Articles

வீரப்பன் நல்லவரா ? கெட்டவரா ?

என் கணவரின் 10 ரூபாய் கேசட்டுக்கு இருந்த மதிப்புக் கூட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இல்லை என்று வீரப்பனின் மனைவி ஆவேசமாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சந்தன மரக்கடத்தல் வீரப்பன் இருந்தவரை அவருக்கு அஞ்சி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் அளித்து வந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கூட மத்திய, மாநில அரசுகள் மதிப்பதில்லை என்ற எண்ணம் தமிழக மக்களிடையே நிலவுகிறது.

Advertisement

வீரப்பனின் மனைவியும், மண்காக்கும் வீரத்தமிழர் பேரவையின் நிறுவனரான முத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசிய போது, “ என் கணவர் உயிருடன் இருந்தவரை அவருக்கு அஞ்சி கர்நாடகா அரசு முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கியது. ஆகையால், தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனை இன்றி இருந்து வந்தது. என் கணவர் 10 ரூபாய் கேசட்டில் எச்சரிக்கை செய்தாலே, உடனடியாக கர்நாடகா அரசு அவர் கூறியதை செயல்படுத்தி இருக்கும். ஆனால், இன்று உச்ச நீதிமன்ற உத்தரவையே கர்நாடகா அரசு மதிப்பதில்லை என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் மீம்ஸாக வெளியாகி வருகிறது.

வீரப்பன் குறித்த பல்வேறு எண்ணங்கள் இங்கு நிலவினாலும், வீரப்பன் அரசுகளுக்கு முன் வைத்த கோரிக்கைகள் மற்றும் அதற்காக தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் அளித்த பதில்கள் பற்றி காண்போம்.

கோரிக்கை 1:

 காவிரி பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு நீதியின் அடிப்படையில் காணப்பட வேண்டும். காவிரி நீர் விவகாரத் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்த வேண்டும் மற்றும் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக விடுவிக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு சிக்கலும் இருக்க கூடாது.

பதில் :

காவிரி நீர் விவகாரத் தீர்ப்பாயத்தின் தலைவரே இடைக்கால உத்தரவை அமல்படுத்துவார். எந்தவொரு பிரச்சனையிலும் ஆணையமே முடிவெடுக்கும். தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாகும்.

கோரிக்கை 2:

1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற காவிரி பிரச்சனை கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போதுமான மற்றும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், கர்நாடகா அரசு தமிழர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.

பதில் :

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி கலவர மீட்பு ஆணையத்தை மே 1999-ல் கர்நாடகா அரசு அமைத்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் இருந்து வந்த 2,000 பேர் உட்பட மொத்தம் 10,000 கோரிக்கைகள் ஆணையத்தின் அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். அந்த பணியின் காலக்கெடு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் 31 மே 2001 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை 3 :

 கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால், கர்நாடகாவில் கூடுதல் நிர்வாக மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும்.

பதில்:

 மத்திய அரசின் உத்தரவின்படி, மொழி சிறுபான்மையினர் 15 சதவீதத்தினராக இருக்கும் பகுதியில் அரசு அறிவிப்புகள் சிறுபான்மையினரின் மொழியில் இருக்க வேண்டும் என கர்நாடகா அரசு மே மாதம் 1999-ல் உத்தரவு பிறப்பித்தது.

கோரிக்கை 4:

 பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கர்நாடகா அரசு உடனடியாக திறக்க வேண்டும்.

பதில்:

பெங்களூர் மற்றும் சென்னையில் திருவள்ளுவர் மற்றும் சர்வஜனாவின் சிலையை கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் திறந்து வைக்கும்.

கோரிக்கை 5:

சதாசிவம் கமிஷனில் பணிக்குழுவின் அட்டுழியங்கள் பற்றி நடக்கவிருந்த விசாரணைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் மூலம் வாங்கிய இடைக்கால தடையை உடனடியாக விடுவிக்க வேண்டும். கமிஷனின் அறிக்கை பொதுமக்களுக்காகவும் மற்றும் கர்நாடகா இழப்பீடும் வழங்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ 10 லட்சமும், வேறு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குல்டி போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் .

பதில்:

 கர்நாடகா அரசு தடை உத்தரவை நீக்க முறையான நடவடிக்கை எடுக்கும். மேலும், டாஸ்க் ஃபோர்ஸ் மூலம் கிராம வாசிகள் மற்றும் பழங்குடியினருக்கு தொந்தரவுகள் இருப்பதாக மனித உரிமை ஆணையங்கள் மூலம் புகார்கள் எழுந்தது. இதையடுத்து, ஜூன் மாதம் 1999-ல் இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில், முன்னாள் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவம் மற்றும் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் சி.வி.நரசிம்ஹா மூன்று அமர்வுகளை நடத்தினர். மனித உரிமை ஆணையத்தின் இறுதி பரிந்துரைக்கு கர்நாடகா அரசு சம்மதிக்கும்.

கோரிக்கை 6 :

கர்நாடகா சிறையில் உள்ள குற்றமற்றவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

பதில்:

TADA குற்றச்சாட்டுகள் உடனடியாக கைவிடப்பட்டு, கைதிகளை உடனடியாக விடுவிக்க வழிவகுக்கும்.

கோரிக்கை 7:

கர்நாடகாவில் கொல்லப்பட்ட ஒன்பது எஸ்.சி மற்றும் எஸ்.டிக்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.

பதில்:

இழப்பீடுகள் ஏற்கக்கூடிய அளவிற்கு வழங்கப்படும்.

கோரிக்கை 8:

 பச்சை இலைகளின் குறைந்தபட்ச கொள்முதல் விலையை ரூ.15 ஆக உயர்த்தி நீலகிரி விவசாயிகளுக்கு உதவி புரிய வேண்டும்.

பதில்:

மத்திய மற்றும் தமிழ்நாடு தேயிலைகளின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது மற்றும் தற்போது ரூ.4.50-ல் இருந்து அதிகரித்து ரூ.9.50 கொடுத்து வாங்கப்படுகிறது.

கோரிக்கை 9:

 தமிழ்நாடு சிறையில் உள்ள 5 நபர்கள் இப்போது விடுவிக்கப்பட வேண்டும்.

பதில்:

 இந்த கோரிக்கை சாதகமாக இருக்கும்படி கருத்தில் கொள்ளப்படும்.

கோரிக்கை 10:

தமிழ்நாட்டில் உள்ள மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். கர்நாடகா மற்றும் தமிழ்நாடு காபி மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் நாளொன்றுக்கு 150 ரூபாய் வழங்க வேண்டும்.

பதில் :

 தமிழ்நாட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.74.62 . தங்கும்வசதி, மருத்துவ வசதி, வெல்ஃபர் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் ஊதியம் நாளொன்றுக்கு 139 ரூபாயாகும். இது கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றை விட அதிகம். மேலும், ஊதியம் அதிகரிப்பதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.

இதுவே வீரப்பனின் கோரிக்கைகளும் அதற்கு மாநில அரசுகள் அளித்த பதில்களும். நீண்ட காலமாகவே இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்து முடித்து வைத்தது. எனினும், அதற்கு முட்டுக்கட்டையாக மத்திய அரசும், கர்நாடகா அரசும் இருந்து வருவதால், இந்த பிரச்சனைக்கு எப்போது முடியும் என்றே தெரியாமல் தமிழக மக்கள் போராடி வருகின்றனர்.  

யானையின் தந்தம் கடத்தல் வழக்கில் வீரப்பன் விடுதலை : 

 ஜனவரி 27, 2000-ல் சிறப்பு பணிக்குழுவின் இன்ஸ்பெக்டர் எஃப்.எம்.ஹுசைன் மற்றும் அவரின் கீழ் பணி செய்யும் காவலர்கள் குதியளத்தூர் காப்புக்காடு பகுதியில் பில்வாளி-யில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், 12 யானை தந்தங்கள், நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடுகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது சம்பந்தமாக சண்முகம், ராஜேந்திரன், ஜவஹர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து, மூவரின் மீது மற்றும் இந்த வழக்கில் வீரப்பன், அவரது கூட்டாளிகளான கோவிந்தராஜன் மற்றும் சந்திரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், சண்முகம், ராஜேந்திரன், ஜவஹர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இரண்டு மாதங்களில் கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 18 ஆண்டுகளாக சத்தியமங்கலம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே வீரப்பன், கோவிந்தராஜன் மற்றும் சந்திரன் இறந்து விட்டனர். 

இந்நிலையில், ஏப்ரல் 2018-ல் சத்தியமங்கலம் சப்-கோர்ட்டின் நீதிபதி கே.குமரசிவம்,  ” சண்முகம், ராஜேந்திரன், ஜவஹர் ஆகியோரை விடுதலை செய்வதாகவும்,  இந்த வழக்கில் இவர்களுக்கு இருக்கிற தொடர்பை காவல்துறை நிரூபிக்கத் தவறி விட்டது” என்று  கூறியுள்ளார். வீரப்பன், கோவிந்தராஜன் மற்றும் சந்திரன் ஆகியோர் இறந்து விட்டதால் வழக்கை முடித்து வைத்துள்ளார் நீதிபதி. சந்தனக் கடத்தல் வீரப்பன் யானை தந்தங்கள் கடத்தியதாகக் கூறிய இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

இதை வைத்து வீரப்பனை ஒரு பெரிய ஹீரோ என்று முத்திரைக் குத்தி விட முடியாது. பல கொலைகள், காட்டு வளக் கொள்ளை, ஆள் கடத்தல் விசயங்களில் தொடர்புடையவர் தான் வீரப்பன். எப்படி இவரை முழுமையாக ஹீரோ என்று கொண்டாட முடியாதோ, அதைப்போலவே முழுவதுமாக இவரை குற்றவாளியாக மட்டும் பார்க்க இயலாது. பொதுவாகவே வீரப்பன் ராபின்ஹுட் போன்ற பாத்திரமாகவே பார்க்கப்பட்டு இருக்கிறார். மலைவாழ் மக்களுக்கு அவர் செய்து வந்த உதவியால் காவல்துறை அவரை எளிதில் நெருங்க வாய்ப்பில்லாமல் போனது.  மிகச்சிரமமாக இருந்தது உண்மை. காவிரி பிரச்சனையிலும், தோட்டத் தொழிலாளர் பிரச்சனையிலும் கோரிக்கைகளை ராஜ்குமார் கடத்தலின் போது வைத்திருந்தார் என்றால் காட்டைத் தாண்டி தனது எல்லை இருப்பதாக நினைத்தே வேலை செய்திருக்கிறார். 

வீரப்பனின் இரு முகங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

Veerappan’s Demands and Response

source : THE Hindu 

Veerappan’s associates acquitted in ivory smuggling case 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button