திருடியதாகக் கூறி கண்ணைக் கட்டி கொடூரமாக தாக்கும் வைரல் வீடியோ| நடந்தது என்ன ?

பணத்தைத் திருடியதாகக் கூறி இளைஞர் ஒருவரின் கண்களை துண்டால் கட்டி கொடூரமாக தாக்கும் 1.51 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தைப் பெற்று வருகிறது.

Advertisement

” இளைஞர் ஒருவரின் கண்ணை துண்டால் கட்டி கைகளை மரத்தில் வைத்து பிடித்துக் கொண்டு பிரம்பால் அடிக்க வலியால் கதறி அழுதாலும் அந்த இளைஞரை அடிப்பதை நிறுத்தவில்லை. எடுப்பியா, எடுப்பியா எனக் கேட்பதற்கு எடுக்க மாட்டண்ணா எடுக்க மாட்டண்ணா என நீண்ட நேரத்திற்கு அடிகளை வாங்கிக் கொண்டே கதறுகிறார். ஒருகட்டத்தில் அடிகளை தாங்க முடியாமல் மயங்கிய நிலையில் இருக்கும் அவரின் மீது அமர்ந்து கொண்டு மீண்டும் அடிக்கவே செய்யும் காட்சிகள் ” அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி மேலத் தெரு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல்(22) மணல் அள்ளும் கூலி வேலை செய்து வருகிறார். ஜனவரி 31-ம் தேதி லட்சுமணன் என்பவரது வீட்டில் 30 ஆயிரம் பணத்தை காணவில்லை, அதை ராகுல் எடுத்திருக்கலாம் என சந்தேகித்து அவருடைய நண்பர்கள் சிலர் ராகுலை தனியாக அழைத்து சென்று பணத்தை கேட்டு கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தன் மீது திருட்டு பட்டம் சுமத்தியதாலும், தன்னை அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய காரணத்தினாலும் அவமானத்தில் ராகுல் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MookNayak (@koottathil_oruvannmemes)

Advertisement
ஆனால், பாதிக்கப்பட்ட நபர் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், ” மணல் பணம் கேட்டதற்கு சாதிப் பெயரைக் கூறி தெருவில் விட்டு அடித்து, மீண்டும் காரில் ஏற்றி தோப்புக்குள் கொண்டு சென்று கண்ணைக் கட்டி அடித்தனர். மயக்கம் வரும் அளவிற்கு அடித்து இறுதியில் கோவிலில் கட்டி வைத்து விட்டு சென்றனர். அம்மாப்பேட்டை போலீஸ் காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறினோம். அடிவாங்கிய வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி பரப்பியதை தாங்க முடியாமல் எலி மருந்தை குடித்ததாக ” தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து யூடர்ன் தரப்பில் அம்மாப்பேட்டை காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் ஜி.ஆனந்த் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” இந்த வழக்கில் ரூ.30,000 பணத்தை திருடியதாகக் கூறி சம்பந்தப்பட்ட நபரை (ராகுல்) அவரின் நண்பர்கள், உறவினர்களும் முதலில் விசாரித்து இருக்கிறார்கள். அவர் முறையாக பதில் சொல்லவில்லை, பணத்தை திருப்பி தர மறுத்து இருக்கிறார். அப்போது, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மிரட்டினால் கொடுத்து விடுவார் என்று அவரின் உதவியை நாடி உள்ளனர்.  அவர் தான் ராகுலை கொடூரமாக தாக்கியது என்று எங்கள் விசாரணையில் தெரிய வந்தது.
முதலில் அவர் 6 பேர் மீது புகார் அளித்து இருந்தார். பின்னர், விசாரணையின் அடிப்டையில் மேலும் ஒருவரைச் சேர்த்து மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்து உள்ளோம். அவரை அடித்த நபர் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது வன்கொடுமை வழக்காக பதிவு செய்து இருக்கிறோம். அடித்த சிலரில் ராகுலின் நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள், அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதுஇல்லாமல், அவரை அடித்ததற்கு அழைத்து வரப்பட்ட ஆதிக்கச் சாதியை சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரும், இன்று 3 பேரும் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.
எது எப்படியாக இருந்தாலும், ஒருவர் பணத்தை திருடியவராக இருந்தாலுமே கூட அவரை காவல்துறையிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டுமே தவிர சட்டத்தை கையில் எடுத்து தாக்குவது மிகத் தவறானது, அதிகாரத்தை கையில் எடுப்பது கண்டிக்கத்தக்கது. அப்படி அடிப்பவர்கள் மீது வழக்கு பாயும் வாய்ப்புண்டு. அதும் சாதிரீதியிலான தாக்குதலுக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும்.
திருடியதாகக் கூறி ஒருவரை இரக்கமின்றி அடித்துக் கொடுமை செய்வது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உணவை திருடியதாகக் கூறி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவரை பலரும் இணைந்து தாக்கியதில் படுகாயமடைந்த அந்த நபர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button