உங்கள் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டப்படுகிறீர்களா ? இனி கவலையில்லை, இதை செய்யுங்கள் !
பெண்களின் அனுமதியின்றி பரவும் அந்தரங்க புகைப்படம், வீடியோக்களை இனி அவர்களே சுலபமாக நீக்கிகொள்ளலாம் !

ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு நாளும் அபரிவிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு பல நன்மைகளை தந்தாலும், பல AI தளங்கள் சமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பையும், தனியுரிமையையும் (Privacy) கடுமையாக பாதித்து வருவதையே பார்க்க முடிகிறது.
இதற்காகவே இயங்கும் சில இணையதளங்களில், புதிய AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆடைகளுடன் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ சில நொடிகளிலேயே ஆடைகளின்றி நிர்வாணமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த சர்ச்சைக்குரிய வலைதளங்களின் மூலம் தற்போது சமூக ஊடகங்களில் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் அவர்களுக்கு தெரியாமலே அதிக அளவில் பரவி வருவதைக் காண முடிகிறது.
மேலும் இந்த AI தொழில்நுட்பங்களைத் தவிர, பெண்களின் புகைப்படங்கள் போட்டோசாப் மூலம் மார்ப்பிங் செய்யப்பட்டும் பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன.
NCII-இன் விளக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்:
NCII என்ற வாக்கியத்தை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பார்க்க முடிகிறது. அப்படி பரவ காரணம் என்ன? பொதுவாக NCII (Non-Consensual Intimate Images) என்பது சம்பந்தப்பட்டவரின் முன் அனுமதில்லாமலே, அந்த நபரின் அந்தரங்க புகைப்படங்களையும், பாலியல் ரீதியான புகைப்படங்களையும் சட்டவிரோதமாக ஊடகங்களில் பரப்பப்படுவதைக் குறிக்க பயன்படுத்தும் ஒரு வாக்கியம். இதனை இந்திய அரசியலமைப்பின் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் பிரிவு 66E ஆழமாக விவரிக்கிறது.
அதன்படி, “ஒரு தனிநபரின் அனுமதியின்றி அவர்களை புகைப்படங்களாகப் எடுக்கவோ, ஊடகங்களிலோ அல்லது பொதுவெளியிலோ அவர்களின் புகைபடங்களைப் பரப்புவதையோ” இந்திய அரசியலமைப்பு தடை செய்கிறது.
எனினும், தங்களுடைய அந்தரங்க படங்கள் (NCII) சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்த பெருவாரியான பெண்கள், இதை சட்டரீதியாக அணுகுவதை விட, இந்தப் புகைப்படங்களை பரப்புவரின் (குற்றவாளிகளின்) பாலியல் அச்சுறுத்தலுக்கே பெரும்பாலும் ஆளாக்கப்படுகின்றனர். இதனை கடந்த மே 11 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு திட்ட அதிகாரியும், இந்தியாவில் என்சிஐஐ பரவல் குறித்த ஆய்வை மேற்கொண்டவருமான ஆசிரியர் வாசுதேவ் தேவதாசன் அவர்கள், பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் (NCII) பரப்பப்படுவது குறித்த சம்பவங்கள் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருவதை ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.
இந்த NCII புகைப்படம் மற்றும் வீடியோவை எவ்வாறு நீக்கலாம்? தீர்வுகளும் செயல்முறைகளும்:
பெண்களின் அந்தரங்கம் தொடர்பான இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடைய தாய் நிறுவனமான மெட்டா இந்தியாவில் StopNCII.org எனும் தளத்தை உருவாக்கி உள்ளது. இது இங்கிலாந்து நாட்டை தளமாகக் கொண்ட ”ரிவெஞ்ச் ஃபோர்ன் ஹெல்ப்லைன்” என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இதன்மூலம், பெண்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை StopNCII.org என்ற தளத்தில் பதிவு செய்து புகார் சமர்ப்பிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தப் பெண்ணின் புகைப்படமானது அகற்றப்படுவதால், இதனை பாதிக்கப்பட்ட பெண்களே எளிதில் கையாள முடிகிறது. இதற்கு புகாரளிக்கும் பெண்ணின் வயது 18-ஆக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் StopNCII.org, நாம் பதிவேற்றும் புகைப்படங்களை, இமேஜ் ஹாஷிங் எனப்படும் செயல்முறையைப் பயன்படுத்தி, புகைப்படத்திற்கு ஒரு ஹாஷ் மதிப்பை (டிஜிட்டல் கைரேகை) வழங்குகிறது. பொதுவாக ஒரு புகைப்படத்தின் ஒவ்வொரு நகல் படமும், ஒரே ஹாஷ் (Hash) மதிப்பையேக் கொண்டுள்ளன. எனவே இந்த ஹாஷை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பகிர்ந்து, புகாரின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள படங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுகிறது.
எவ்வாறு புகார் அளிக்கலாம்?
புகார் அளிக்க கீழ்கண்ட ஆறு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று StopNCII.org அறிவுறுத்தியுள்ளது.
- StopNCII.org தளத்தில் உங்கள் செல்போனில் இருந்து சம்பந்தப்பட்ட அந்தரங்க படம்/வீடியோவை தேர்ந்தெடுக்கவும்.
- StopNCII.org, உங்கள் செல்போனில் உள்ள படம்/வீடியோவிற்காக ஹாஷ் (Hash) என அழைக்கப்படும் டிஜிட்டல் கைரேகையை உருவாக்கும்.
- இதைத் தொடர்ந்து, உங்கள் புகார் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு, அதற்குரிய புகார் எண் உங்களுக்கு அளிக்கப்படும்.
- இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புகாரின் அடிப்படையில் அந்தப் புகைப்படத்தை அகற்றும்.
- StopNCII.org-ல் சம்பந்தப்பட்ட இணையதளங்களில் டிஜிட்டல் கைரேகை பொருத்தங்களை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளும்.
- எப்போது வேண்டுமானாலும் உங்கள் புகார் எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் புகாரின் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம் அல்லது அதை திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த செயல்முறைகளை கீழே உள்ள வீடியோவின் மூலமும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் ஒவ்வொரு பெண்களும், அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின்படி தங்களுடைய உடல் தொடர்பாக சுதந்திரமாக முடிவு எடுக்க அடிப்படை உரிமை உள்ளது என்பதையும், தன்னுடைய உடல் சார்ந்த ஆழமான புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் உடல் என்பது எப்போதும் வெறும் ஆபாச பண்டம் அல்ல..!!
ஆதாரங்கள்:
https://ccgdelhi.s3.ap-south-1.amazonaws.com/uploads/ccg-ncii-wp-16dec22-fn-332-427.pdf
https://about.fb.com/news/2021/12/strengthening-efforts-against-spread-of-ncii
https://www.bbc.com/tamil/global-60413194
http://www.internetlab.org.br/wp-content/uploads/2018/11/Fighting_the_Dissemination_of_Non.pdf