5 மாதங்களாக ஊதியமில்லை, உயிரிழந்த கவுரவ விரிவுரையாளர்.. துயர் தீர்க்க எழும் குரல்கள் !

கடந்த ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் ஏழை, எளிய மக்கள் தொடங்கி நிறுவனங்களின் நிலைமை தலைகீழாய் மாறியது. இதில், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்காததால் ஊதியமின்றி வாழ்வாதார போராட்டத்தை எதிர்கொள்ளும் ஆசிரியர்களின் நிலைப் பற்றி அவ்வபோது செய்திகளில் இடம்பெறுவதுண்டு.
தற்போது அரசுக் கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றியவர் இறந்த சம்பவம் கொரோனாவிற்கு பிறகு கவுரவ விரிவுரையாளர்களின் நிலை, அவர்களின் மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது.
விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்தவர் 49 வயதான முருகானந்தம். இவருக்கு திருமணம் ஆகவில்லை. 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரியில் இருந்து ஊதியம் அளிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து உள்ளார்.
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய திரு.ஐயப்பன் அவர்களிடம் பேசுகையில், ” யு.ஜி.சி கோரும் தகுதிகளின் அடிப்படையில் தான் அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். ஆனால், யு.ஜி.சி நிர்ணயித்த ஊதியமான ரூ.50,000-ஐ எந்த பல்கலைக்கழகமும் வழங்குவதில்லை. தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் Ph.D முடித்த உதவி பேராசிரியர்களுக்கு நிகராக உள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பல கல்லூரிகளில் 6 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படவில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் ஓராண்டாக ஊதியம் அளிக்கவில்லை, அதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பெரிதும் கவனத்திற்கு வருவதில்லை. இதற்கு நிரந்தரமான தீர்வு இல்லை, தற்போது ஒரு உயிரில் முடிந்து இருக்கிறது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதியம் கூட வருடம் முழுவதும் வழங்கப்படுவதில்லை. இங்குள்ள பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொண்டால் 10 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் அளிக்கப்படும். விடுமுறை காலம் வரும் மாதங்களுக்கு ஊதியம் அளிக்கப்படாது.
அரசுக் கல்லூரிகளில் அளிக்கப்படும் ஊதியத்தை அடிப்படையில் தான் தனியார் கல்லூரிகளில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இங்குள்ள பல்கலைக்கழகத்திலேயே Ph.D முடித்தவர்களுக்கு ரூ.15,000 மட்டுமே ஊதியம் என்றால் அதை சுற்றியுள்ள தனியார் கல்லூரிகளில் 8000 ரூபாய் கொடுத்தால் போதும் என்கிற நிலை வந்து விடும். Ph.D முடித்தவர்கள் ரூ.8000-க்கு தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் அவலநிலை உருவாகி உள்ளது.
15 ஆண்டுகளுக்கு மேலாக கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த முனைவர் முருகானந்தத்திற்கு திருமணம் ஆகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து இருந்தாலும், இத்தனை மாதங்கள் ஊதியம் வராதது, மன அழுத்தம் உள்ளிட்டவையும் உயிரிழப்பிற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றுபவர்களுக்கு உள்ள பிரச்சனை. இதைக் குறித்து யாரும் பேசுவதுமில்லை ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
முனைவர் முருகானந்தம் இறப்பிற்கு பிறகு, மன உளைச்சலில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களின் பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரிகள் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில், விரிவுரையாளர் முருகானந்தம் இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டதை வரவேற்று இருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ” தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.விரிவுரையாளர்களின் நிதி நெருக்கடியைப் போக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!.
5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கவுரவ விரிவுரையாளர்கள் அனுபவிக்கும் துயரம் குறித்தும், முருகானந்தம் என்ற விரிவுரையாளர் இறந்தது குறித்தும் நேற்று நான் வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 6 மணி நேரத்தில் ஊதியம் வழங்க அரசு ஆணையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
ஊதிய நிலுவை வழங்கப்பட்டாலும் கூட, கவுரவ விரிவுரையாளர் முருகானந்தம் மறைவால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்படவில்லை. வறுமையில் வாடும் அவரது குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட வேண்டும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.