விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு.. 3 கி.மீக்கு பரவிய வாயு.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் அமைந்து இருக்கும் எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையானது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இயங்கி உள்ளது. இந்நிலையில், அந்த ஆலையில் இருந்து அதிகாலையில் ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.
ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன வாயு சம்பவத்தில் 6 வயது சிறுமி உள்பட 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகாலை 2.30 முதல் 3 மணி அளவில் ரசாயன வாயு கசிவு சம்பவம் நிகழ்ந்ததால் வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் வாயுக் கசிவு நிகழ்ந்ததால் மக்கள் அதை அறியாமலேயே இருந்துள்ளனர்.
மீட்புக் குழுவினர், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியால் நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கோபாலப்பட்டினம் மற்றும் கிங் ஜார்ஜ் (KGH) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடபுரம் பகுதியைச் சுற்றியுள்ள 128-க்கும் மேற்பட்டோர் கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 98 பேர் மீண்டுள்ளதாகவும், 10 பேரு மூச்சுத்திணறல் பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
ஒன்று முதல் ஒன்றரை கி.மீ சுற்றளவிற்கு அதிக பாதிப்பு நிகழ்ந்து உள்ளதாகவும், சுமார் 3 கி.மீ தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது. கால்நடை விலங்குகள் கூட இருந்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீனா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், ” வாயுவை சுவாசித்ததால் 4 பேர் இறந்தனர், இரண்டு பேர் தப்பித்துச் சென்ற போது விபத்தால் இறந்தனர். ஒருவர் கிணற்றில் விழுந்தும், மற்றொருவர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து இருந்தனர். வாயு சுவாசிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் மருத்துவமனையில் 4 பேர் இறந்தனர். இது விஷ வாயு அல்ல, ஆனால் நீண்டகாலத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். காவல்துறையினரும் மீட்பு பணி அதிகாரிகளும் கிராமங்களுக்குச் சென்றதால் மக்களை வெளியேற்ற முடிந்தது எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.
ரசாயன வாயு :
எல்.ஜி பாலிமர் ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட ஸ்டைரீன் (Styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதாக ஆந்திரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன வாயு சம்பவத்தால் விசாகப்பட்டினம் முழுவதும் பதற்றம் உருவாகி உள்ளது.
வாயுக் கசிவு ஏற்பட்ட ஆலை 1961-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் 1978-ல் யூபி தொழில் குழுமத்தின் மூலம் வாங்கப்பட்டது. 1997-ல் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ஆலையை வாங்கி அதற்கு எல்.ஜி பாலிமர்ஸ் என பெயர் மாற்றியது.
விசாகப்பட்டின ஆலையில் ரசாயன வாயுக் கசிவு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில், ” விசாகப்பட்டினத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக தேசிய பேரிடர் மீட்புப்குழு அதிகாரிகளுடன் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்தேன். விசாகப்பட்டினத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிராத்தனை செய்கிறேன் ” எனத் தெரிவித்து இருந்தார்.
Spoke to officials of MHA and NDMA regarding the situation in Visakhapatnam, which is being monitored closely.
I pray for everyone’s safety and well-being in Visakhapatnam.
— Narendra Modi (@narendramodi) May 7, 2020
ஆலையை சுற்றியுள்ள பகுதியில் மீட்புப் பணிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் விசாகப்பட்டினம் செல்வதாக தெரிவிக்கப்பட்டது. விசாகப்பட்டினம் ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்டு மக்கள் இறந்தது மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#VizagGasLeak Preventive measures pic.twitter.com/oFm2FrGvbt
— AP Police (@APPOLICE100) May 7, 2020
ஆந்திரப் போலீசின் ட்விட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கையை வெளியிட்டு இருந்தனர். ரசாயன வாயுவின் பாதிப்பை நிறுத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என தகவல்கள் வெளியாகவில்லை.
Links :
Visakhapatnam gas leak live updates: Seven dead after chemical leak at LG Polymers plant
Visakhapatnam: 8 dead after gas leak at LG Polymers, PM monitoring situation