தமிழ்நாடு அரசு ஒதுக்கிய ரூ7000 கோடியில் 1 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வராதா ?

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூ.1000 அளிப்பது தொடர்பாகத் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இத்திட்டம் குறித்த பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வந்தன.

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டது. அத்தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக மகளிருக்காக அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள் பார்க்கப்பட்டது. குறிப்பாக  மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, அரசு பேருந்தில் மகளிருக்கு இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற திட்டங்கள் இருந்தது. 

Archive link 

மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் இரண்டு கட்டங்களாக 2,20,000 மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால், ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ எனத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை பற்றி எந்த அறிவிப்பும் வெளிவராததால் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் வரும் நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் பேசியிருந்தார்.

2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை.

Archive link 

திமுக இது குறித்து முதன் முதலில் இவ்வாக்குறுதியை வெளியிடும் போது, “தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்” என்றே கூறி இருந்தது. ஆனால், நிதியமைச்சர் சட்டசபையில் ‘தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது’ என அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கு எனக் கூறிவிட்டு, தற்போது தகுதியான மகளிருக்கு என திமுக மாற்றிப் பேசுகிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது, அந்த தகுதியான மகளிர் யார், எவ்வளவு பேர் என்பது குறித்து சட்ட மன்றத்தில் முதல்வர் கூறியிருந்தார்.

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகையில் தங்களது உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும், ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் இத்திட்டம் குறித்த கேள்வியை டிவிட்டரில் முன்வைத்துள்ளார். 

Archive link 

“இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளீர்கள். அதனைக் கொண்டு மாதம் ரூ.1000 என 58 லட்ச பெண்களுக்குத்தான் பணம் தர முடியும். ஒரு கோடி பெண்கள் பயனடைவார்கள். எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

நிதியமைச்சர் இத்திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என சட்டசபையில் அறிவித்தபோதே, எப்போதிலிருந்து நடைமுறைப் படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதில், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்

செப்டம்பர் மாதம் உரிமைத் தொகை அளிக்கத் தொடங்கப்படுகிறது என்றால், தற்போதைய நிதியாண்டான 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அளிக்கப்படும். அதாவது 2023-24 நிதியாண்டில் 7 மாதம் உரிமைத் தொகை அளிக்கப்படும்.

தோராயமாக, மாதம் ஒரு கோடி  மகளிருக்கு 1000 ரூபாய் எனும் பட்சத்தில், ஒரு மாதத்திற்காகும் மொத்த செலவு 1000 கோடி ரூபாய். 7 மாதத்திற்கு 7000 கோடி ரூபாய். இதனைக் கொண்டு பார்க்கையில் அரசு தற்போதைய பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் 7000 கோடி ரூபாய் போதுமான தொகையே. 

ஆனால், அடுத்த நிதியாண்டில் ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை அளிக்க 12,000 கோடி ரூபாய் தேவைப்படும். அதற்கு அரசு எவ்வளவு தொகை ஒதுக்குகிறது என்பது அடுத்த நிதிநிலை அறிக்கையிலேயே தெரியவரும். 

Link :

தி.மு.க. தேர்தல் அறிக்கை – 2021

TNLA_Tamil_Nadu_Budget_2023_2024_Tamil_part_3_Date_20_03_2023

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader