This article is from Oct 10, 2018

Washing Machine லஸ்சி தெரியுமா ? | அண்ணாச்சிக் கதைகள் புதிய தொடர்.

நாம் படிக்கின்ற மேலாண்மை புத்தகங்கள் , வியாபார சம்பந்தமான புத்தகங்கள் எல்லாவற்றிலும் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகள் , கதைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் நடந்ததாகவே இருக்கும் அவை தருகின்ற பெயர்கள் கூட ஜேம்ஸ் , பீட்டர் என நமக்கு பரிச்சயம் இல்லாத பெயர்களாகவே இருக்கும். இது பற்றி பல முறை யோசித்து இருக்கிறேன். நமது ஊரில் எத்தனை வியாபார யுத்திகளை காண்கிறோம் , அவர்கள் இதை முதலில் செயல்படுத்தும் போது எத்தனை சோதனைகளை தாண்டி வந்து இருப்பார்கள், இதற்குப்பின்னால் எத்தனை சுவாரசியமான கதைகள் இருக்கும் என யோசித்து எனக்கு தெரிந்த வியாபார நண்பர்கள் ,  முதலாளிகள் , தொழிலாளர்களிடம் கேட்டுத்தொகுத்த கதைகளின் தொகுப்பு தான் இந்த “அண்ணாச்சிக் கதைகள் ” . சுவாரசியத்திற்கும், எதிர்பாராத திருப்பங்களுக்கும் இந்த தொடர் கியாரண்டி. வாரம் ஒருமுறை  சந்திப்போம்  நண்பர்களே!!

“ அண்டாவில் லஸ்ஸி ”

சொந்த மாமா மகள் சித்ராவை மணப்பதில் பஞ்சாப்பில் வேலைபார்க்கும் மாப்பிள்ளை இளையராஜாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி. சொந்த அண்ணனும் தங்கையும் சம்பந்தியாக மணப்பந்தலில் அமர்வதெல்லாம் திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் சர்வசாதரணமாக காணும் நிகழ்ச்சி.

திருமணத்தில் வரதட்சனையாக கொடுக்கும் நிலமோ , வீடோ அல்லது நகையோ தம் குடும்பத்திற்குள்ளேயே தான் சுழலும் என்பது அதற்குள் இருக்கும் ஒரு மறைமுக  வியாபார கணக்கு. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்பது ஊருக்கு சொல்லப்படும் விளக்கம்.

பஞ்சாப்பில் வேலைப் பார்க்கும் காரணத்தினாலேயோ என்னவோ இளையராஜா தன் வட நாட்டு நண்பர்களுக்காக சில வட நாட்டு உணவு வகைகளை திருமண விருந்தில் சேர்க்க சொல்லி இருந்தார்.

அம்மாவின் அண்ணன் என்பதால் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை பற்றி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை . அதன் பொருள் நீங்கள் கொடுப்பதை உங்கள் பெண்ணுக்கு கொடுங்கள் . ஆனால் மாப்பிள்ளை ஆசைப்பட்டு கேட்ட உணவு வகைகளை கொடுத்து அசத்துவது என்ற முடிவில் இருந்தனர் பெண் வீட்டார்.

லஸ்சியை பற்றி தெரியாதவர்களுக்கு – தயிருடன் சீனி , ஐஸ் மற்றும் ஏலக்காய் பொடி இட்டு நன்றாக மிக்ஸியில் கடைந்து  நுரை பொங்க  அருந்தும் பாணம்  தான் லஸ்சி .

சப்பாத்தி , பாலக் பன்னீர் போன்ற எல்லா வட இந்திய ஐட்டத்திற்கும் தலையாட்டிய தலைமை சமையல்காரர். லஸ்சிக்கு மட்டும் தலையை இட வலமாக ஆட்டினார். அதற்கு அவர் சொன்ன காரணம் .  கல்யாணத்திற்கு 2000 பேருக்கு சாப்பாடு கேட்டு உள்ளீர்கள்.  அதில் சரி பாதி பேர் லஸ்சியை அருந்தமாட்டார்கள் என ஒரு கணக்கு வைத்துக் கொண்டால் கூட குறைந்தது 1000 லஸ்சியாவது தயாரிக்க வேண்டும் . அவ்வளவு பேருக்கு எப்படி மிக்ஸியில் அடித்துக் உடனுக்குடன் கொடுப்பது?  மொத்தமாக தயாரித்து வைத்துக் கொடுக்கலாம் என்றால் நுரை பொங்கிவரும் வட இந்திய லஸ்சி போல் இல்லாமல் ஆகிவிடும்.

சரி 10 பணியாளர்களை இதற்காக நியமித்தால் கூட புதிதாக 10 மிக்ஸி வாங்க வேண்டும். நடைமுறையில் சாத்தியம் இல்லை என கைவிரித்தார்.

இந்த விசயம் மாப்பிள்ளை இளையராஜா காதிற்கு போனது. அவர் தலைமை சமையல்காரை தனியே அழைத்து ஏதோ பேசினார். அவரும் அரைகுறையாக தலையாட்டிக் கொண்டே போனார்.

மறுநாள் திருமண நிகழ்ச்சியில் மொய் எழுதும் இடத்தைவிட திருமண மண்டபத்தில் லஸ்சி தயாரிக்கும் இடத்தில் தான் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரும் விழுந்து சிரித்துக் கொண்டே லஸ்ஸியை வாங்கிக் கொண்டார்கள்.

 

ஏன் சிரிக்க மாட்டார்கள்? லஸ்சியை மிக்சியில் போட்டு அடித்துக் கொடுப்பதற்கு பதிலாக வாசிங் மிஸினில் தயிர் , சீனி, ஐஸ் மற்றும் ஏலக்காய் பொடி போட்டு அடித்துக் கொடுத்தார்கள். அதுவும் வாசிங் மிஸினை ஒரு பெரிய டேபிள் மேல் வைத்து விட்டு தண்ணீர் வெளியேரும் பைப்பை பக்கத்தில் வைக்கப்பட்ட ஒரு அண்டாவில் விட்டு விட்டார்கள் . கேட்பவருக்கெல்லாம் அண்டாவில் இருந்து எடுத்துக் கொடுத்தார்கள்.  திருமணத்திற்கு வந்தவர்களில் லஸ்சி பிடிக்காதவர்கள் கூட வாசிங் மிசின் லஸ்சியை கடைவதை பார்ப்பதற்காக வரிசையில் வந்து லஸ்சி வாங்கிச் சென்றார்கள்.

இந்த வியாபார யோசனை  10 பணியாளர்கள், 10 புது மிக்ஸி செலவு மற்றும் நேரத்தை குறைத்தது. அது மட்டுமில்லாது மிக்ஸியே பயன்படுத்தாமல் நுரை பொங்க நூற்றுக்கணக்கான பேருக்கு ஒரே நேரத்தில் மிக்ஸியில் தயாரித்தது போன்ற சுவையான லஸ்சியை கொடுக்க முடிந்தது.

அப்புறம் அந்த புது வாசிங் மிஸினை அன்றைய நிகழ்வுக்கு பின் சுத்தப்படுத்தி மாமனார் வீட்டுச் சீதனமாக துணி துவைக்க வைத்துக் கொண்டார் நமது புதுமாப்பிள்ளை!

“ புதிய கதைக்களம் மற்றும் படிப்பதற்கே ஆர்வமூட்டும் புதிய தொடர் கதைகள் இனி தொடர்ச்சியாக வர உள்ளன “

  • அனு
Please complete the required fields.
Back to top button
loader