This article is from Jun 15, 2022

வாட்ஸ் அப் வதந்திகளை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் சீமான் !

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்புகளில், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலாவும் போலியானச் செய்திகளை உண்மை என நினைத்துப் பேசி வருவதை பார்க்க முடிகிறது.

1.பேருந்து கட்டணம் உயர்வு : 

ஜூன் 11-ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், திமுக அரசின் ஓராண்டு சாதனை என்ன என்று நீங்கள் கூறுங்கள் என செய்தியாளரை பார்த்து கேட்டார். இதற்கு பெண்களுக்கு உள்ளூர் பேருந்தில் இலவச பயணம் எனப் பதில் அளித்தார்.

youtube link 

அதற்கு, ” பக்கத்தில் இருக்கும் என் மனைவிக்கு இலவசம், எனக்கு 4 மடங்கு கட்டணம் உயர்வு. பரவாயில்லையா. இலவசம் நான் கேட்டேனா, முதலில் பேருந்தை சரியாக வையுங்கள் ” எனப் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது வரை தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை.

மேலும் படிக்க : மே 18 முதல் உயரும் பேருந்து கட்டண விவரங்கள் எனப் பரவும் செய்தி உண்மையா ?

கடந்த மாதம் பேருந்து கட்டணத்த தமிழக அரசு உயர்த்தப்போவதாக 2018-ல் வெளியான பழைய செய்தியை வைத்து சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பி இருந்தனர். மேலும், பேருந்து கட்டணம் உயர்வது தொடர்பாக பரவிய தகவலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மறுத்தும் இருந்தார்.

2.யோகி ஆதித்யநாத் வாக்குக்கு பணம் : 

youtube link 

ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், ” உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அமர்ந்து கொண்டு இருக்க மக்கள் வரிசையாக அவர் காலில் விழுந்து விட்டு வாக்குக்கு பணத்தை வாங்கி விட்டு சென்ற வீடியோ இருக்கு ” எனப் பேசி இருப்பார்.

சீமான் குறிப்பிட்ட வீடியோ, ” யோகி ஆதித்யாநாத் முதல்வராக இருந்த போது எடுக்கப்பட்டது அல்ல. 2012 ஏப்ரல் மாதம் கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக யோகி ஆதித்யநாத் இருந்த போது, அவரது தொகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் எரிந்தததால் குடும்பத்திற்கு ரூ.1,00௦ – 2,000 வழங்கிய போது எடுத்த வீடியோ என வைரல் செய்யப்பட்ட வீடியோவை பதிவிட்ட வினய் குமார் என்பவர் தி குயிண்ட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

3. நீரவ் மோடி 500 கோடி : 

மேற்காணும் அதே வீடியோவில் சீமான் பேசுகையில், ” நீரவ் மோடி ரூ .11,700 கோடியை  அடிச்சுட்டு வெளிநாட்டுக்கு போகும் போது ரூ.500 கோடி கைமாறிய பிறகுதான் பாரதிய ஜனதா என்னை தப்பிக்க விட்டுச்சு என சொன்னது இருக்கா இல்லையா ” எனப் பேசியுள்ளார்.

மேலும் படிக்க : 13,000 கோடியில் 32% மட்டுமே தனக்கு கொடுக்கப்பட்டது என நீரவ் மோடி கூறினாரா ?

ரூ.13,000 கோடியில் 32% மட்டுமே தனக்கு கொடுக்கப்பட்டது, மீதமுள்ள தொகை பாஜக தலைவர்கள் எடுத்துக் கொண்டதாக நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டது. இதேபோல், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பிக பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.500 கோடி வழங்கியதாக மாற்றி மாற்றி ஆதாரமற்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர்.

4. திமுக எம்.பி செந்தில்குமார் : 

மே 22-ம் தேதி சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” திமுகவின் எம்.பி செந்தில்குமார், பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் காக்கி சட்டையில் உதயநிதி அவர்களை பார்த்த போது மெய்சிலிர்த்து பெரியாரை பார்த்த மாறி இருக்கிறது எனக் கூறி உள்ளதாக ” பேசி இருந்தார்.

மேலும் படிக்க : திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி சீமான் செய்தியாளர்களிடம் சொன்ன பொய் செய்தி !

ஆனால், எம்.பி செந்தில்குமார் பற்றி சீமான் கூறியது பொய் செய்தி. அதற்கு முன்பாக உதயநிதி பற்றி ஊடகவியலாளர் செந்தில்வேல் அப்படி கூறியதாக போலியான போலியான ட்வீட் ஒன்று பரவியது. அதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதை வைத்து திமுக எம்.பி செந்தில்குமார் என சீமான் தவறான தகவலைப் பேசி இருக்கிறார்.

சமீபகாலங்களில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் வாட்ஸ் அப் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய போலியான செய்திகளையும், பதிவுகளையும் மேற்கொள்காட்டி பேசி வருவதை அதிகம் பார்க்க முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader