பெட்ரோல் வரி குறைப்பை ஈடுகட்ட பேருந்து கட்டணம் 3ரூ உயர்ந்ததாக வைரலான டிக்கெட்கள்.. நடந்தது என்ன ?

தமிழ்நாடு அரசின் திருத்திய பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மீதான வரியில் 3ரூ குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 13-ம் தேதியே நடைமுறைக்கு வந்தது. இதற்கு அடுத்த தாள் இரு டிக்கெட்களின் புகைப்படம் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் துவங்கியது.

Advertisement

Twitter link | Archive link 

ஆகஸ்ட் 13-ம் தேதி சேப்லாநத்தம் – ஊமங்கலம் என்கிற இரு ஊர்களுக்கு இடையே பயணித்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட பேருந்தின் டிக்கெட் ரூ.7க்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதே பேருந்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி பயணித்த போது 10ரூ டிக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. TN32N4251 எண் கொண்ட ஒரே பேருந்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி சாதாரண பேருந்து எனக் குறிப்பிட்டு ரூ.7க்கு கொடுக்கப்பட்டதும், ஆகஸ்ட் 14-ம் தேதி விரைவு பேருந்து எனக் குறிப்பிட்டு ரூ.10 வசூலித்ததும் டிக்கெட் மூலம் அறிய முடிகிறது.

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதை ஈடுகட்டவே பேருந்து கட்டணம் 3ரூ விலை உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் டிக்கெட்களின் புகைப்படம் வைரலாக அது மீம்ஸ் ஆகவும் உருவெடுத்தது. இதன் உண்மைத்தன்மையை அறிந்து பதிவிடும்படி நமது வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகோ அல்லது பெட்ரோல் வரி குறைக்கப்பட்ட பிறகோ பேருந்து கட்டணம் உயர்ந்ததாக எந்த அறிவிப்பும், செய்திகளும் வெளியாகவில்லை. அதேபோல், பெட்ரோல் வரி குறைக்கப்பட்ட பிறகு மறைமுகமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் எந்த செய்திகளும் வெளியாகவில்லை. விருதாச்சலம் கிளையில் இயக்கும் பேருந்தின் டிக்கெட்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வைரலாகியதால் டிக்கெட்கள் குறித்து விசாரித்து பார்த்தோம்.

இதுகுறித்து டிஎன்எஸ்டிசி விருதாச்சலம் கிளை மேலாளரை தொடர்பு கொண்டு பேசுகையில், ” சாதாரண பேருந்தை விரைவு பேருந்தாக மாற்றவில்லை. அது நடத்துனர் செய்த தவறு. சோம்பேறி தனத்திலோ அல்லது சில்லறை பிரச்சனையால் அப்படி செய்தாரா எனத் தெரியவில்லை. அன்றைய நாளில் 219 ரூட் தேர்வு செய்கையில் சாதாரண பேருந்து என எடுப்பதற்கு பதிலாக விரைவு பேருந்து எனத் தேர்வு செய்து இருக்கிறார். கிளைகளில் ஓடக்கூடிய அனைத்து பேருந்துகளின் ரூட்களும் டிக்கெட் மெஷினில் இருக்கும். தோராயமாக அதில் இருக்கும் 250 ரூட்களில் நடத்துனர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூட்டை தேர்வு செய்து செயல்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கிறது. தன்னுடைய தவறை அவரும் ஒப்புக் கொண்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இப்படி வேறு எந்த பேருந்திலும் அப்படி நிகழவில்லை, அந்த ஒரு பேருந்தில் மட்டுமே அந்த தவறு நடந்து இருக்கிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.

Advertisement

நடத்துனர்கள் டிக்கெட் மெஷின்களில் ரூட்டை தேர்வு செய்வது, சாதாரண பேருந்து என்பதை விரைவு பேருந்து என தேர்வு செய்வது சாத்தியமா என அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நடத்துனர் மணி அவர்களிடம் பேசுகையில், ”  டிக்கெட் மெஷினில் ஒவ்வொரு ரூட்டிற்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த எண்ணை தேர்வு செய்தால் அந்த ரூட்டிற்கானவை வரும். டிக்கெட் மெஷினில் சாதாரண பேருந்தாக உள்ள ரூட்டை விரைவு பேருந்தாக நடத்துனரால் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், சாதாரண பேருந்தாக செல்ல வேண்டுமா, விரைவு பேருந்தாக செல்ல வேண்டுமா என்பதை கம்பெனி தான் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும், சட்டப்படி தாங்களாகவே மாற்றக்கூடாது ” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக விருதாச்சலம் கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசுகையில், ” விருதாச்சலம் டூ கடலூர் செல்லும் அந்த ரூட்டில் சாதாரண பேருந்திற்கு 7ரூ என்றும், விரைவு பேருந்திற்கு 10ரூ ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்தில் 120-150 டிக்கெட்களுக்கு மேல் 7ரூ டிக்கெட் கொடுத்துள்ளார். ஆனால், அந்த குறிப்பிட்ட டிக்கெட்களின் போது சாதாரண பேருந்து என்பதற்கு பதிலாக தவறாக விரைவு பேருந்து என தேர்வு செய்ததால் 10ரூ டிக்கெட் கொடுத்துள்ளார். அவர் திட்டமிட்டு செய்ததாக தெரியவில்லை. அவருடைய தவறுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிட மாற்றம் செய்ய உள்ளதாக நிர்வாக இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். அந்த ஒரு பேருந்தில் மட்டுமே அந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. எங்கள் மேல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்றே எப்போதும் கூறி வருகின்றனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

விருதாச்சலம் கிளையில் இயங்கக்கூடிய ஒரு அரசு பேருந்தில் நடத்துனரின் தவறால் சாதாரண பேருந்தின் கட்டணத்திற்கு பதிலாக விரைவு பேருந்தின் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், பெட்ரோல் வரி ரூ.3 குறைக்கப்பட்டதை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக அந்த டிக்கெட்கள் தவறாக வைரல் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் டிக்கெட்டை மாற்றி கொடுத்த நடத்துனரின் தவறுக்காக அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button