27 வருடங்களைக் கடந்தும் காத்திருக்கும் ‘மகளிருக்கான 33% இடஒதுக்கீடு’.. ஏன் அவசியம் ?
நாடாளுமன்றத்தில் 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா' 1996-லிருந்து 2023 வரை கடந்து வந்த பாதைகளும், நிலுவைக்கான காரணங்களும் இதோ !

சமீபத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் (யூனியன் பிரதேசங்களில் டெல்லிக்கு மட்டும்) உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கும் ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023‘ 128-வது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மகளிருக்கு ஏன் இடஒதுக்கீடு அவசியம் ?
பாலின சமத்துவம் ஏற்பட அரசியலில் பெண்களை முன்னிலைப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும். உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022 இன் படி, பெண்களுக்கு அரசியலில் அதிகாரமளிப்பதில், உலகின் 146 நாடுகளில் 0.267 மதிப்பெண்களுடன் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.
இதேபோன்று பெண்களுக்கான ஐ.நாவின் (UN Women) தரவுகளின் படி பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துதலில் (representation) ருவாண்டா (61%), கியூபா (53%), நிகரகுவா (52%), மெக்சிகோ (50%), நியூசிலாந்து(50%) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (50%) போன்ற ஆறு நாடுகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு அதிகமான இடங்களை வழங்கியுள்ளன என்பது மிகவும் வேதனைக்குரிய நிலையாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, முதல் மக்களவையில் (1952) பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை வெறும் 5% ஆக மட்டுமே இருந்தது, இந்த எண்ணிக்கை தற்போதைய 17-வது மக்களவையில் 14.94% ஆக (2022 தரவுகளின் படி) மட்டுமே அதிகரித்துள்ளது. இது மிகக்குறைந்த வளர்ச்சி. இதே போன்று மாநில சட்டசபைகளிலும் பெண்களின் இருப்பு சராசரியாக வெறும் 8 சதவீதமாக மட்டுமே உள்ளது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், அரசியலில் பெண்கள் மிகவும் பின்னடைந்த நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
எனவே அரசியலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு பல்வேறு நிலைகளில் அதிகாரம் அளிக்கப்படுவதோடு, அவர்களை அதிகமான எண்ணிகையில் அரசியலில் பங்கேற்க வைக்கவும் ஊக்கப்படுத்த முடியும். எனவே மற்ற துறைகளைப் போலவே அரசியலிலும் பெண்கள் தலைமையானப் பாத்திரங்களை ஏற்று வெளிச்சத்திற்கு வர இடஒதுக்கீடு அவசியமான ஒன்றாக உள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா இதுவரை கடந்து வந்த பாதைகள் !
இந்தியாவில் முதன்முதலாக 1931-லேயே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழக்கப்பட வேண்டும் என்பதை இந்திய தேசிய இயக்கத்தை சேர்ந்த பெண் தலைவர்களான சரோஜினி நாயுடு மற்றும் பேகம் ஷா நவாஸ் உள்ளிட்டோர் கடிதம் மூலம் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமருக்கு அறிவுறுத்தினர்.
-
- பின்னர் சுதந்திரத்திற்கு பின்பு இந்திய அரசியலமைப்பின் 81-வது திருத்த மசோதாவாக ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா‘ லோக்சபா மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குமாறு 1996-ல் மக்களவையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மக்களவை கலைக்கப்பட்ட பிறகு மசோதா காலாவதியானது.
- 1998-இல், 12-வது மக்களவையில் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் இது ஆதரவைப் பெறத் தவறியதால் காலாவதியானது.
-
-
- 1999-இல் 13-வது மக்களவையில் NDA அரசாங்கத்தால் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 2003-இல் மீண்டும் இரண்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2004-இல் UPA அரசாங்கம் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தது. 2008-இல் இந்த மசோதாவானது மீண்டும் காலாவதியாகாமல் தடுக்கப்பட்டது. ஆனால் மக்களவை கலைக்கப்பட்டதும் இது காலாவதியானது.
- 2010-இல் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மக்களவையில் காலாவதியானது.
- இதைதொடர்ந்து வரலாற்று நிகழ்வாக 2023 செப்டம்பர் 19 அன்று மக்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
மசோதாவில் கூறப்பட்டுள்ள அம்சங்களும் கட்டுப்பாடுகளும்:
-
-
- மக்களவையில் இடஒதுக்கீடு– எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு வழங்கும் பிரிவு 330-ன் கீழ் 330A சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு இந்த மசோதா திருத்தப்படவுள்ளது. பெண்களுக்கு இவ்வாறு மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் ஒதுக்கப்படும் இடங்கள், வெவ்வேறு தொகுதிகளின் அடிப்படையில் சுழற்சி முறையில் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் எவ்வாறு சுழற்சி முறைகளில் தேர்தல் நடத்தப்பட்டு இடஒதுக்கீடு வழக்கப்படும் என்பது பற்றி எந்த விளக்கமும் அவர்களால் கொடுக்கப்படவில்லை.
- மாநில சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு – ஒவ்வொரு மாநில சட்டப் பேரவையிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்டப்பிரிவு 332A-ஐ இந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது.
- டெல்லி யூனியன் பிரதேசத்தில் – சட்டப்பிரிவு 239AA(2)(b) நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்திற்கும் பொருந்தும் என்ற வகையில் திருத்தப்பட்டுள்ளது.
- இந்த இடஒதுக்கீடு பெண்களுக்கு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த 33% ஒதுக்கீட்டிற்குள், SC மற்றும் ST பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. OBC பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை.
- மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு, குறைந்த பெண்கள் எண்ணிக்கையையே கொண்ட மாநிலங்களவைக்கு பொருந்தாது என்பது அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
- இதேபோன்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், தற்போது நடைமுறைக்கு வருவது கடினமான ஒன்றாகவே உள்ளது. பெண்களுக்கான எல்லை நிர்ணயப்பணி (புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பிரிவு 334 A-இன் படி) முடிந்தால் மட்டுமே இந்த மசோதாவை சட்டமாக்க முடியும். அதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு (census) பணியை துவங்க வேண்டியது அவசியம். எனவே இதை நடைமுறைப்படுத்த இன்னும் 2029 வரை கூட ஆகலாம் என்று தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.
-
ஆதாரங்கள்:
https://www.unwomen.org/en/what-we-do/leadership-and-political-participation/facts-and-figures
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1882226
https://journals.sagepub.com/doi/abs/10.1177/097152159900600109?journalCode=ijgb