தாலி விவகாரம்: நீதிமன்றம் அப்படியா சொன்னது ?

” ஒரு மனைவி தாலியைக் கழற்றி வைப்பது கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் ”  என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளதாக செய்திகளில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார் என்பவர் பள்ளி ஆசிரியரான தன்னுடைய மனைவி தன் நடத்தையை சந்தேகிப்பதாகவும், தான் கட்டிய தாலியை அணியாமல் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறி 2014-ல் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால், குடும்பநல நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வி.எஸ்.வேலுமணி மற்றும் எஸ்.செளந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்விற்கு விசாரணைக்கு வந்தது.

கணவன் மனைவி இடையே சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், பிரிந்து இருக்கும் போது தாலியை கழட்டி வைத்ததாக சிவகுமார் தெரிவித்து உள்ளார். அவரின் மனைவி, தனது கணவர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பதாகவும், மகளின் எதிர்காலம் கருதி அவருடன் வாழ விரும்புவதாகவும் சிவகுமாரின் மனைவி கூறியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பிறகு நீதிபதிகள்  வி.எஸ்.வேலுமணி மற்றும் எஸ்.செளந்தர் அளித்த தீர்ப்பில், ” தன் கணவரின் குணத்தை சந்தேகிப்பது, அவரின் அலுவலகத்திற்கு சென்று சண்டையிடுவது, சக ஊழியருடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியது உள்ளிட்டவை இந்து திருமண சட்டம் 13(1) என்ற பிரிவின் கீழ் வருகிறது.

தான் தாலி செயினை மட்டுமே அகற்றியதாகவும், திருமாங்கல்யம் இன்னும் தன்னிடமே இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதற்காக அவரின் வழக்கறிஞர் வாதாடுகையில், இந்து திருமண சட்டத்தின் பிரிவு 7-ன்படி ஒரு பெண் தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், ஒருவேளை தாலியை அகற்றியது உண்மையாக இருந்தாலும் அது திருமண பந்தத்தை பாதிக்காது எனப் பேசியுள்ளார். ஆனால், திருமண சடங்குகளில் தாலிக் கட்டுவது இன்றியமையாத சடங்கு என்பது அனைவரும் அறிந்ததே ” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, 2௦16ல் வல்லபா v/s ராஜசபாகி வழக்கின் தீர்ப்பில், தாலியைக் கழற்றி வங்கி லாக்கரில் வைத்துள்ளதை அந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார். கணவன் உயிருடன் இருக்கும்வரை எந்த ஒரு இந்துப் பெண்ணும் தாலியை அகற்ற மாட்டார். மனைவியின் கழுத்தில் உள்ள தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சியைக் குறிக்கும் புனிதமான விசயம். கணவனின் மரணத்திற்கு பிறகுதான் அகற்றப்பட வேண்டும். எனவே, மனுதாரர், மனைவியால் தாலி அகற்றப்பட்டதை மன உளைச்சலை பிரதிபலிக்கும் செயலாகக் கூறலாம். ஏனென்றால், அது வேதனையை உண்டாக்கி, கணவரின் உணர்வுகளைப் புண்படுத்தும் ” எனக் கூறப்பட்டதை குறிப்பிடுவது பயனுள்ளது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
இறுதியாக, ” தாலியை அகற்றுவது பெரும்பாலும் சம்பிரதாயமற்ற செயலாகக் கருதப்படுகிறது. திருமண உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்க தாலியை அகற்றுவது போதுமானது என நாங்கள் கூறவில்லை. ஆனால், பிரதிவாதியின் சொல்லப்பட்ட செயல், இருதரப்பின் நோக்கங்களைப் பற்றி ஒரு அனுமானத்தை வரைவதற்கான ஒரு சான்றாகும். பிரிவின் போது தாலிச் சங்கலியை அகற்றிய செயல், பதிவில் கிடைக்கப்பெற்ற பல்வேறு சான்றுகள், இரு தரப்பினருக்கும் சமரசம் செய்தும் திருமண உறவை தொடரும் எண்ணம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வருமாறு எங்களை நிர்பந்திக்கிறது ” எனத் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.
.
தாலியைக் கழற்றியது தொடர்பான விவாதத்தில், மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என மற்றொரு வழக்கில் வெளியான தீர்ப்பையே மேற்கொள்காட்டி உள்ளனர் நீதிபதிகள். இந்த விவாகரத்து வழக்கில், தாலி அகற்றப்பட்டது திருமண உறவை முறித்துக் கொள்ளும் நோக்கத்தை கருத்தில் கொள்ள மட்டுமே நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button