இந்தியாவில் மாதவிடாய் விடுமுறை சாத்தியமா? ஓர் அலசல் !

மாதவிடாய் விடுமுறை குறித்த அறிமுகமும் வரலாறும் !

கடந்த டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தில் பெண்களின் மாதவிடாய் பாதுகாப்பு குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினரான மனோஜ் குமார் ஜா கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் என்பது எல்லா பெண்களுக்கும் இயற்கையானது. அதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு தேவையில்லை. மாதவிடாய் என்பது குறைபாடு இல்லை. மேலும் ஒரு சிறிய அளவிலான பெண்கள் மட்டுமே டிஸ்மெனோரியா போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்படுகின்றனர்.  இவற்றை மருந்துகளால் சரிபடுத்தமுடியும்”, என்று கூறியுள்ளது நாடு முழுவதும் விவாதத்திற்கான பேசுபொருளாக மாறிவுள்ளது.

மாதவிடாய் விடுமுறை – அறிமுகமும் வரலாறும்:

பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது 23 முதல் 35 நாட்களுக்குள் நடைபெறும். இந்த சுழற்சியின் முடிவாக கருப்பையிலிருந்து வெளிப்படும் இரத்தப்போக்கு சுமார் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வும் விடுமுறையும் தேவை என்ற அறிவிப்பு முதன்முதலில் சோவியத் ரஷ்யாவில் 1920 மற்றும் 1930-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கூலி வேலை செய்து வந்த மாதவிடாய்ப் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்பது பற்றிய யோசனை உருவானது. இதே போன்று ஜப்பானிலும் 1920-களின் பிற்பகுதியில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தொழிற்சங்கத்தில் முன்மொழியப்பட்டு, 1947-ல் சட்டமாக மாற்றப்பட்டது. 

இந்தோனேசியாவில் 1948இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விடுப்பு கொள்கை, மாதவிடாய் வலியை அனுபவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் சுழற்சியின் முதல் இரண்டு நாட்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறி 2003-இல் திருத்தியது. பிலிப்பைன்ஸில், தொழிலாளர்கள் மாதத்திற்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுமுறைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

தைவானில் வேலைவாய்ப்பில் பாலின சமத்துவச் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் அரைநாள் ஊதியத்துடன், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். தென் கொரியாவில், தொழிலாளர் சட்டத்தின் 73 வது பிரிவின் கீழ் Monthly physiologic leave என்ற பெயரில் அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் விடுமுறை அளிக்கிறது.

வியட்நாமின் தொழிலாளர் சட்டத்தில் வித்தியாசமான அணுகுமுறை உள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின் ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் ஓய்வு நேரத்தை வழங்குகிறது. இருப்பினும், 2020 இல், மாதத்திற்கு மூன்று நாள் விடுப்பு சேர்க்கப்பட்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. மேலும் இங்கு விடுப்பு எடுக்காதவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியாவில் மாதத்திற்கு ஒரு நாள், Mother’s day என்ற பெயரில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழகுகிறது. மேலும் கடந்த பிப்ரவரி 16 அன்று, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது.

இந்தியாவில் மாதவிடாய் விடுமுறை:

இந்தியாவில் பெண்களுக்கான மாதவிடாய் விடுப்புக் கொள்கை முதன்முதலில் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரிபுனித்துராவில் உள்ள பள்ளியில் 1912-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாதவிடாய் காலத்தில் ஆண்டுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத அனுமதிக்க வழங்கப்பட்டது.

இதே போன்று பீகாரில் ஊழியர்களுக்கு மாதந்தோறும் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டம் 1992-ல் நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்று வரையிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை பீகார் பெற்றது. 

மேலும் கடந்த ஜனவரி 19, 2023 அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் 2 நாட்கள் மாதவிடாய் விடுப்பு மற்றும் பணியிடத்தில் சிறந்த ஓய்வு வசதிகளை வழங்கும் “மாதவிடாய் நன்மைகள் மசோதா, 2017″ அருணாச்சல பிரதேத்தில் கடந்த 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பீகார், கேரளா தவிர வேற எந்த மாநிலங்களும் மாதவிடாய் விடுப்பு கொள்கையை நடைமுறைபடுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களான Gozoop மற்றும் Culture Machine, இந்தியாவில் கடந்த 2017-இல் First day of period leave (FOP) என்று சொல்லப்படுகின்ற மாதவிடாய் விடுமுறையை முதன் முதலில் அறிவித்தது. Zomato நிறுவனம், அதன் பெண்கள் மற்றும் திருநங்கை ஊழியர்களுக்காக, வருடத்திற்கு 10 நாட்கள் வரையில் மாதவிடாய் விடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Swiggy மற்றும் Byjus போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் விடுமுறை அவசியம் தானா?

மாதவிடாய் பெண்களுக்கு இயற்கையான ஒன்றாக இருந்தாலும், மாதவிடாய் காலங்களின் போது அவர்களுக்கு வயிற்று வலி, முதுகுவலி, தசைப்பிடிப்பு, மூட் ஸ்விங், கிரேவிங்ஸ் (Cravings) போன்ற சாதாரண தொந்தரவுகளுடன்,  டிஸ்மெனோரியா போன்ற கடுமையான நோய்களும் ஏற்படுவதால் அவர்களுக்கு பணியின் போது இரட்டை சுமை ஏற்படுகிறது. மேலும் இந்தியாவில் மாதவிடாயை எதிர்கொள்பவர்களில் 20% பேர் `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னையாலும், 25 கோடி பேர் `எண்டோமெட்ரியோசிஸ்’ பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய்க்கான எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் எப்போதும் போல் தினசரி வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். இது பெண்களின் உடலமைப்பை பொறுத்தே மாறுபடுகிறது. மேலும் 2020-இல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தனியார் நிறுவன கணக்கெடுப்பின் படி, 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 23 சதவீத பேரும், 30 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களில் 15.18% பேரும், பதின்பருவ பெண்களில் 17% பேரும் மாதவிடாய் காலங்களில் உடல்ரீதியான பாதிப்புகளை அனுப்பவிப்பதாக கூறுகின்றது.

மேலும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) 2011-ல் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 13% பெண்கள் மட்டுமே மாதவிடாய் வரப்போவதற்கான முன் அறிகுறிகளை அறிந்திருக்கிறார்கள். எனவே ஒருவேளை அலுவலகத்திற்கு வந்த பின்பு பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திருப்பி சென்று ஓய்வு எடுப்பார்களா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது? எனவே அவர்களுக்கு வியட்நாமில் வழங்கப்பட்டுள்ளது போல அலுவலகத்திலேயே ஓய்வு இடைவேளை கொடுக்கலாம்.

இதே போன்று ‘தேசிய குடும்ப நல ஆய்வு- 4 & 5‘ -இன் படி, இந்தியாவில் இன்றும் திரிபுரா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், குஜராத், மேகாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் 70% அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பெண்கள் நாப்கின் போன்ற மாதவிடாய் தயாரிப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 60%-க்கும் குறைவான எண்ணிக்கையில் சரியாக மாதவிடாய் பொருட்களை பதிவு செய்யாத மாநிலமாக பீகார் இருந்து வருகிறது. இதில் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இந்த எண்ணிக்கை 99%-ஆக இருந்து வருகிறது. 

இதன் மூலம் இந்தியாவில் இன்றும் பல பகுதிகளில் பெண்கள் நாப்கின்களுக்கு மாற்றாக சாம்பல்களையும், கிழிந்த துணிகளையுமே பயன்படுத்தி வருவதை அறிய முடிகிறது. இந்நிலையில் இத்தகைய பின்தங்கிய மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கொடுக்கப்பட்டால் அவர்கள் சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுவதுடன், வீட்டிற்குள் அடைக்கப்படும் பழைய சூழல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே ஆண் பெண் பாலின பேதமும், வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்புகளும் வழங்கப்படாத இந்தியா போன்ற நாடுகளில், மாதவிடாய் விடுப்பு நிச்சயம் எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.

அதே சமயம் டிஸ்மெனோரியா போன்ற கடுமையான மாதவிடாய் நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் ஓய்வு அவசியமானது. எனவே மாதவிடாய் விடுப்பு என்பது அந்தந்த பெண்களின் உடலமைப்பை பொறுத்து மாறுபடுவதால், அவர்களின் விருப்பத்தின் பெயரில் மட்டுமே வழக்கப்பட வேண்டும். இது தவிர மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கான கழிவறை வசதி அனைத்துப் பெண்களுக்கும் பணியிடங்களில் கிடைக்கக்கூடிய சூழலும் ஏற்படுத்தி தரவேண்டியதும் மிக அவசியமானது.

மேலும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக மகப்பேறு மருத்துவர்களும், சட்ட வல்லுநர்களும், உளவியல் ஆய்வாளர்களும் கலந்தாலோசித்தே தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் சாத்தியப்படுமா மாதவிடாய் விடுப்பு?

மாதவிடாய் விடுப்புகள் குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துகள் குறித்து பொன்னேரி அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அனுரத்னாவிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிய தொனி எனக்கு சரியாக படவில்லை என்றாலும், அவர் தெரிவித்த உள் கருத்துகளைத் தான் நானும் வலியுறுத்துவேன்.

ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், மாதவிடாயின் காரணமாக அதிக வலி ஏற்பட்டு என்னிடம் மருத்துவமனைக்கு வருபவர்கள் 2% முதல் 3% பெண்கள் மட்டுமே. மற்ற பெண்கள் அனைவரும் இயல்பாக இருக்கக்கூடியவர்கள் தான். மேலும் இந்த விடுப்பை காரணம் காட்டி மாதவிடாயின் போது பெண்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிடுவார்கள்.

இப்போது தான் பெண்கள் இராணுவத்திற்கும், விமானம் ஓட்டவும் சென்று கொண்டிருக்கிறோம், இவ்வாறு பெண்ணடிமை சூழலுக்கு எதிராக பெண்கள் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இத்தகைய சூழலில், எனக்கு கட்டாய ஓய்வு என்று அறிவித்தால், நான் “Unfit” என்று கூறி என்னை ஒதுக்கி விடுவார்கள். மாதவிடாயில் இரத்த போக்கு ஏற்படுவதால் பெண்களுக்கு இழப்பு ஏற்படுவது உண்மை தான், ஆனால் இந்தியா போன்ற நாட்டில் நிலவி வரும் பின்தங்கிய சூழல்களால் இத்தகைய வலிகளையும், இழப்பையும் கூட தாங்கிக்கொள்ள கூடிய ஒரு நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்கா போன்ற ஆண் பெண் பேதமற்ற ஒரு நாட்டில் மாதவிடாய் விடுப்பு கொடுத்தால் நான் கண்டிப்பாக விடுப்பை ஏற்றுக்கொள்ள சொல்வேன். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் மாதவிடாய் விடுப்பு ஏற்றுக்கொள்ள எனக்கு பயமாக இருக்கிறது. மேலும் நாளடைவில் மாதவிடாய் விடுப்பில் பெண்கள் எதுவும் செய்ய முடியாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதன் மூலம் மீண்டும் பெண்கள் “மூன்று நாட்களுக்கு வெளியே வரக்கூடாது” என்ற பழைய சூழலுக்கு வீட்டிற்குள்ளேயே ஒதுக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இதன் மூலம் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தாலும், மாதவிடாய் குறித்த சுகாதாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது என்பது அறிய முடிகிறது..!!


ஆதாரங்கள்:

https://time.com/6105254/menstrual-leave-policies/

https://thewire.in/health/what-nfhs-5-data-tells-us-about-indian-womens-use-of-period-products#:~:text=Percentage%20of%20women%20using%20period,a%20figure%20lower%20than%2060%25.

https://timesofindia.indiatimes.com/city/kolkata/periods-force-girls-to-skip-school-reveals-survey/articleshow/100579249.cms

https://www.thehindu.com/sci-tech/health/one-in-five-indian-women-suffers-from-pcos/article29513588.ece

https://www.hindutamil.in/news/opinion/columns/954744-menstrual-leave-issues-in-india-1.html

https://www.livemint.com/Politics/v7i1HSjD2VXYrfWlQdL7aM/Denial-of-menstrual-hygiene-to-Indian-women-holds-back-econo.html

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader