Youturn எந்த கட்சி என்று ஒப்புதல் வாக்குமூலம்..!

youturn யார் ? எந்த கட்சி ?
பக்தர்களே இது உங்களுக்கான திறந்த மடல். இதை நீங்கள் படித்து உங்கள் வீட்டில் படமாக மாட்டி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை வரலாறு.
இந்த பக்கம் தொடங்கிய போது நாங்கள் ஏதோ புரளிகளை வெளிப்படுத்தப் போகிறோம். இது தகவல் தளமாக மட்டும் இருக்கப் போகிறது என்று அப்பாவியாக தொடங்கினோம். அதற்குபின் இதில் அரசியல் கட்சிகளின் கை இருக்கிறது என்று ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதன்பின் சில மாதங்களில் இது ஒரு பெரிய வர்த்தகம், இதில் திட்டமிட்டே பொய்யை பரப்பி பிடித்தவர்களை உயர்ந்தவர்களா காட்டவும், பிடிக்காதவர்களை கேவலமாக சித்தரிக்கவும், அதைப் பயன்படுத்துகிறார்கள். இங்கு பல கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக புரளியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டறிந்தோம்.
அதில் நீங்கள் மட்டும் தனித்து தெரிந்தீர்கள், அதற்கு இரண்டு காரணம். ஒன்று அரசியல் லாபத்திற்காக பிற கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருவது உண்மையெனினும் நீங்கள் ஒருபடி மேல் சென்று மதரீதியான வெறுப்பை உருவாக்குகிறீர்கள். அதன் மூலமாக லாபம் அடைய முழு மூச்சாக இருக்கின்றீர்கள். இரண்டு உங்களுடைய தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் வலிமையானது. உங்களால் பக்கங்களை முடக்கவும் முடியும், திடீரென ஒரு பக்கத்திற்கு பல்லாயிர லைக்குகளை குவிக்கவும் முடியும். ஒரு விஷத்தை ட்ரென்ட் செய்யவும் முடியும். அத்தனை வலிமையான ஆட்கள் நீங்கள்.
நாங்கள் அத்தனை கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வரும் புரளிகளை புரளிகள் என சொல்லி இருக்கிறோம். பல Fake Id-களை வைத்து திட்டிப் பார்த்தீர்கள். கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்தீர்கள். ஒரு பருப்பும் வேகவில்லை என்றவுடன் U Know What என்று ஆங்கிலத்தில் சரளமாக பேசும் கூட்டத்தை வைத்து கம்பு சுத்தினீர்கள் அதுவும் வேலைக்காகவில்லை. எல்லா அவதூறுக்கும் மிரட்டலுக்கும், வாதத்திற்கும், கூச்சலுக்கும் அசராததால் sarcastic மீம் என்ற மொக்க கத்தியை தூக்கிக் கொண்டு சுத்தி கொண்டிருக்கின்றீர்கள். அதற்கெல்லாம் வாழ்த்துக்கள்..!
அனைவரும் உங்களை கேவலமாக திட்டியும், கடுமையாக கேலி செய்தும் வருகிறார்கள். நாங்கள் உங்களை கண்ணியமாகவே நடத்தி இருக்கிறோம். கடும் கேலி அல்லது மோசமான வார்த்தையில் விமர்சனம் செய்வது இல்லை. ஏனென்றால் எங்களிடம் பெரிதிலும் பெரிய ஆயுதமாக உண்மை இருக்கிறது.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா..! உங்களை குறிப்பிட்டு தாக்கும் நோக்கத்தில் ஒரு நாளும் நாங்கள் எந்த முயற்சியும் எடுத்ததில்லை. Wanted ஆக வந்து வண்டியில் ஏறுகிறீர்கள். பிறகு கொய்யோ மொய்யோ என்று கத்துகிறீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களை பற்றிய புரளியை வெளிபடுத்தும் போதும் நீங்கள் standard ஆக செய்கிற விஷயம் என்ன தெரியுமா ? இதைப் போடுகிறாயே இந்த கிறிஸ்தவனை பார், இந்த முஸ்லீமை பார், நாம் தமிழர்களை பார், திராவிடர்களை பார், பெரியாரிஸ்டுகளை பார், கம்யூனிஸ்டுகளை பார் என கதருவீர்கள். ஆனால், ஒரு நாளும் பொய் சொல்லி விட்டோம் எங்களை திருத்தி கொள்கிறோம் பார் என்று சொன்னதில்லை.
நாங்கள் பல புரளிகள் உங்களுக்கு எதிராக இருந்தவைகளை புரளி என்று வெளிப்படுத்தி இருக்கிறோம். அதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இருந்தும் எங்களை பிராண்ட் செய்து யாருடைய ஆதரவாளரோ என்று பொது மக்களை நம்ப வைத்து விட்டால் உங்கள் புரளி பிழைப்பு சிறப்பாக இருக்கும் என்ற பகல் கனவில் கடுமையாக உழைக்கின்றீர்கள். பாவம் உங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே யார் என்று சொல்லி விடுகிறோம்.
கிறிஸ்தவ பாதிரியார் என்று ஒரு ஆபாச வீடியோவை நீங்கள் பரப்பிய போது அதை பொய் என்று நிரூப்பித்தோம். அதற்கு நீங்கள் எங்களுக்கு கொடுத்த பட்டம் கிறித்தவக் கைக்கூலி. முஸ்லிம் யூனியன் லீக் கட்சி கொடியை பாகிஸ்தான் கொடி என்று அதை இங்கு காட்டுக்கிறார்கள் என்று நீங்கள் விட்ட கதைக்கு நாங்கள் வைத்த கரும்புள்ளிக்கு நீங்கள் அளித்த அன்பு பரிசு இஸ்லாமிய தீவிரவாதி என்ற பெயர். இப்படி சீமானின் தம்பிகள், உடன் பிறப்புகள், திருமுருகன் காந்தியின் பிரிவினைவாதிகள், கம்யூனிஸ்ட் நக்ஸ்லைட்டுகள் என்று நீங்கள் கொடுத்த பல பட்டத்தில் எது நாங்கள் என்ற குழப்பம் எங்களுக்கே வந்து விட்டதால் கழுத எதுக்கு எதையும் விட எல்லாத்தையும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், எங்கள் பக்க ரசிகர்கள் எங்களை அன்போடு Anti Indian என்று அன்போடு அழைக்கிறார்கள். அதை மட்டும் எங்களால் ஏற்க முடியவில்லை. இந்தியாவில் இரண்டு அழகிய தத்துவம் உண்டு, ஒன்று Democracy, மற்றொன்றுSecularism. அதன்படி பார்த்தால் ஜனநாயகம் அளித்த உரிமையின்படி நம்மை ஆளுபவர்களை கேள்வி கேட்பது, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவது மிகச்சரி. Secularism இதன்படி அனைத்து மதங்களையும் ஏற்கிறோம், மதங்களே இல்லை என்பவர்களையும் சேர்த்து என்கிறது இந்திய சட்டம். அதையும் நாங்கள் அப்படியே ஏற்கிறோம். ஆக, democratic , secular ஆகிய நாங்கள்தான் இந்தியர்கள்..! இதை அனுதினமும் எதிர்க்கும் பக்கங்கள் ஆகிய நீங்கள்தான் Anti Indian-யர்கள்.
இத்தனை நாள் எங்களது கட்டுரை Blunt ஆக இருக்கும். புரளி என்றால் புரளி , பொய் என்றால் பொய் அவ்வளவுதான். இதை spicy ஆக இந்த கட்டுரை போல் எழுதினால் காரம் உச்சி மண்டையை கிறுகிறுக்கும் அல்லவா ?
நாங்கள் இலகுவாக நகர நினைக்கிறோம், நீங்கள் இல்லை நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம் எனத் துடிக்கிறீர்கள். அவரவர் எடுக்கும் முடிவு எங்களுக்கு எப்போதும் சாதகமே…! மோதத்தான் வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள். வேலியில் போவதை எதுக்கு வேட்டிக்குள் விட்டுக்கனும் பாஸ். வாழ்த்துக்கள்..!