இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 126வது இடத்தில் உள்ள இந்தியா !

கடந்த 2012 முதல் உலக மகிழ்ச்சி அறிக்கை ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையின்படி, பின்லாந்து ஏழாவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

‘உலக மகிழ்ச்சி அறிக்கை’ எவ்வாறு கணக்கெடுக்கப்படுகிறது ?

உலகளாவியா மகிழ்ச்சி அடிப்படையிலான தரவுகள், மக்களிடமிருந்து கணக்கெடுக்கப்பட்டு, அந்த தரவுகளின் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இந்த அறிக்கையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய ஆறு முக்கிய காரணிகளும் மகிழ்ச்சியை அளவிடும் காரணிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

இதில் வருமானம், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும் இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவு மற்றும் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. மேலும் இதில் 0  என்பது மோசமான நிலையையும், 10 என்பது சிறந்த நிலையையும் குறிக்கும் வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்த அறிக்கையின் முக்கிய குழுக்களாக Gallup, Oxford Wellbeing Research Centre, UN Sustainable Development Solutions Network மற்றும் WHR இன் ஆசிரியர் குழு ஆகியவை உள்ளன.

இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!

 உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இல் இந்தியா மொத்தமுள்ள 143 நாடுகளில் 126 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா (60), நேபாளம் (93), பாகிஸ்தான் (108), மியான்மர் (118) போன்ற அண்டை நாடுகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. இதன் மூலம் இந்தியா எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இதில் இலங்கை 128 வது இடத்திலும், வங்காள தேசம் 129 வது இடத்திலும் உள்ளன.

இதே போன்று இளைஞர்கள் (Younger Age Group Below 30) மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 127 வது இடத்திலும், முதியவர்கள் (Age 60 and Above) மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 121 வது இடத்திலும் உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இளைஞர்களை விட முதுமையானவர்களே மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது தெளிவாகிறது. மேலும் வயது வாரியாக இந்த தரவுகளை ஆய்வு செய்ததில், இந்தியாவில் குறைந்த நடுத்தர வயதுடையவர்களே (Lower Middle Age Groups) குறைந்த மகிழ்ச்சியுடையவர்களாக (Least Happy) உள்ளனர் என்பதையும் இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் முறையான கல்வி பெறாதவர்கள் மற்றும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் ஆகியோருடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவில் இடைநிலை அல்லது உயர்கல்வி பெற்ற முதியோர்களும், உயர்ந்த சாதியைச் சேர்ந்த முதியவர்களுமே உயர்ந்த வாழ்க்கைத் திருப்தியைப் (Life Satisfaction) பெற்றவர்களாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான்:

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை முதல் பத்து இடங்களுக்குள் உள்ள மற்ற நாடுகள் ஆகும்.

2020 இல் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தொடர்ந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தப் பட்டியலில் கடைசி இடத்தையே தக்கவைத்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக, அமெரிக்காவும், ஜெர்மனியும் முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இருந்து வெளியேறி, முறையே 23 மற்றும் 24 வது இடத்திற்கு இறங்கியுள்ளன.

மேலும் பெரும்பாலும் அதிக மகிழ்ச்சியான நாடுகளில் பட்டியலில், மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகள் எதுவும் இடம்பெறுவதில்லை. 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளன..!

 ஆதாரங்கள்:

World Happiness Report 2024

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader