பொய் பேசும் மோடி.. பொய் பொய்யா டிவீட் போடும் வானதி சீனிவாசன் !

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘தந்தி டிவி-க்கு’ நேர்காணல் அளித்திருந்தார். அதன் தமிழ் வடிவம் மோடியின் யூடியூப் பக்கத்தில் உள்ளது. அந்த நேர்காணலில் ‘தேர்தல் பத்திரம் தொடர்பாக வெளிவந்துள்ள முழு விவரம் உங்கள் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா?’ என நெறியாளர் மோடியிடம் கேள்வி கேட்கிறார். 

அதற்கு அவர் “கொஞ்சம் சொல்லுங்கள் மா. நான் என்ன செய்துவிட்டேன்? எதனால் எனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது? எதற்காக எல்லோரும் இதைப் பற்றி சந்தோஷபட்டு ஆடுகிறார்கள்? இவர்கள் எல்லாம் துன்பம் தான் படப்போகிறார்கள். நான் இந்த புத்திசாலிகளிடம் கேட்கிறேன். 2014-கிற்கு முன்னாடி எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவாகி இருக்கும். எந்த நிறுவனமாவது அந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருக்குக் கொடுக்கப்பட்டது எனச் சொல்ல முடியுமா? இப்போது மோடி தேர்தல் பத்திரத்தை எல்லாம் உருவாக்கிவிட்டார். அதனால் உங்களுக்கு அது தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது, யார் வாங்கியது, எப்ப கொடுத்தது என எல்லா விவரமும் கிடைக்கிறது. அதனால் இன்றைக்குத் தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளது. எல்லா விஷயமும் முழுமையாக இருக்காது. அந்த குறைகளைத் தீர்த்துவிட்டால் இதிலும் சில நன்மைகள் கிடைக்கும்” எனப் பதில் அளித்துள்ளார். 

அதாவது தேர்தல் பத்திரத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்தது பாஜக தான் எனச் சொல்கிறார். இந்த வீடியோவை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவைச் சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

தேர்தல் பத்திரம் : 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையை வழங்கலாம். இதனை ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளிலிருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000; ரூ.1 லட்சம்; ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரையிலான மதிப்புகளில் ஒருவர் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். 

அதனை அவர் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிடம் கொடுப்பார். பிறகு அக்கட்சியின் வங்கிக் கணக்கில் அப்பத்திரத்திற்கு உரியப் பணம் வரவு வைக்கப்படும்.

இப்பத்திர முறை 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பண மசோதா மூலம்  கொண்டுவரப்பட்டது. தொகையின் அளவு, ரகசியத் தன்மை போன்றவற்றிற்கு ஏதுவாக ’மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் – 1951’, ’நிறுவனங்கள் சட்டம் – 2013’, ’வருமான வரிச் சட்டம் – 1961’, ’வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறைச் சட்டம் – 2010’ (FCRA) போன்ற சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டது.

சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு 2018, ஜனவரி மாதம் தேர்தல் பத்திரங்கள் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. 

இப்பத்திர முறையில் இரகசியம் காப்பதன் மூலம் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ ஒரு கட்சிக்கு நிதி அளித்தார் என மற்ற கட்சிகளுக்குத் தெரியாது. எனவே அரசியல் ரீதியாக அவருக்கு எந்த நெருக்கடியும் வராது எனத் தேர்தல் பத்திர முறையைக் கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசு விளக்கம் தந்தது.

அதிகாரத்திலுள்ள கட்சிக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களையோ ஒப்பந்தங்களையோ பெற வாய்ப்பு உள்ளது என எதிர் தரப்பினர் கூறினர். 

தேர்தல் பத்திரத்திற்கு முன்பு இருந்த முறை : 

தேர்தல் பத்திர முறை அறிமுகப்படுத்துவதற்கு முன் அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கு மேல் நன்கொடை பெற்றால், அது குறித்த விவரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். 

அதேபோல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தங்களின் மொத்த லாபத்தில் 7.5 சதவீதத்திற்கு மேலோ அல்லது வருவாயில் 10 சதவீதத்திற்கு மேலோ நன்கொடை அளிக்கக் கூடாது என்பது விதியாக இருந்தது. அந்த வரம்புக்கு உட்பட்டே அவர்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.

அத்தகைய வரம்புகளும் மேற்கண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது. அதன்படி ஒரு நிறுவனம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிக்கு வழங்கலாம்.

தேர்தல் பத்திரத்திற்கு எதிராக வழக்கு : 

தேர்தல் பத்திர நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  

முதல் மனுவை 2017ல் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் Common Cause என்னும் அமைப்பும் இணைந்து தாக்கல் செய்தது. இரண்டாவது மனுவை 2018ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தாக்கல் செய்தது.

இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்றும் தேர்தல் பத்திர விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் வாங்கப்பட்ட மற்றும் கட்சிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை SBI வெளியிட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு எதுவும் இல்லை. 

அப்படி வெளியிடப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்து எந்தெந்த கட்சிகள் எவ்வளவு பணம் பெற்றுள்ளது என்பதை விளக்கமாக யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது. பத்திரம் மூலம் பணம் பெற்றதில் பாஜக தான் முதல் இடம். அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற ஒட்டு மொத்த பணத்தில் சுமார் சரி பாதி அளவு பாஜக மட்டும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க : தேர்தல் பத்திரம் நிதி: வாரிக் குவித்த பாஜக.. ED, IT ரெய்டில் சிக்கிய நிறுவனங்களின் நிதி யாருக்கு?

நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பு வாதங்கள் : 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகப் போகும் பணம் குறித்த விவரம் வெளிவருவதற்கு தானும் பாஜகவுமே காரணம் எனப் பிரதமர் மோடி நேர்காணலில் சொல்கிறார். இந்நிலையில்  தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கின் போது ஒன்றிய அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

அதில், நன்கொடை பெறும் நிறுவனத்திற்குச் சாதகமான செயல்களை அரசியல் கட்சி செய்கிறதா என நீதிமன்றம் தலையிட்டுக் கவனிக்க வேண்டிய தேவை இல்லை. அரசியல் கட்சிகளுக்கு எப்படிப் பணம் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மக்களின் அடிப்படை உரிமை கிடையாது என்கிற வதங்கள் குறிப்பிடத்தக்கது. 

ஒன்றிய அரசின் முடிவைத்தான் அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் வாதமாக முன்வைப்பார். அப்படித்தான் மேற்கண்ட கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் கூட அரசு தரப்பு வாதம் தேர்தல் பத்திரம் தொடர்பான இரகசியத்தைப் பாதுகாக்கவே முயன்றுள்ளது. ஆனால், தற்போது பாஜக மற்றும் மோடியால் தான் தேர்தல் பத்திரம் குறித்த வெளிப்படைத் தன்மை வந்துள்ளதாக ஒரு பொய்யை பாஜகவினரும் மோடியும் முன்வைக்கின்றனர். தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகள் நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே வெளிவந்துள்ளது. 

இதேபோல் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டதை ‘நீதிமன்ற நடவடிக்கை’ என வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அவர் கூறியது தவறான தகவல் என யூடர்ன் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Source : 

Electoral Bond Judgementt

Details of Electoral Bonds submitted by SBI on 21st March 2024 (EB_Purchase_Details)

Details of Electoral Bonds submitted by SBI on 21st March 2024 (EB_Redemption_Details)

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader