பள்ளிகளில் சாதி சான்றிதழ் கேட்பது குறித்து வெற்றிமாறன் பேசியது என்ன ?

பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும், எனது பிள்ளைகளுக்கு ‘நோ கேஸ்ட்’ சான்றிதழ் வாங்க முயன்று கொண்டிருக்கிறேன் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. 

கடந்த 3ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கல்வித்துறை, உயர்கல்வித் துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறையுடன் இணைந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். 

மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., – திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன்

சினிமாவில் முதல் தலைமுறையினர் சந்திக்கும் அனுபவங்களைக் குறித்து தனது சொந்த வாழ்க்கையில் நடந்ததை அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்களுக்கு ஏதேனும் கேள்வி இருப்பின் கேட்குமாறு கூறுகிறார். 

அப்போது, ரஞ்சித் என்பவர் “தற்போது நீங்கள் எடுக்கும் படங்கள் மற்றும் அரசு சாதிகள் அனைத்தும் சமம் எனக் கூறுகிறீர்கள். ஆனால், பள்ளி மற்றும் கல்லூரியில் சாதிப் பெயரை நிரப்ப வேண்டும் எனக் கூறுகிறார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Archive link

அக்கேள்விக்குப் பதிலளித்த வெற்றிமாறன், “இது எனக்கே ஒரு பெரிய கொடுமையான விஷயம். நான் எனது குழந்தைகளுக்கு ‘நோ கேஸ்ட்’ (No Caste) என்று சான்றிதழ் வாங்க முயற்சி செய்தேன். அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். நீதிமன்றத்திற்குச் சென்றேன். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது நீங்கள் சாதியை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து என இருக்கிறது அல்லவா… எனவே சாதியைப் போடுங்கள் என்றனர்.

நான் எனக்கு எதுவும் வேண்டாம் என்கிறேன். அதையும் ஒத்துக் கொள்ளவில்லை. வேறு சில மேற்கோள்களையும் காட்டினோம். அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர். நான் சாதி சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதற்குத்தான் எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் கேட்பதை (சாதி சான்றிதழ்) நிறுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்” என அவர் சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தினர் கை தட்ட ஆரம்பித்துவிட்டனர். 

அப்போது வெற்றிமாறன் குறிக்கிட்டு “ஒரு நிமிடம்… ஒரு நிமிடம்… இது யாருக்குத் தேவை இல்லையோ, அவங்களுக்கு. இப்போ எனக்கு அது தேவை இல்லை என நினைக்கிறேன். ஆனால், அது (சாதி சான்றிதழ்) அவர்களுக்கான உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் கொடுத்துத்தான் ஆக வேண்டும். சமூக நீதிக்குக் கண்டிப்பாக சில இடங்களில் அதனை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 

இப்போ, எனக்கு அது தேவை இல்லை. நான் வேண்டாம் எனச் சொல்கிறேன். நான் வேண்டாம் எனச் சொல்கிறேன் என்றால், ‘சரி இவன் வேண்டாம் எனச் சொல்கிறான். இவனை அதிலிருந்து விட்டுவிடு என்று சொல்வதற்கான உரிமை, ஆப்ஷன் எனக்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’. 

சமூக நீதிக்குக் கண்டிப்பாக அது (சாதி சான்றிதழ்) தேவைப்படுகிறது. அப்படி திடீர் எனத் தூக்கிப் போட்டு விட முடியாது. பொதுவாக தூக்கிப் போட்டுவிட முடியாது. எல்லாரும் தூக்கிப் போட்டு விட முடியாது” என அக்கேள்விக்கான தனது பதிலை கூறி முடித்துள்ளார்.

தனக்குச் சாதி சான்றிதழ் வேண்டாம் என்றும், அதே நேரத்தில் ஒருவரது உரிமையை பெற்றுத்தரும் சமூக நீதிக்கு நிச்சயமாகச் சாதி சான்றிதழ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

Link :

Please complete the required fields.




Back to top button