ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற கட்சிகள்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கடுமையானப் பாதிப்புகள் ஏற்படுவதால் ஆலைக்கு எதிரானப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய-மாநில அரசுகள் துணை நிற்பதாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய பாஜக கட்சிக்கு மட்டுமல்லாமல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மூலம் தொடர்ந்து நன்கொடை வழங்கப்படுவதாகக் கூறி செய்திகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2010-ல் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் காங்கிரஸ் கட்சிக்கு 6 கோடி ரூபாயும், ஸ்டெர்லைடின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் பாரதிய ஜனதா கட்சிக்கு 3.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக கூறியுள்ளனர்.
கட்சிகள் பெறும் நிதியில் தொகையானது 20,000க்கும் அதிகமாக சென்றால், அது பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் சார்பில் தெரிவிக்க வேண்டும். ஆகையால், தேசிய-மாநில கட்சிகள் எந்தெந்த அமைப்புகள், நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு நன்கொடை பெற்றன என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம்(ECI) ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்து வருகின்றனர். அதில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு வேதாந்தா நிறுவனம் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி :
2013-14-க்கு இடைப்பட்ட காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம்(ECI) 2014 டிசம்பரில் பாஜக தாக்கல் செய்தது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் 4 கோடி மற்றும் 3.5 கோடியாக இருமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற மற்றொரு பெயரில் 4.5 மற்றும் 4 கோடி நிதி வழங்கியதாக அதில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒரே மாதிரியாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மூலமே பாரதிய ஜனதா கட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக கட்சிக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு | நிறுவனம் | நிதி |
2004-2005 | சேஷா கோவா | 5,00,000 , 2,00,000 |
2005-2006 | சேஷா கோவா | 5,00,000 |
2007-2008 | சேஷா கோவா | 15,00,000 , 12,50,000 |
2009-2010 | ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் | 5,00,00,000 |
2013-14 | ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், தூத்துக்குடி | 4 மற்றும் 3.5 கோடி |
2013-14 | ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்,மும்பை | 4.5 மற்றும் 4 கோடி |
2009-2010-ம் நிதியாண்டில் 10,00,000 மற்றும் 50,00,000 என ஒரே ஆண்டில் இருமுறை கட்சிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. 2009-2010-ம் நிதியாண்டில் மும்பை ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 5 கோடி நிதியை வழங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத நேரத்திலும் இவ்வளவு பெரிய தொகை நன்கொடையாக வழங்க காரணமென்ன என்று தெரியவில்லை. சேஷா கோவா நிறுவனம் 2004-2005-ல் 5,00,000 மற்றும் 2,00,000 ரூபாயாக இருமுறையும், 2005-2006-ல் 5,00,000 ரூபாயும் வழங்கியுள்ளது. 2007-2008 நிதியாண்டில் சேஷா கோவா நிறுவனம் 15 லட்சம் மற்றும் 12.5 லட்சத்தை பாஜக கட்சிக்கு கனரா வங்கியின் மூலம் செலுத்தியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் :
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மும்பை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 2009-2010-ம் நிதியாண்டில் 5 கோடியும், 2004-2005-ல் 1 கோடியை நிதியாக அளித்துள்ளது. 2004-2012 வரையிலான காலக்கட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 8.79 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
சேஷா கோவா நிறுவனம் பாஜக கட்சிக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்ந்து நிதி அளித்துள்ளது. 2004-2005 நிதியாண்டில் இரு முறை 5,00,000 லட்சத்திற்கு காசோலையை கொடுத்துள்ளது. 2005-2006-ல் சேஷா நிறுவனம் 31-5-2005-ம் தேதி 5 லட்சத்திற்கும், 20-02-2006-ல் 2 லட்சத்திற்கும் காசோலையை வழங்கியுள்ளது. 2006-2007 நிதியாண்டில் சேஷா கோவா நிறுவனம் ரூ.2 லட்சத்திற்கு காசோலையை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி உள்ளது. மேலும், 2.03.2012-ல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் 2 கோடியை நிதியாக செலுத்தியதாக 2012-ல் காங்கிரஸ் கட்சி ECI-க்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டு | நிறுவனம் | நிதி |
2004-2005 | ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மும்பை | 1 கோடி |
2005-2006 | சேஷா கோவா | 5,00,000 |
2006-2007 | சேஷா கோவா | 2,00,000 |
2009-2010 | ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் | 5,00,00,000 |
2012 | சேஷா கோவா | 2 கோடி |
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சேஷா கோவா ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள். ஆனால், அந்நிறுவனங்களின் தாய் நிறுவனம் வேதாந்தா ரிசொர்சஸ். Sterlite industries, sesa goa, solaries அனைத்தும் வேதாந்தா நிறுவனத்தின் அங்கமாகும்.
வேதாந்தா நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக ஸ்டெர்லைட் மற்றும் சேஷா நிறுவனங்களின் மூலம் நன்கொடை வழங்குவதாகக் கூறி பெறப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு இரு கட்சிகளின் மீது வழக்கு தொடர்ந்ததுஜனநாயக சீர்திருத்த அமைப்பு(ADR).
இந்திய அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்பான சட்டம் 1976, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நேரடி நிதி வழங்குவது மற்றும் செல்வாக்கு பெறுவது போன்ற செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துகிறது. இந்த சட்டம் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி வழங்குவதை கடுமையாக கட்டுப்படுத்தி வந்தது.
2018-ன் நிதி மசோதாவில் மத்திய அரசு “ foreign contribution regulation act ( FCRA)” -ல் இரண்டாம் முறையாக கொண்டு வந்த திருத்தங்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை கட்டுப்படுத்து சட்டம் 1976-ல் இருந்து தப்பிக்கும் மீள் வழியை வகுத்துள்ளது.
இந்த திருந்தங்களால் லண்டனை மையமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் நிதி வழங்கும் செயலில் எத்தகைய மாற்றமில்லை. ஏனெனில், 2004-2012-ம் காலக்கட்டத்திலேயே இரு தேசிய கட்சிகளுக்கும் அந்நிறுவனம் கிளை நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்பட்டதாக ADR தெரிவித்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் சட்டத்தில் இருக்கும் குறுக்கு வழிகளை கண்டறிந்து இந்திய அரசியலில் மறைமுகமாக தங்களது பங்களிப்பை அளித்து வருவதை தடுக்க இயலாத ஒன்று. தேசிய கட்சிகள் மட்டுமின்றி மாநில கட்சிகளும் கூட பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெற்றே அரசியலில் ஈடுபடுகின்றனர். கட்சிகள் தங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறித்த தகவலை வெளிப்படையாக அறிவித்தாலும், கணக்கில் வராத நிதியும் பல இடங்களில் புழங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 2010-ல் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட போதிலும், 2013-ல் 100 கோடி அபராதம் விதித்து தடையை நீக்கிய தருணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும், அதன்பின் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சிக்கும் நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாயை வழங்கியது தெரியவந்துள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், அந்நிறுவனம் கட்சிகளுக்கே நிதி அளித்தவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எதிரெதிராக இருக்கும் அரசியல் கட்சிகளை அரவணைக்கும் நிறுவனத்திற்கு பிரச்சனையில் இருந்து மீண்டு வருவது பெரிதானதா ? மக்கள் உணர்வு மதிக்கப்படுமா ?
பின்குறிப்பு : சில தகவல் விடுபட்டு இருக்கலாம் . தேசிய கட்சிகள் கொடுத்த நிதி விவரம் மட்டுமே உள்ளது . மாநில கட்சி தகவல் திரட்டப்படும் . விரைவில் இன்னொரு கட்டுரையில் (அப்படி நிதி பெற்ற ஆதாரம் இருந்தால் ) மக்கள் உணர்வு மதிக்கப்படுமா ? சர்ச்சைக்குரிய நிறுவனம் , மக்கள் எதிர்ப்பு , நீதிமன்ற அபதராத்தை சந்தித்த நிறுவனத்திடம் நிதி பெறுவது எவ்வகை அறம் ??
மூலத்தகவல் உதவி: தீபக் பாஸ்கர்
Political Parties Contribution Report
Contribution Report for 2009-2010
Association for Democratic Reforms