This article is from Jan 09, 2019

2018-ல் You Turn கடந்து வந்த டாப் 10 புரளிகள் !

மக்களுக்கு புரளிகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் பணியை YOUTURN முடிந்தவரை செயலாற்றி வருகிறது. 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே YOUTURN-னின் பணியை பற்றி விவரிக்கும் பேட்டிகள் முன்னணி ஊடகங்களிலும் வெளியாகின. இது நம் பணிக்கு உற்சாகமூட்டும்படி அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் YOUTURN தெளிவுப்படுத்திய முக்கிய புரளிகளின் டாப் 10  வரிசையைப் பார்ப்போம்.

  1. காமராஜர் மரணம் :

1975-ல் ஐயா காமராஜர் இறந்த பொழுது முன்னாள் முதலமைச்சருக்கு எல்லாம் மெரினாவில் இடமளிக்க முடியாது என கருணாநிதி கூறியதாக 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் இறந்த தருணத்தில் செய்திகள் புயல் வேகத்தில் பரவின.

ஆனால், காமராஜரின் ஈமசடங்கிற்கு முழு அரசு மரியாதை அளித்தது கலைஞரே !. கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் அருகே காமராஜரின் உடல் புதைக்கப்படவில்லை, தீயிடப்பட்டது. கருணாநிதி பற்றிய புரளியை தெளிவுப்படுத்திய போது பார்வையாளர்களின் அதிக எண்ணிக்கையால் YOUTURN தளமே சில நிமிடங்கள் ஸ்தம்பித்து இருந்தது.

முழுமையாக அறிய : காமராஜர் உடலை மெரீனாவில் புதைக்க மறுத்தாரா கருணாநிதி ?

  1. குப்பை வண்டியாகிய ரோல்ஸ் ராய்ஸ் :

1912-ல் இந்திய மகாராஜாக்களில் ஒருவரான ஹைதராபாத் நிஜாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விலைக்கு வாங்கி நகரில் குப்பை அள்ளும் வாகனமாக பயன்படுத்தி உள்ளார்.

ரோஸ் ராய்ஸ் பற்றிய இந்திய அளவில் பல மொழிகளில் ஹைதராபாத் நிஜாம், ராஜஸ்தான் மன்னர் என பல கதைகளாக பரவி இருந்தன. ஆனால், இக்கதையுடன் இணைக்கப்பட்ட துடைப்பம் இருந்த படம் FORD நிறுவனத்தின் காராகும். மேலும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை YOUTURN தொடர்பு கொண்ட போது அக்கதையை மறுத்துள்ளனர்.

முழுமையாக அறிய : குப்பை வண்டியாகிய ரோல்ஸ் ராய்ஸ்.. ஆதாரம் உண்டா ?

  1. 1 ரூபாய் 13 டாலருக்கு சமம் :

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்தது.

1947-க்கு பிறகே டாலருடன் இந்திய ரூபாய் நேரடி பரிமாற்றம் இருந்து உள்ளது. அதற்கு முன்பாக பிரிட்டன் பவுண்ட் மதிப்பை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. டாலருக்கு இணையான இந்தியா ரூபாய் பற்றிய இச்செய்தி பல ஆண்டுகளாக நம்பப்பட்டவை.

முழுமையாக அறிய : 1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்ததா ?

  1. தமிழக அணைகள் :

படிக்காத மேதை ஐயா காமராஜரின் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் தடுப்பணைகள் ஏதும் கட்டப்படவில்லை.

தமிழகத்தில் அணைகள் கட்டப்படவில்லை என்ற பதிவுகள் பெரும்பான்மை மக்களால் அதிகம் பகிரப்பட்டது. ஆனால், அது உண்மை அல்ல. தமிழகத்தில் காமராஜரின் ஆட்சிக்கு பிறகு 50 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட அணைகள் நீர்பாசன வசதிக்கும், நீர் மின் திட்டத்திற்காகவும் கட்டப்பட்டன.

முழுமையாக அறிய : காமராஜரின் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அணை கட்டப்படவில்லையா ?

  1. நெதர்லாந்து 5G சோதனை :

நெதர்லாந்து நாட்டில் 5G நெட்வொர்க் சோதனையின் போது பறவைகள் கொத்துக் கொத்தாய் இறந்து உள்ளன.

நெதர்லாந்து நாட்டில் பறவைகள் கூட்டமாய் மர்மமான முறையில் இருந்தன. இதற்கான விசாரணைகள் நடைபெறுகிறது. பறவைகள் இறந்த Hauge நகரில் 5G சோதனை நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் மட்டுமே நடைபெற்றன. பறவைகள் கூட்டமாய் இறப்பது இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது.

முழுமையாக அறிய : 5G சோதனையால் பறவைகள் இறந்ததா ?| Fact check

  1. தஞ்சை கோயிலில் சிலைகள் உடைப்பு :

தொல்லியல் துறை பராமரிப்பு என்ற பெயரில் இராசராசச் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலின் சிறு குறு சிலைகள் மொத்தமாய் தகர்த்து அகற்றப்படும் பேரவலம் !

தஞ்சை கோயிலில் சிலைகள் உடைக்கப்படுகிறதா என அறிய youturn குழுவைச் சேர்ந்தவர் நேரில் சென்று கள ஆய்வு நடத்தியதில் சிலைகள் உடைக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. பராமரிப்பு பணிக்காக நடந்ததை தவறாக புரிந்துக் கொண்டனர்.

முழுமையாக அறிய :  தஞ்சைப் பெரிய கோவிலின் பராமரிப்பு பணி தொடர்பான சர்ச்சை..!

  1. மோடி எண்ணெய் கடன் பத்திரம் :

காங்கிரஸ் ஆட்சியில் விட்டு சென்ற 1.4 லட்சம் கோடி எண்ணெய் பத்திரம் கடனை வட்டியுடன் நரேந்திர மோடி அரசு அடைத்து உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க ஆட்சியாளர்களால் விடப்பட்ட தவறான தகவல். தற்போதைய அரசு ஆட்சி வரையில் மொத்த எண்ணெய் ஒப்பந்த பத்திரத்தின் மதிப்பு 1.3 லட்சம் கோடி. அதில் எந்த மாற்றமும் இல்லை. 2014-2018-ஆம் ஆண்டில் 40,500 கோடி வட்டித் தொகையைத் தான் செலுத்தி உள்ளனர். வெறும் 3,500 கோடி அசல் தொகை மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

முழுமையாக அறிய : இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரான்: மோடியால் நிகழ்ந்ததா ?

  1. ஜெர்மன் கார் போராட்டம் :

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்த்துவது போல் ஜெர்மனியில் பெட்ரோல் விலை உயர்த்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் சாலைகளில் கார்களை நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.

2012-ல் சீனாவில் தொடர் விடுமுறை காரணமாக நிகழ்ந்த போக்குவரத்து நெரிசலை ஜெர்மன் நாட்டில் நடைபெற்றது என தவறான செய்தியை பரப்பினர். ஜெர்மன் எனக் கூறிய சீனாவின் போக்குவரத்து நெரிசல் உலகவில் பிரபலமான புரளி.

முழுமையாக அறிய : ஜெர்மனி சாலைகளில் கார்களை நிறுத்தி பிரம்மாண்ட போராட்டமா ?

  1. கலப்பட பால் :

ஒருவகையான கெமிக்கல் உடன் தண்ணீரை கலந்து கலப்பட பால் தயாரிக்கின்றனர். இணையத்தில் அனைத்து மொழியிலும் ஆக்கிரமித்த வைரல் வீடியோக்களில் இதுவும் ஒன்று.

தண்ணீருடன் Dettol, பினாயில் போன்றவற்றை கலக்கும் பொழுது பால் நிறத்தில் வருவதை சோதனையின் மூலம் youturn செய்து காட்டியது.

முழுமையாக அறிய : இப்படி தான் செயற்கை பால் தயாரிக்கப்படுகிறதா?

  1. இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் :

முதன் முறையாக அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய்க்கு ஈரான் கச்சா எண்ணெய் தர சம்மதம் தெரிவித்து விட்டது. இறங்கி அடிக்கும் மோடி.

அணு ஆயுத சோதனை காரணமாக ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை இருப்பதால் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய 2012-ம் ஆண்டிலேயே முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க டாலரை குறைத்து இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்த மோடி மேற்கொண்ட புதிய யுக்தி அல்ல. பொருளாதார தடை காரணமாக உண்டாகிய ஒப்பந்தம். இந்திய ஏற்றுமதி செய்யும் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஈரான் 45 சதவீதம் இந்தியா ரூபாய் அளிக்கப்படும் என அந்நாட்டின் தூதர் தெரிவித்து இருந்தார்.

முழுமையாக அறிய : பிஜேபி ஆட்சியில் 2 லட்சம் கோடி எண்ணெய் ஒப்பந்த கடன் செலுத்தப்பட்டதா ?

2018-ல் அதிகம் பேசப்பட்ட புரளிகள் மற்றும் பல ஆண்டுகளாக பரவிய அறியப்படாத தவறான தகவல்களின் தொகுப்பே 2018-ன் டாப் 10 புரளிகள்.

புரளிகளை களையெடுத்தல் தொடர்ந்தாலும் உண்மை கண்டறிதல் என்ற விதை மக்கள் மனதில் நம்மால் விதைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியே !

Please complete the required fields.




Back to top button
loader