வைரல் வீடியோவில் இடம்பெற்ற மூதாட்டி மீது வழக்குப்பதிவு எனப் பரவியத் தவறான தகவல்.. நடந்தது என்ன ?

திமுகவின் உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி மேடையில் பேசுகையில், பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதை ஓசியில் போறீங்க எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களுக்கான முன்னோடித் திட்டத்தை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியதாகப் பெரும் கண்டனங்கள் எழுந்தது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு பிறகு அரசு பேருந்தில் பயணம் செய்த வயதான மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் இலவச பயணச்சீட்டு வேண்டாம், ஓசியில் வரமாட்டேன் காசு கொடுத்து பயணம் செய்வேன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பிருத்திவிராஜ் என்பவர் துளசியம்மாள் என்ற மூதாட்டியை அழைத்து வந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள பாலத்துறையில் அரசு பேருந்தில் நடத்துனரிடம் இலவச பயணச்சீட்டு வேண்டாம் எனக் வாக்குவாதத்தில் எடுபட வைத்து வீடியோ எடுத்ததாக திமுக தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியதால், பிரச்சனை செய்ய வைத்து வீடியோ வெளியிட்டதாகக் கூறி திமுகவினர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் விசாரணையில் மூதாட்டி துளசியம்மாள் அதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், அவர் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சன் நியூஸ், நியூஸ் 18 உள்பட முன்னணி செய்தி ஊடகங்களில் வெளியாகியது.

மூதாட்டியின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருப்பதாக வெளியான செய்தியையடுத்து, ஆளும் அரசின் மீது பல்வேறு கண்டனங்கள் எழத் தொடங்கின. இதுபற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.

இதுகுறித்து, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் விளக்கம் அளிக்கையில், ” சமூக வலைதளங்களில் கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக பரவி வருகிறது, அது முற்றிலும் பொய்யான தகவல். அதிகாரப்பூர்வமாக துளசியம்மாள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

கோவை எஸ்.பியின் விளக்கத்திற்கு பிறகு, ” குற்றத்தை பற்றி விசாரிப்பதற்கு முன், சாதியை முதலில் பதிவு செய்துள்ளது காவல்துறை. வழக்கு பதிவு செய்துவிட்டு இல்லை என சொல்கிறார் மாவட்ட எஸ்பி ” என ஆவணம் ஒன்று பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. 

அந்த ஆவணத்தில் மதுரக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தவரின் விவரங்கள் மற்றும் யார் மீது புகார் அளிக்கப்பட்டதோ அவர்களின் விவரங்களும், சாதிப் பெயரும் இடம்பெற்று இருக்கின்றன. அதில், துளசியம்மாள் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை என இடம்பெற்று இருக்கிறது.

இதுகுறித்து புகார் அளித்த மதுக்கரை திமுக பிரமுகரிடம் பேசுகையில், புகார் அளித்தது தொடர்பாக இன்னும் சிஎஸ்ஆர் காப்பி எனக்கு அளிக்கப்படவில்லை. ஆகையால் அதுபற்றி எனக்குத் தெரியாது ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆகையால், இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரிக்கையில், ” இது எஃப்ஐஆர் காப்பி அல்ல. டிஎஸ்ஆர் எனும் அலுவல் பணிக்கான பதிவு(Daily Status Report) மட்டுமே. ஒரு புகார் பெறப்பட்ட பிறகு அவர்களின் விவரங்கள் மற்றும் பின்புலம் உள்ளிட்டவையை விரிவாக எடுத்துக் கூறும் அலுவல்ரீதியாக கையாளப்படும் பதிவேடு ” எனத் தெரிவித்து இருந்தனர்.

இது அலுவல் பணிக்கான பதிவு. இது காவல்துறையில் உள்ளவர்களால் தான் வெளியாகி இருக்கிறது.

கோவை மாவட்ட எஸ்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, செய்தியாளர் ஒருவர் இதுகுறித்து கேட்கையில், அது அதிகாரப்பூர்வமான எஃப்.ஐ.ஆர் அல்ல எனத் தெரிவித்து இருப்பார்.

வைரல் வீடியோ தொடர்பாக அதிமுகவினர் மற்றும் வீடியோவில் இடம்பெற்ற மூதாட்டி உள்பட நால்வர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தவறானத் தகவல் பரவி உள்ளது. மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து உள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader