’வாசுகி பாம்பு’ – புராண கதாப்பாத்திரத்தை உண்மையாக்க முயற்சி செய்யும் தினமலர்!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். 2005ல் பேராசிரியர் சுனில் வாஜ்பேயினால் கண்டறியப்பட்ட இந்த படிமம் முதலையின் எச்சமாக கருதப்பட்டுள்ளது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு 2022ம் ஆண்டு தேப்ஜீத் தத்தா இது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 27 விதமான புதைபடிமங்களை ஆய்வு செய்ததில் இது மிகப்பெரிய பாம்பு என்றும் இதன் நீளம் 11 முதல் 15 மீட்டர் இருக்கும் என்றும் அவர்களது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்த தீவிர வெப்பநிலை காரணமாக பாம்புகளின் அளவு மிகப் பெரியதாக இருந்திருக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாம்பிற்கு ‘வாசுகி இண்டிகஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர். 

இது தொடர்பாக ‘தினமலர்’ வெளியிட்ட செய்தியில், ‘குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுக்கு முன் இருந்த, ‘வாசுகி’ இனப் பாம்பைச் சேர்ந்தவை – விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

வாசுகி பாம்பு : 

புராண கதையில் அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்ததாக கதை உண்டு. இந்த புராண கதையில் வரும் வாசுகி பாம்பின் இனத்தை சேர்ந்த பாம்பின் படிமங்களைத்தான் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. 

வாசுகி பெயர் ஏன் வைக்கப்பட்டது ? 

இதுகுறித்து, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (IISER) பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், “குஜராத்தின் கட்ச் பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டில் ஐஐடி ரூர்க்கி நடத்திய ஆய்வில் சுமார் 50 அடி நீளம்வரை உள்ள பாம்பின் புதை படிமங்கள் (4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது) கிடைத்துள்ளன. பொதுவாக இதுபோன்ற அகழ்வாய்வில் கிடைக்கும் புதை படிமங்களில் கண்டறியப்படும் உயிரினங்களுக்கு பெயர் வைக்கும்போது, அதனைக்கண்டறிந்த அறிவியலாளர், அவ்விலங்கின் குடும்பம், குறிப்பிட்ட நாடு ஆகியவற்றைச் சேர்த்து பெயர் சூட்டுவது வழக்கம். 

அந்த வகையில், இந்திய தொன்மக் கதைகளில் வரும் ‘வாசுகி’ என்ற பாம்பின் பெயரையும், இது இந்தியாவில் கண்டறியப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ‘இண்டிகஸ்’  என்ற பெயரையும் சேர்த்து ‘வாசுகி இண்டிகஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

எனவே, ‘பாற்கடலை மேரு மலையைக்கொண்டு (இமயமலை) கடையப் பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது’ என்று சொல்வது அறிவியலுக்குப் புறம்பானதாகும். வாசுகி என்ற பாம்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புராண காலத்தில் இமயமலையே இருந்திருக்கவில்லை. இந்திய-ஆசிய நிலப்பரப்புகள் மோதியதால் உயர்ந்து உருவானதுதான் இமயமலை. ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியில்தான் இந்தியா இருந்தது. பின்னர் நகர்ந்து நகர்ந்து இமயமலை உருவாயிற்று” என்றார். 

மலையை மத்தாக்கி பாம்பை கயிறு போல் பயன்படுத்தியது என்பது கற்பனைக்கு மட்டுமே பொருந்தும். உண்மையில் அப்படி நடந்திருக்காது என்பதை நாம் அறிந்ததே. 

பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களில் பேசுகையில் மரபணு அறிவியல், ஸ்டெம்செல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜெரி போன்றவை நமது பழங்காலத்தில் இருந்ததாக பிள்ளையார், கர்ணன் கதைகளை உண்மை போல பேசியதும் உண்டு.

மதமும் மூடநம்பிக்கையும் அறிவியலை தன்வயப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது இது முதல்முறை இல்லை. மெட்டி, தாலி எனத் திருமணத்துடன் தொடர்புடைய பொருட்களுக்கு மத அடையாளங்களை தாண்டி அதில் அறிவியல் உள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பபடுவது நீண்ட காலமாக உள்ளது. அதன் ஒரு பகுதிதான் இது.

ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பாம்புக்கு புராண கதையில் உள்ள ஒரு பாம்பின் பெயரை வைக்கின்றனர். உடனே, வாசுகி என்கிற பாம்பு உண்மையில் இருந்ததாக ஆய்வாளர்களே ஏற்றுக் கொண்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்கு எதற்காக ஒரு மதத்தின், அதுவும் புராண கதாப்பத்திரத்தின் பெயரை வைக்க வேண்டும் என்கிற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader