சாலை இல்லாததால் பாம்பு கடித்து இறந்த குழந்தையை கையில் சுமந்து சென்ற தாய்.. ‘இது எங்கள் தவறு’ – ஆட்சியர் !

வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமம் ஒன்றில் பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தையின் சடலத்தை, சாலை வசதி இல்லாததால் சுமந்தே சென்ற சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு என்னும் பகுதியில் அல்லேரி மலைக் கிராமத்திலுள்ள அத்திமரத்துக் கொல்லை என்னும் பகுதியில் விஜி மற்றும் பிரியா என்னும் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற மகள் உள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை (மே, 26ம் தேதி) இரவு அக்குழந்தையைப் பாம்பு கடித்துள்ளது. அவர்கள் பகுதியில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததினால், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். 

Archive link  

அம்மலைக் கிராமத்திலிருந்து கீழே செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாததினால் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமாகி, வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அணைக்கட்டுப் பகுதி காவல் துறையினர் குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்ய அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடலை இலவச அமரர் ஊர்தியில் அவர்களது கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், மலைக் கிராமத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததினால் அமரர் ஊர்தி குழந்தையின் உடலைப் பாதி வழியிலேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு அதன் ஊழியர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடலைப் பெற்றோர் சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். அதற்கு மேல் இருசக்கர வாகனமும் செல்ல முடியாததினால் குழந்தையின் உடலை கைகளில் தூக்கி கிராமத்திற்கு சென்றுள்ளனர். 

சாலை அமைக்கும் நடவடிக்கை :

இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முறையான வாகன வசதி இல்லாமல் தோள்களில் சுமந்து சென்ற நிகழ்வுகள் வட இந்தியாவில் நடந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் வாகன வசதி இருந்தும் சாலை வசதி இல்லாததினால் குழந்தையின் இறந்த உடலைச் சுமந்து சென்றது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, முன்னதாகவே இம்மலைக்கிராமத்தில் சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு, அவரது தொலைப்பேசி எண் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பதட்டமான சூழலில் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு செல்கையில் குழந்தை உயிரிழந்துவிட்டது. 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

அனைத்து மலைக் கிராமங்களிலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அல்லேரி கிராமத்திற்கும் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, அதற்காக  ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மிக விரைவாக சாலை பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் ஒன்றிய அரசின் அனுமதி பெற்று விரைந்து பணிகள் முடிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு வேலூர் ஆட்சியாளர் குமாரவேல் பாண்டியன் அளித்த விளக்கத்தில், “இது எங்கள் தவறு. 2021ம் ஆண்டு முதல், மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்காகச் சாலை அமைக்கிறோம். நாங்கள் அல்லேரி கிராமத்திற்கும் சாலைப் பணிகளைத் திட்டமிட்டிருந்தோம். அதனைத் தொடர வனத்துறையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி, அக்கிராமத்தில் கிளை சுகாதார நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

ஒரு குழந்தையின் உயிர் பறிபோன பிறகு அரசு தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னரே அப்பகுதிக்கான சாலை தேவையின் முக்கியத்துவத்தை வனத்துறைக்கு அறிவுறுத்தி ஒப்புதல் பெற்று சாலை அமைத்து இருந்தால் இன்று ஒரு குழந்தையின் உயிர் போயிருக்காது !

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader