This article is from May 12, 2021

ஓ வகை இரத்தம், சைவ உணவுக்காரர்களை கொரோனா அதிகம் தாக்கவில்லை என ஆய்வு முடிவா ? சிஎஸ்ஐஆர் விளக்கம் !

கோவிட்-19 தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கையில், ” AB மற்றும் B இரத்த வகையைச் சார்ந்தவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். O இரத்த வகையை சார்ந்தவர்கள் கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசைவ உணவுக்காரர்கள் கொரோனா தாக்கிய அளவிற்கு சைவ உணவுக்காரர்களை தாக்கவில்லை ” என சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி அறிக்கையில்கூறப்பட்டதாக ஓர் தகவல் பரவி வருகிறது.

சிஎஸ்ஐஆர் (Council of Scientific and Industrial Reserch) வெளியிட்ட அறிக்கை குறித்து இந்தியா டுடே செய்தியில், ” நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் மாதிரி அளவுடன், 140 மருத்துவர்கள் குழுவால் தரவுகள் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்று பாதித்தவர்கள் ஏபி இரத்தக் குழுவில் இருந்தும், அதைத் தொடர்ந்து பி இரத்தக் குழு வருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓ குழு மக்கள் மிகக் குறைந்த அளவில் இருப்பதாகக்  “கூறப்பட்டுள்ளது

இதுகுறித்து, சிஎஸ்ஐஆர் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிக்கையை தேடுகையில் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றை காண முடிந்தது. ” Clarification for article “CSIR Study Reveals Smokers and Vegetarians are Less Vulnerable to Covid-19 Infection” (Dated 24th April 2021) ” எனும் தலைப்பில் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

” புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்றால் குறைவான பாதிக்குள்ளாகிறார்கள் என சிஎஸ்ஐஆர் ஆய்வு தெரிவிக்கிறது ” எனும் தலைப்பில் சிஎஸ்ஐஆர் எந்த பத்திரிகை குறிப்பையும் வெளியிடவில்லை.

இதுபோன்ற ஆய்வுகளில், எந்தவொரு அளவுருவுடனான தொடர்புகளும் சோதனை ரீதியாக நிரூபிக்கப்படும் வரை காரணியாக கருதப்படக்கூடாது. எனவே, இந்த ஆய்வுகளின் அடிப்படையில் சைவ உணவு மற்றும் புகைப்பிடித்தல் கோவிட்-19ல் இருந்து பாதுகாக்கலாம் என எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சிஎஸ்ஐஆர் குறிப்பிட விரும்புகிறது  ” என அறிக்கை ஒன்றின் இணைப்புடன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

சிஎஸ்ஐஆர் கணக்கெடுப்பு குறித்து மூத்த மருத்துவர் எஸ்.ஏஜ் கல்ரா இந்தியா டுடேவிற்கு அளித்த தகவலில், ” இது ஒரு ‘மாதிரி கணக்கெடுப்பு ” மட்டுமே, அதாவது இது ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல ” எனத் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
.
.
இதற்கு முன்பாக, ” ஓ ” வகை இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்காது என பரவிய தவறான தகவலின் போது அயல்நாட்டில் நடைபெற்ற கணக்கெடுப்புகள் உடன் மருத்துவர் விளக்கி கூறியதை கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.
.
நாடு முழுவதும் 10,000 பேரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சைவ உணவு உண்பவர்கள், ஓ வகை இரத்தம் கொண்டவர்கள், புகைப்பிடிக்கும் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக சிஎஸ்ஐஆர் வெளியிட்டதாக பரவும் அறிக்கை மாதிரி கணக்கெடுப்பே. அது ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரை அல்ல. அதை வைத்து எந்த முடிவுக்கும் வரவில்லை என சிஎஸ்ஐஆர் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்து உள்ளது.
Links : 
Please complete the required fields.




Back to top button
loader