“உலகின் 7வது பெரிய கட்சி அதிமுக” – சொன்னது யாரோ !

லக அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் பத்து கட்சிகளில் பாஜக முதல் இடத்திலும், அதிமுக 7வது இடத்திலும் இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த பட்டியலில் திமுக இடம்பெறவில்லை. இதனை அதிமுகவினர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும், விவாத நிகழ்ச்சிகளில் பேசியும் பெருமையடைந்தனர். ஊடகங்களும் இதனைச் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த பட்டியல் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது. இதனை வெளியிட்ட நிறுவனம் யார்? என்ற கேள்விகளுடன் இக்கட்டுரையைத் தொடங்குவோம். 

‘வேர்ல்டு அப்டேட்’ எனும் டிவிட்டர் பக்கம் உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்திலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியக் காங்கிரஸ் கட்சி நான்காம் இடத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 7வது இடத்திலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

Archive link  

Archive link

இத்தகவலை, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அதிமுகவினரால் டிவிட்டரில் பதிவிடப்பட்டது. மேலும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜவகர் அலி ஒரு விவாத நிகழ்ச்சியில் இதே தகவலைக் குறிப்பிட்டு பெருமையாக பேசியுள்ளார்.

Archive link  

ஆதாரம் விக்கிப்பீடியா :

இந்த ஆய்வு எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது, அதற்குப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் என்ன என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் வேர்ல்டு அப்டேட் பதிவில் குறிப்பிடவில்லை. அதன் இணையதளமும் 2022ல் தொடங்கப்பட்டது. அதை நிர்வகிப்பது யார், எங்குள்ளது என்ற எந்த தகவலும் இல்லை. 

யூடர்ன் ஆசிரியர் உள்பட பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த தகவல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது என வேர்ல்டு அப்டேட் கூறியது.

அதனைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் தேடியதில், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பாக கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகிலுள்ள முதல் 10 கட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள கட்சிகளின் வரிசைக்கும், வேர்ல்டு அப்டேட்டில் உள்ள வரிசைக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் வேர்ல்டு அப்டேட் குறிப்பிட்டுள்ள தரவுகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

வேர்ல்டு அப்டேட் தரவுகளை எங்கிருந்து எடுத்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா அந்த தரவுகளை எங்கிருந்து எடுத்தது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த பட்டியலின் கீழே ஆதாரம் என விக்கிப்பீடியாவைக் குறிப்பிட்டுள்ளது.

அடுத்ததாக வேர்ல்டு அப்டேட் வெளியிட்ட தரவின் ஆதாரம் குறித்துத் தேடினோம். பெரிய அரசியல் கட்சிகளின் பட்டியல் என விக்கிப்பீடியாவில் பதிவொன்று கிடைத்தது. அதில் உள்ள கட்சிகளின் தர வரிசையும், வேர்ல்டு அப்டேட் வெளியிட்ட தர வரிசையும் ஒன்றாக இருப்பதைக் காண முடிகிறது. விக்கிபீடியாவின் அப்பட்டியலை ஆய்வு செய்கையில், அது எந்த ஒரு கால அளவையும் அடிப்படையாகக் கொண்டு தரவு சேகரிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. 

முதலில் உள்ள பாஜகவிற்கு 2019ல் வெளியான ஒரு செய்தியின் தரவுகளையும், இரண்டாவது இடத்தில் உள்ள சீன கம்யூனிச கட்சிக்கு 2022ம் ஆண்டு வெளியான செய்தியின் தரவுகளையும் அடிப்படையாக எடுத்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு கட்சிகளுக்கும் வெவ்வேறு ஆண்டுகளைக் கொண்டே உறுப்பினர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வாறே அதிமுக-விற்கு 2018ம் ஆண்டு ‘தி இந்து’வில் வெளியான செய்தியின் அடிப்படையில் 1.1 கோடி உறுப்பினர்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிமுகவில் யாரும் இணையவோ, விலகவோ இல்லையா? 2018ம் ஆண்டுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் நடந்து பல முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இது நிச்சயம் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த உறுப்பினர் எண்ணிக்கை குறித்தான கேள்வி அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.

உறுப்பினர்களின் எண்ணிக்கையை யார் தெரிவிப்பது ? 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களைப் பெரிய கட்சியாக வெளிக்காட்ட தங்களிடம் இவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர் எனக் காட்டிக்கொள்வது வழக்கமான ஒன்றே. பாஜக இன்றளவிலும் செல்போனில் மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தங்கள் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கையைச் செய்து வருகிறது. இந்நிலையில் பாஜகவில் இத்தனை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கும் எண்ணிக்கை எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பது கேள்வியே.

இப்படி அரசியல் கட்சிகள் தங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அவர்களே சொல்லி வருவதுதான் வழக்கமாக உள்ளது. அப்படி வெளியான செய்திகளைக் கொண்டுதான் விக்கிபீடியாவும் கட்சிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா என்பது முழுக்க முழுக்க அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை வெளியிடும் தளம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள தகவல்களை எளிதாக எடிட் செய்தும் கொள்ள முடியும். 

ஒரு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளே விக்கிப்பீடியாவின் தரவரிசையில் உள்ளது. ஆனால், அதில் திமுக இடம்பெறவில்லை. தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி ஒரு லட்ச உறுப்பினர்களைக் கூடக் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வியுடன் திமுக உறுப்பினர் எண்ணிக்கை குறித்துத் தேடினோம். 

அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றக் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை போலவே இதிலும் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை உள்ளது என்பதும் கேள்விக்குறியே. இருப்பினும் இது பற்றி விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்படவில்லை.

எந்த ஒரு அடிப்படை ஆய்வும் இன்றி வெளியான தகவலை ஊடகங்களும் உண்மை என தவறான செய்தியை வெளியிடுகின்றன. இதுகுறித்து முதலில் பதிவிட்ட வேர்ல்டு அப்டேட் டிவிட்டரிலிருந்து தனது தவறான பதிவை நீக்கியுள்ளது. ஆனால், மறுப்பு செய்தி எதுவும் பதிவிடவில்லை. ஒரு ஆய்வு முடிவு வெளியாகிறது எனில் அதன் நம்பகத் தன்மை என்ன? அதனை வெளியிட்ட நிறுவனம் எது? என எந்த அடிப்படை கேள்வியுமின்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதனை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader