ரயிலில் குழந்தையுடன் ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண்| எங்கு நிகழ்ந்தது ?

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளுக்கு இடையே பச்சிளம் குழந்தையுடன் ஆபத்தான நிலையில் பயணிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்டகாலமாக வைரலாகி வருகிறது.
ஒரு கையால் மடியில் இருக்கும் குழந்தையை பிடித்துக் கொண்டும் , மற்றொரு கையால் கீழே விழாமல் இருக்க ஒரு பிடியை பிடித்து பயணிக்கும் காட்சிகள் அனைவரிடமும் உணர்வியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குழந்தையை வைத்து இருப்பவருக்கு அருகே இன்னொரு நபரும் நின்று கொண்டு இருப்பதை வீடியோவில் காண முடிந்தது. இந்த வீடியோ குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வருகிறது.
Pullingo army என்ற முகநூல் பக்கத்தில் கே.ஜி.எஃப் திரைப்பட பிஜிஎம் உடன் பதிவான வீடியோ 20 ஆயிரம் ஷேர்கள், 11 லட்சம் பார்வைகளை கடந்து தமிழில் வைரலாகி வருகிறது. இதேபோன்று, Bentchakal Rafik என்ற முகநூல் பக்கத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு பதிவான வீடியோ 90 ஆயிரம் ஷேர்களையும், 40 லட்சம் பார்வைகளையும் பெற்று பரவி வருகிறது.
இவ்வீடியோ குறித்து தேடிய பொழுது, 2017 மார்ச் மாதம் newsflare என்ற இணையதளத்தில் வைரலாகும் வீடியோ பதிவாகி இருந்தது. அதில், ” பீகார் மாநிலத்தின் சஹாப்ரா பகுதியில் 40 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலின் இரு பெட்டிகளுக்கு நடுவே ஒரு கையில் குழந்தையுடன் ஆபத்தான நிலையில் தாய் பயணிக்கும் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்டிகளுக்கு உள்ளே இருக்கும் பயணிகள் இடம் அளிக்க மறுத்த காரணத்தினால் இவ்வாறு நிகழ்ந்ததாக ” தெரிவித்து இருந்தனர்.
இதே வீடியோ குறித்து, 2017 மே மாதம் ஒருவர் விரிவாக பேசி இருந்த வீடியோ யூட்யூப் தளத்தில் பதிவாகி இருக்கிறது. ஆனால், அதில் எந்த இடம் என்பது குறித்து குறிப்பிடவில்லை. மாறாக, கமெண்ட்களில் ரயிலின் பபெட்டிகள் இணைப்பை பார்க்கையில் இந்தியாவைச் சேர்ந்தது போன்று இல்லை, பங்களாதேஷ் நாட்டினைச் சேர்ந்தது போன்று இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
பங்களாதேஷ் நாட்டின் ரயில்வே பயணம் குறித்து தேடிய பொழுது Indigo Traveler என்ற யூட்யூப் சேனலில், ரயிலின் மேற்கூரை, பெட்டிகளின் இணைப்புகள், இறுதி பெட்டிக்கு பின்னால் கூட மக்கள் கூட்டமாய் அமர்ந்து செல்லும் வீடியோ வெளியாகி இருப்பதை பார்க்க முடிந்தது. பண்டிகை காலங்களில் இதை விட அதிகமான கூட்டத்தை காண முடியும்.
இது குறித்த தேடலில், 2016-ம் ஆண்டு v.qq.com என்ற இணையதளத்தில் Wheat Entertainment V பெயருடன் சீன மொழியில் ” Real shot woman holding baby squatting at the train connection so that the evasion ticket is speechless! ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
டிக்கெட் எடுப்பதை தவிர்க்க இவ்வாறு செய்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அதிலும் எங்கு நிகழ்ந்தது எனக் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த பதிவு தற்போது கிடைத்த பதிவுகளுக்கு முந்தையது.
இந்தியாவில் வைரலாகும் வீடியோ எங்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது என முதன்மை செய்திகளில் வெளியாகியதாக தகவல்கள் கிடைக்கவில்லை. இந்தியாவில் நிகழ்ந்து இருந்தால் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் எந்த இடம் மற்றும் அதிகாரிகளின் விளக்கம் என பிரேக்கிங் நியூஸ் வெளியாகி இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால், அவ்வாறு எந்த பதிவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
குழந்தையுடன் ஒரு பெண் ரயிலில் ஆபத்தான நிலையில் மேற்கொண்ட பயணம் ஏழ்மையால் நிகழ்ந்ததா, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் நிகழ்ந்ததா என உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இவ்வாறான பயணங்கள் உயிர்க்கு ஆபத்து அளிக்கக்கூடியவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைரலாகும் வீடியோ குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதையும் இணைத்து பதிவிடச் செய்கிறோம்.
Links :
crime-accidents/woman-travels-dangerously-in-between-train-coupling-with-her-infant-in-hand
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.