குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்ணின் வைரல் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?

முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒருவர் பெண் குழந்தையின் முடியை பிடித்து இழுத்து தாக்குவது, கையில் கிடைப்பதை கொண்டு அடிப்பது என கண்மூடித்தனமாக கோபத்தை வெளிபடுத்தி இருக்கிறார். சில நாட்களாக முகநூலில் பரவிய இத்தகைய வீடியோ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளை கோபமடையச் செய்து இருக்கிறது. குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்ணை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பலரும் கம்மெண்ட்கள் மற்றும் ஷேர்களை செய்து வருகின்றனர். இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோவை பதிவிடுபவர்கள் இச்சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது, இந்தியாவில் நடந்தது என பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா அருகே நிகழ்ந்துள்ளது. வைரலாகும் வீடியோ குறித்து குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி மூலம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியை சேர்ந்த JK Media என்ற செய்தி நிறுவனம் குழந்தை தாக்கப்படும் வீடியோ சம்பவம் கதுவா அருகே உள்ள நக்ரி என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது என நவம்பர் 16-ம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டு உள்ளனர்.
JK Media facebook post | archived link
விசாரணையில் 5 வயதான பெண் குழந்தையை கொடூரமாக தாக்குவது குழந்தையின் தாய் என்றும், மறைமுகமாக வீடியோவை எடுத்தது குழந்தையின் தந்தை என்றும் கூறப்படுகிறது . மேலும், குழந்தையின் பெற்றோர் காவல்துறையினர் மூலம் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும் வெளியாகி இருக்கிறது.
குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இந்த வீடியோ பாகிஸ்தான் என்றும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததாகவும் பகிர வேண்டாம்.
மேலும் படிக்க : குழந்தையைக் கொடூரமாக தாக்கும் பெண் ?| தமிழகப் பள்ளி ஆசிரியரா?
இதற்கு முன்பாக, பெண் குழந்தையை தமிழக பள்ளி ஆசிரியர் கடுமையாக தாக்கியதாக தவறாக வீடியோ ஒன்று வைரலாகியது. ஆனால், அந்த சம்பவம் 2017-ல் மலேசியாவில் நடந்தது, அது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
எத்தனை கோபங்கள் இருந்தாலும் குழந்தையை கண்மூடித்தனமாக தாக்குவது, சித்ரவதை செய்வது உள்ளிட்டவை தண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.