நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் தமிழ்நாடு முதலிடம் : ஜல்சக்தி அமைச்சகம் !

ந்தியாவில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட 9.45 லட்சம் நீர்நிலைகளில் 18,691 நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமான ஆக்கிரமிப்புகள் தமிழ்நாட்டில் பதிவாகி இருப்பதாக ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை குறித்த மாநில வாரியான தரவுகள், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் எவ்வளவு நீர்நிலைகள் குறைந்துள்ளன, கடந்த 3 ஆண்டுகளாக மாநில வாரியாக நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, மீட்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை என நீர்நிலைகள் தொடர்பான தகவல்களை வேண்டி காங்கிரஸ் கட்சியின் எம்.பி சம்ஷர் சிங் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மார்ச் 14-ம் தேதி ஒன்றிய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் பிஸ்வேஷ்வர் தூடு ராஜ்யசபாவில் அளித்த பதிலில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட 9.45 லட்சம் நீர்நிலைகளில் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அவற்றில், 18,691 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன ” என மாநிலவாரியான தகவலை அளித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள 1,06,957 நீர்நிலைகளில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.  தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக, ஆந்திராவில் 3,920 நீர்நிலைகளும், தெலங்கானாவில் 3,032 நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அளவில் நீர்நிலைகள் உள்ள மாநிலங்களாக ஆந்திராவில் 1,90,777, அசாமில் 1,72,492 , ஜார்க்கண்ட் 1,07,598 , தமிழ்நாடு 1,06,957 , இமாச்சலப் பிரதேசத்தில் 88,017 மற்றும் தெலங்கானாவில் 64,056 நீர்நிலைகள் உள்ளன.

2021 செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம், ” தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளன, அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர்நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் ” என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றங்கள் அடிக்கடி வெளியிடும் உத்தரவுகளை கேட்டு வருகிறோம். சமீப சில ஆண்டுகளாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் செய்திகள் வெளியாகி வந்தாலும், அதிக அளவிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தமிழ்நாட்டில் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Link : 

MINISTRY OF JAL SHAKTI,

Please complete the required fields.




Back to top button
loader