ஏழைகளுக்கு மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் வழங்கப்பட்டதா ?

” ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு இரவில் வந்த லாரி நிறைய கோதுமை மாவு 1 கிலோ பாக்கெட்களாக நிறைந்து இருந்தது. எல்லோரும் வாங்க 1 பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் எனக் கூவினர். 1 கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து வரிசையில் நிற்கவில்லை. ஆனால் பசிக்கொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி வீட்டில் நாளைக்கு சாப்பாட்டிற்கு என்று வைத்து விட்டு உறங்கி விட்டார்கள். காலையில் மாவை பிரித்த போது ஒவ்வொரு பாக்கெட்களில் ரூபாய் 15000 இருந்தது. ஆக, மனித ரூபத்தில் இறைவன் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றான் ” என வீடியோ உடன் சமூக வலைதளங்களில் வேகமாக ஓர் தகவல் பரவி வருகிறது.
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட மாவு பாக்கெட்களில் 15000 ரூபாய் இருந்ததாக பரவும் தகவலை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் பாராட்டத் தோன்றும். எனினும், பரவும் தகவல் உண்மையா என்ற கேள்வி எழுந்தது. ஆகையால் உண்மையை அறிய தீர்மானித்தோம்.
மற்றொரு தமிழ் பதிவில், அதே ஃபார்வர்டு தகவல் உடன் பாலிவுட் நடிகர் அமீர்கான் உடைய புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் 15,000 வழங்கியது வேறு யாரும் இல்லை, நடிகர் அமீர்கான் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மற்றொரு டிக்டாக் வீடியோவில் இந்தியில் அமீர்கான் புகைப்படத்துடன் பேசும் பெண், ஃபார்வர்டு தகவலில் கூறிய சம்பவம் நடந்தது மும்பையில் குடிசைவாழ் மக்களின் பகுதியில் எனக் கூறி இருக்கிறார். இதேபோல், அமீர்கான் ஏழைகளுக்கு 15000 ரூபாய் வழங்கினார் என பல இந்தி யூடியூப் சேனல்கள் வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இப்படி டிக்டாக், யூடியூப், முகநூல் போன்றவற்றில் மட்டுமே பகிரப்படும் தகவலில் முரண்பாடுகளும் இருந்தன.
உண்மை என்ன ?
டிக்டாக் வீடியோவில், ஒருவர் இந்தியில் பேச பக்கத்தில் மாவுக்குள் இருந்து பணத்தினை எடுக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால் இந்த வீடியோ குறித்து தேடிய பொழுது @tannu00786 எனும் டிக்டாக் ஐடி-யை கண்டறிந்தோம்.
அதில் வைரல் வீடியோ இடம்பெற்று இருந்தது. அதனுடன் khansaheb028 எனும் மற்றொரு ஐடி-யின் லிங்க் இருந்தது. அதில் சென்று பார்க்கையில், அந்த நபர் பேசும் வீடியோ மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அதில், அவர் ஃபார்வர்டு தகவலை கூறுகிறார், எனினும் அமீர்கான் குறித்து ஏதும் கூறவில்லை. @tannu00786 எனும் ஐடி-யில் தான் மாவில் இருந்து பணத்தை எடுக்கும் தனி வீடியோ இணைக்கப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. பிரத்யேகமாக செய்து இருப்பார்கள் எனது தோன்றுகிறது.
மேற்கொண்டு தேடுகையில், வைரலான டிக்டாக் வீடியோவை மையமாக வைத்து ஒன் இந்தியா இந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அதில், ஏழைகளுக்கு பணம் வழங்கிய சம்பவம் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. சூரத்தின் ராண்டெர் பகுதிக்கு இரவில் வந்த ட்ரக் மூலம் 500-க்கும் மேற்பட்ட1 கிலோ கோதுமை மாவு பாக்கெட் உடன் 15000 வழங்கப்பட்டு உள்ளதாக வீடியோவில் பேசும் நபர் கூறியுள்ளதாக இடம்பெற்று இருக்கிறது. மேலும், உதவி செய்தது யார் எனக் குறிப்பிடவில்லை மற்றும் அமீர்கான் பெயரும் இடம்பெறவில்லை.
சம்பவம் சூரத்தில் உள்ள ராண்டெர் எனும் நகரத்தின் பகுதியில் நிகழ்ந்ததாக டிக்டாக் வீடியோவில் பேசிய நபர் கூறியுள்ளதாக ஒன் இந்தியா இந்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த வீடியோ உடன் பரப்பப்படும் தகவலில் டெல்லி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராண்டெர் நகரத்தின் காவல் நிலையத்திற்கு யூடர்ன் குழுவில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பரவிய செய்தியை அப்படியே கூறினர். கோதுமை மாவு பாக்கெட் மூலம் ஏழை மக்களுக்கு 15,000 ரூபாய் விநியோகம் செய்தது உண்மை, எனினும் ஏழை மக்களுக்கு பணத்தினை வழங்கியது யார் என தெரியவில்லை எனத் தெரிவித்து இருந்தனர். மேலும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது என்ற விவரம் கூறவில்லை.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய பொழுது, ” இல்லை, இதற்கு எதற்கு விசாரணை. ட்ரக்கில் வந்த யாரோ சில கோதுமை பாக்கெட்களை விநியோகித்து உள்ளனர். பின்னர், மூடப்பட்ட பாக்கெட்களில் 15,000 ரூபாய் இருப்பது தெரிய வந்துள்ளது. எங்களுக்கு தெரிந்த தகவலின் படி, பணம் வைக்கப்பட்ட பாக்கெட்கள் அனைத்தும் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், யார் இதை செய்தது, ட்ரக் எங்கிருந்து வந்தது குறித்து யாருக்கும் ஏதும் தெரியவில்லை ” எனக் கூறினர்.
ராண்டெர் நகரில் ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் பணத்தினை வைத்து கொடுத்தது உண்மை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னணி செய்தி ஊடங்களில் பதிவாகவில்லை.
தன்னை யாரென அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உதவி செய்பவர்கள் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக டெல்லியில் நடந்த வன்முறையால் தங்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளில் தங்கி இருந்த மக்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தில் ஆளுக்கு 500 ரூபாய் வழங்கினார். ஆனால், அந்த வீடியோ தவறான தகவல் உடன் பரப்பப்பட்டது.
முடிவு :
நம்முடைய தேடலில், ஏழை மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் பணத்தினை மறைத்து வைத்து விநியோகித்த சம்பவம் சூரத்தின் ராண்டெர் நகரில் நிகழ்ந்து உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அதற்காக வைரல் செய்யப்படும் வீடியோ டிக்டாக்விற்காக செய்யப்பட்டது மற்றும் பிற பகுதியில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். மேலும், இதை நடிகர் அமீர்கான் செய்ததாக கூறும் தகவல் தவறானது ” என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.