவர்களான இ.ஆர்.ஈஸ்வரன், கே.கே.சி பாலு, பிரீமியர் செல்வம் ஆகிய மூவருக்கும் உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சமூக ஊடகங்களில் பலரும் கே.கே.சி பாலு திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறியதற்கும், சாதிய அடிப்படையில் அவர் பொதுவெளியில் பேசியதற்கும், திமுக தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏனெனில், 2021 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் நின்று தோல்வியை தழுவிய கே.கே.சி பாலு தேர்தலின் போது தன்னை திமுக உறுப்பினர் என்றே ஆவணங்களை தாக்கல் செய்திருப்பார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வள்ளிக்கும்மி போன்ற கலைகளை சாதிய போர்வைக்குள் அடக்கும் அரசியல் தலைவர்கள்:
தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று கும்மி. பொதுவாக அன்றாடப் பணிகளின் போது ஏற்படும் களைப்பை போக்குவதற்காக இந்த கலை உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெண்கள் கூட்டமாக கைகளை தட்டிக்கொண்டு ஆடும் இந்த நடனக் கலைக்கு இசைக்கருவிகள் எதுவும் தேவையில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவிலும் ‘கைகொட்டிக்களி’ மற்றும் ‘திருவாதிரைக்களி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு இன்றும் அங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கொங்கு மண்டலம் என்று சொல்லப்படுகின்ற கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாகவே வள்ளிக்கும்மி என்ற பெயரில் குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் இந்தக் கலை பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் பெரும்பாலும் பெரிய அளவிலான குழுக்களில் சில குறிப்பிட்ட சாதிகளைத் தவிர வேறு சாதியினர் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இதன் மூலம் எல்லோருக்கும் பொதுவாக, ஒரு பொழுதுபோக்கு நடனமாக மட்டும் இருந்த கும்மிக் கலையை சிலர் சாதிகளின் பெயரால் ஆதிக்கம் செலுத்திவருவது அவர்களின் பால் உள்ள சமூகநீதியின் போதாமையையே காட்டுகிறது.
மேலும் இந்த வள்ளிக்கும்மி குறித்து ஆய்வு செய்ததில், இவை மங்கை வள்ளி கலைக்குழு, மகா மாரியம்மன் வள்ளிகும்மி கலைக்குழு, கொங்குநாடு கலைக்குழு போன்ற சில கலைக் குழுக்களின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளதையும், நூற்றுக்கணக்கான அரங்கேற்றங்களை நடத்தியுள்ளதையும் பார்க்கும் போது வள்ளிக்கும்மியின் திடீர் வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் படித்துக்கொண்டிருக்கும் இளம்தலைமுறையினரிடம் சாதிவெறியை புகுத்தும் செயலோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக கடந்த நவம்பர் 13 அன்று கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளரான கே.கே.சி பாலு “சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே… கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வூட்டு பையனையே… இது போதும், இது போதுமே எனக்கு வேறேதும் வேண்டாம் அம்மா,’’ எனக்கூறி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்.
View this post on Instagram
இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளானதையடுத்து, இளம்பெண்களை உறுதிமொழி எடுக்கவைத்து ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள கே.கே.சி பாலு, “அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த கலைகளுக்கு உயிர் கொடுத்து, மேடை வடிவம் கொடுத்து, முதன்முதலில் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து மேடையேற்றினோம், இது வாழ்க்கையில் பெண்கள் பதனமாக இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு அறிவுரையே தவிர. வேறு எதுவும் கிடையாது.
யாரையும் இதில் தவறாக சொல்லவில்லை. யாரையும் குறைவாக மதிப்பிடவும் இல்லை. எங்களை நாங்களே தற்காத்துக் கொள்வதற்காக, எங்கள் குழந்தைகளை எப்படி காப்பாற்றவேண்டுமோ, அப்படி காப்பாற்றிக்கொள்வதற்காக நாங்கள் எடுத்துக்கொண்ட சிறுமுயற்சி அவ்வளவு தான்.” என்று வீடியோவில் பேசியுள்ளார்.
சர்ச்சையான வள்ளி கும்மி உறுதிமொழி – விளக்கம் அளித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி.பாலு #KKCBalu #ValliKummi #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/6Qwd6Bjei7
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 16, 2023
இதன்மூலம் பொதுவெளிகளிலே சாதிமறுப்பு திருமணத்திற்கு எதிராக பேசும் இவர் போன்ற சாதிய தலைவர்களின் உண்மை முகம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இவ்வாறு கலைகளின் பெயரால் இளம்பெண்களிடம் உறுதிமொழி வாங்கிக்கொள்வதன் மூலம், சுயசாதி திருமண முறைகள் திணிக்கப்படுகின்றன என்ற ஐயம் எழுகிறது.
பெண்கள் சாதியைக் கடத்தும் கருவி அல்ல !
ஆதாரங்கள்:
https://www.oneindia.com/dmk-aiadmk-mnm-ammk-alliance-seat-sharing-parties-list/
https://www.oneindia.com/kmdk-candidates-list-for-tamil-nadu-assembly-election/