7 நாட்கள் கழித்து மெசேஜ்கள் தானாக அழியும்.. வாட்ஸ் ஆப்பின் புதிய ஆப்ஷன் போலிச் செய்திகளை தடுக்க உதவுமா ?

போலிச் செய்திகள் அதிகளவில் சுற்றிக் கொண்டிருக்கும் தளமாக வாட்ஸ் ஆப் இன்றுவரை இருந்து வருகிறது. ஒரு செய்தியை 5 முறைக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முடியாது, ஃபார்வர்டு செய்தி எனக் குறிப்பிடுவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் செயல்படுத்தி வந்தாலும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், ” மெசேஜ்களை காணாமல் போகச் செய்வது (Disappearing Messages)” என்கிற புதிய ஆப்ஷனை ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு மெசேஜ் அனுப்பப்பட்ட 7 நாட்கள் கழித்து அதனை அனுப்பியவருக்கும், பெற்றவருக்கும் என இருவரின் செல்போனில் இருந்தும் மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும்.
இந்த செட்டிங் ஆப்ஷன் முன்பு அனுப்பிய அல்லது சேட்டுகளில் பெற்ற செய்திகளைப் பாதிக்காது. தனிப்பட்ட சேட்டுகளில், பயனர்கள் மெசேஜ்கள் காணாமல் போகும் ஆப்ஷனை ஆன் செய்யலாம். குரூப் சேட்டுகளில், அட்மின் மட்டுமே அதனை செய்ய முடியும். இது சேட்டுகளை தனிப்பட்ட முறையில் பாதுகாக்க உதவும் என வாட்ஸ் ஆப் கூறுகிறது.
போலிச் செய்திகளை தடுக்குமா ?
வாட்ஸ் ஆப்பின் இத்தகைய புதிய ஆப்ஷன் ஆல் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க வாய்ப்புகள் மிகக் குறைவு எனத் தோன்றுகிறது. ஏனெனில், அதை ஒரு ஆப்ஷனாக கொடுத்து இருப்பதால் தேவையான பயனர்கள் மட்டுமே ஆன் மற்றும் ஆஃப் செய்து கொள்வர்.
- காணாமல் போகும் செய்தியை அந்த ஆப்ஷன் ஆஃப் செய்யப்பட்ட சேட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தால் சேட்டில் இருந்து காணாமல் போகாது எனக் கூறப்பட்டுள்ளது.
- ஃபார்வர்டு செய்யப்பட்ட செய்தியை அழிந்து போவதற்கு முன்பாக ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து கொள்ளலாம்.
- மெசேஜ் அழிவதற்கு முன்பாக தனியாக சேமித்து வைக்க முடியும்.
வாட்ஸ் ஆப்பின் புதிய ஆப்ஷன் நவம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் செய்த பழைய சேட்டுகள், அழிக்க மறந்த மெசேஜ்கள் ஆகியவை தானாகவே 7 நாட்களுக்கு பிறகு அழிந்து போகும்
இதற்கு முன்பாக, போலிச் செய்திகளை அடையாளம் காணவும், ஃபார்வர்டு செய்யப்படும் மெசேஜ் குறித்த செய்தியை அறியவும் ” தேடல் ” செய்யக்கூடிய புதிய அப்டேடை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்தது.
மேலும் படிக்க : போலிச் செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புதிய அப்டேட் !
இது பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின்,யுகே மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வெப் உள்ளிட்டவையின் லேட்டஸ்ட் வேர்சனில் முதல் கட்டமாக தொடங்கி உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. போலிச் செய்திகளை தடுக்க புதிய ஆப்ஷன்களையும், அப்டேட்களையும் வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
Link :
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.